ஓசேயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1யூதாவின் அரசர்களாகிய உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்பவர்களின் நாள்களிலும், யோவாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமாகிய எரொபவாமின் நாள்களிலும், பெயேரியின் மகன் ஓசேயாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே:
ஓசேயாவின் மனைவி, மக்கள்
2ஆண்டவர் ஓசேயா வழியாக முதற்கண் பேசியபோது, அவர் அவரை நோக்கி, “நீ போய் விலைமகள் ஒருத்தியைச் சேர்த்துக்கொள்; வேசிப் பிள்ளைகளைப் பெற்றெடு; ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு விலகி வேசித்தனத்தில் மூழ்கியுள்ளது” என்றார்.
3அப்படியே அவர் போய்த் திப்லயிமின் மகளாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டார். அவள் கருவுற்று அவருக்கொரு மகனைப் பெற்றெடுத்தாள்.
4அப்போது ஆண்டவர் ஓசேயாவை நோக்கி, “இவனுக்கு ‘இஸ்ரியேல்’ எனப் பெயரிடு; ஏனெனில் இன்னும் சிறிது காலத்தில் நான் இஸ்ரயேலின் இரத்தப் பழிக்காக ஏகூவின் குடும்பத்தாரைத் தண்டிப்பேன்; இஸ்ரயேல் குடும்பத்தின் ஆட்சியை ஒழித்துக் கட்டுவேன்.
5அந்நாளில், நான் இஸ்ரியேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் வில்லை முறித்துப்போடுவேன்” என்றார்.
6கோமேர் மறுபடியும் கருவுற்றுப் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள்; அப்போது ஆண்டவர் அவரைப் பார்த்து, “இதற்கு ‘லோருகாமா’* எனப் பெயரிடு; ஏனெனில் இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நான் இனிக் கருணை காட்ட மாட்டேன்; அவர்களை மன்னிக்கவே மாட்டேன்.
7ஆனால் யூதா குடும்பத்தாருக்குக் கருணை காட்டுவேன்; அவர்களின் கடவுளாகிய ஆண்டவராலேயே அவர்களுக்கு விடுதலை கிடைக்கச் செய்வேன்; வில், வாள், போர்க் குதிரைகள், குதிரை வீரர்கள் ஆகியவற்றைக் கொண்டு நான் விடுவிக்கப்போவதில்லை” என்றார்.
8அவள் லோருகாமாவைப் பால்குடி மறக்கச் செய்த பின் திரும்பவும் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
9அப்போது ஆண்டவர் ஓசேயாவைப் பார்த்து, “இவனுக்கு ‘லோ அம்மீ’* எனப் பெயரிடு; ஏனெனில், நீங்கள் என் மக்கள் அல்ல; நானும் உங்களுடையவர் அல்ல.”
இஸ்ரயேலின் ஒருங்கிணைப்பு
10ஆயினும் இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை அளக்கவும் எண்ணவும் முடியாத கடற்கரை மணலுக்கு ஒப்பாகும். ‘நீங்கள் என்னுடைய மக்களல்ல’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு மாறாக, ‘வாழும் கடவுளின் மக்கள்’ என்று அவர்களுக்குக் கூறப்படும்.
11யூதாவின் மக்களும் இஸ்ரயேலின் மக்களும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்படுவர். அவர்கள் தங்களுக்கென ஒரே தலைவனை ஏற்படுத்திக் கொண்டு, நாட்டிலிருந்து புறப்பட்டு வருவார்கள்; இதுவே இஸ்ரயேலின் மாபெரும் நாள்.