Home » திருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு

திருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு

Read and Listen to Thiruviviliam – Ecumenical Translation of Holy Bible in Tamil Language. If you want to read and listen to a particular chapter, check Old Testament and New Testament or select a book below.

முன்னுரை

விவிலியச் சங்கங்களின் இணையமும் (United Bible Societies) வத்திக்கான் ஒன்றிப்புச் செயலகமும் (Secretariate for Christian Unity) இணைந்து பொது மொழிபெயர்ப்பு செய்யும் கோட்பாட்டை 1968-இல் வெளியிட்டன. அதன் அடிப்படையில் 1972-ஆம் ஆண்டு தமிழ் விவிலியப் பொது மொழிபெயர்ப்புப் பணி தொடங்கியது. உரோமைக் கத்தோலிக்கத் திருச்சபை சார்பில் தமிழ்நாடு விவிலிய ஆணைக்குழுவினரும் ஏனையத் திருச்சபைகளின் சார்பில் விவிலியச் சங்கங்களின் பிரதிநிதிகளும் இப்பணியைச் செய்தனர். பல்வேறு திருச்சபை மரபுகளைச் சேர்ந்த தமிழ், எபிரேய, கிரேக்க மொழிகளில் புலமை பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் பங்குகொண்டார்கள்.

பழைய ஏற்பாடு, எபிரேய பாடமான ‘பிபிலியா எபிராயிக்கா’ நூலையும் (Biblia Hebraica, Stuttgart Edition – Masoretic Text) புதிய ஏற்பாடு, விவிலியச் சங்கங்களின் இணையத்தின் வெளியீடான கிரேக்க புதிய ஏற்பாட்டு நூலின் மூன்றாம் பதிப்பையும் (The Greek New Testament, UBS, Third Edition) சார்ந்து மொழிபெயர்க்கப்பட்டன.

தொன்மையும் தரமுமான மூலபாடங்களையே அடிப்படையாகக் கொண்டாலும், மரபு மொழிபெயர்ப்புகளுக்கு மதிப்புத் தரும் வகையில் சில இடங்களில் காலத்தால் பின்னைய பாடங்களும் இடம்பெறுகின்றன. அவை சதுர அடைப்புக்குறிக்குள் [………] இடப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் மொழிபெயர்க்கத்தக்க சொற்றொடர்கள் வருமிடத்து, மாற்று மொழிபெயர்ப்புகள் அடிக்குறிப்புகளில் தரப்பட்டுள்ளன. மூலச்சொல்லின் பொருள் தெளிவில்லாதபொழுது, பழங்கால மொழிபெயர்ப்புகள், இணைமொழிச் சொற்கள் ஆகியவற்றின் உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அவ்விடத்து மூலச்சொல்லின் பொருள் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது. நீண்ட ஆய்வுக் குறிப்புகளும் விவாதத்துக்குரிய கொள்கை விளக்கங்களும் அடிக்குறிப்புகளில் தவிர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நூலிலும் முன்னுரை, துணைத் தலைப்புக்கள், இணை வசனங்கள் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவை நூல்களைப் புரிந்துகொள்ள உதவியாக அமையும்.

இம்மொழிபெயர்ப்பில் இயல்பான, தரமான, எளிய தமிழ்மொழிநடை இடம்பெற்றுள்ளது. தெளிபொருள் மொழிபெயர்ப்பு முறைக்கு (Dynamic Equivalence) முன்னுரிமை வழங்கப்பெற்றுள்ளது. வழக்கற்ற சொற்களும், திசைச் சொற்களும் இயன்றவரை தவிர்க்கப்பட்டுள்ளன. கவிதைப்பகுதிகள் முடிந்தவரை கவிதை நடையில் அமைக்கப்பெற்றாலும், பொருள்தெளிவே இன்றியமையாததாகக் கருதப்பட்டுள்ளது.

கலைச் சொற்களும் பெயர்ச்சொற்களும் நூல் தலைப்புகளும் பல்வேறு கலந்துரையாடல்களுக்குப்பின் மேல்மட்டக்குழுவின் (High Power Committee) ஒப்புதல் பெற்றுக் கையாளப்பட்டுள்ளன. பெயர்ச்சொற்கள் அனைத்தும் ஒலி பெயர்ப்பே (Transliteration) செய்யப்பட்டன. அவை தமிழில் ஒலிப்பதற்கு எளிமையான, இயல்பான இறுதி வடிவம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பழைய ஏற்பாட்டுப் பெயர்கள் புதிய ஏற்பாட்டில் வரும்போது, பழைய ஏற்பாட்டு ஒலிவடிவத்தையே பெறுகின்றன (பிலயாம்/ பாலாம் בִּלְעָם – Βαλαὰμ – பிலயாம்). தற்கால வழக்கிலுள்ள பெயர்கள் விவிலியத்தில் வேற்றுப் பெயர்களாக இருந்தாலும் அவை தற்கால வடிவிலேயே கையாளப்பட்டுள்ளன (மிஸ்ராயிம் – מִצְרָ֫יִם – எகிப்து). அவ்வாறே நீட்டலளவைகளுக்கும் நிறுத்தலளவைகளுக்கும் பல இடங்களில் தற்கால வழக்கிலுள்ள மெட்ரிக் இணை வழங்கப்பட்டுள்ளது.

மரபு காரணமாக முதல் ஐந்து நூல்கள் கிரேக்கவழி தலைப்புகளையும், மற்ற எல்லா நூல்களும் எபிரேயவழி தலைப்புகளையும் கொண்டுள்ளன. அனைத்து நூல்களின் வசன எண்கள் உலகப் பொது வழக்கு மொழிபெயர்ப்புகளின் (Standard Versions) அடிப்படையில் அமைந்துள்ளன.

தமிழின் சிறப்புப் பண்பான மரியாதைப் பன்மையை (Honorific Plural) மனதிற்கொண்டு விவிலியத்தில் பெரும்பாலோர்க்கும் மரியாதைப்பன்மை வழங்கப்படுகிறது. நோயுற்றோர், உடல் ஊனமுற்றோர், செல்வாக்கற்ற பணியாளர், பெண்டிர் ஆகியோரை மதிப்பின்றி வழங்கும் முறை தவிர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குருடன் என்னும் சொல் பார்வையற்றவர் என்று மாற்றம் பெறுவதோடு, மரியாதைப் பன்மையும் பெறுகிறது. இறைத்திட்டத்திற்கு எதிரானவரைக் குறிப்பிடும்போதும், பழித்துரைக்கும் சூழலிலும், நெருங்கிய நட்புறவை வெளிப்படுத்தும்போதும் மரியாதைப்பன்மை தவிர்க்கப்படுகிறது.

இருபாலார்க்கும் பொதுவான கருத்துக்கள் மூலநூலில் ஆண்பால் விகுதி பெற்று வந்தாலும் இருபாலார்க்கும் பொருந்தும் முறையில் (Inclusive Language) மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு, மூல மொழியிலும் தமிழ் மொழியிலும் காணப்படும் பண்பாட்டு ஏற்றத்தாழ்வு களையப்படுகிறது.

இம்மொழிபெயர்ப்பு பல கட்டங்கள் தாண்டி வந்துள்ளது. அடிப்படை நகல்கள் தயாரித்த மொழிபெயர்ப்பாளர், திருத்தம் அளித்த பரிசீலனைக் குழுவினர், மாற்றுக்கருத்துக்கள் வழங்கிய ஆலோசனைக்குழுவினர், பேராயர்களும் ஆயர்களும் தலைவர்களும் அடங்கிய மேல்மட்டக் குழுவினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இம்மொழிபெயர்ப்பு இறுதி வடிவம் பெற்றுள்ளது. மேலும் முன்னோட்டப் பதிப்புகள் (Trial Editions) வழியாக ஆயிரக்கணக்கானோரின் கருத்துக்கள் வரவேற்க்கப்பட்டு, தரமானவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தூய ஆவியின் ஆற்றலோடும் மிகுந்த உழைப்போடும் இறைவேண்டலோடும், கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக திருச்சபையின் கண்காணிப்பில், முப்பத்தைந்து இறைத் தொண்டர்கள் செய்த இம்மொழிபெயர்ப்பை, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆண்டவர் இயேசு விரும்பும் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் பயன்படுத்துவர் என நம்புகிறோம்.

பொருள் துல்லியம், தெளிவு, எளிமை, மக்கள் மொழிநடை, மனிதநேயம், இருபால் சமத்துவநோக்கு ஆகியவற்றைக் கண்முன்கொண்டு செய்யப்பட்ட இம்மொழியாக்கம் கிறிஸ்தவ சமுதாயம் மட்டுமல்ல, தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் இறையுளத்தை அறிந்து செயல்படத் தூண்டும் என நம்புகிறோம். திருவிவிலியம் திருச்சபை வழிபாடுகளிலும், கருத்தரங்குகளிலும், விவிலியப் பள்ளிகளிலும், வீதிகளிலும் பயன்பட வேண்டும்; இல்லங்களிலும் உள்ளங்களிலும் இடம் பெற வேண்டும்.

இதன் மூலம் இறையாட்சி வருக! இறைவாக்கு ஒளிர்க!

Catholic Public Domain Version Douay-Rheims Bible

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks