Home » Tamil » யோவேல் அதிகாரம் – 1 – திருவிவிலியம்

யோவேல் அதிகாரம் – 1 – திருவிவிலியம்

யோவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

1பெத்துவேலின் மகனான யோவேலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே:

வயல்வெளிகள் பாழடைந்ததைக் கண்ட மக்களின் அழுகுரல்

2முதியோரே, இதைக் கேளுங்கள்;

நாட்டிலிலுள்ள குடிமக்களே,

நீங்கள் அனைவரும் செவி கொடுங்கள்;

உங்கள் நாள்களிலாவது,

உங்கள் தந்தையரின் நாள்களிலாவது

இதுபோன்று நடந்ததுண்டோ?

3இதைக் குறித்து உங்கள்

பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்;

உங்கள் பிள்ளைகள்

தங்கள் பிள்ளைகளுக்குக் கூறட்டும்;

அவர்களின் பிள்ளைகள்

அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும்.

4வெட்டுப் புழு தின்று எஞ்சியதை

இளம் வெட்டுக்கிளி தின்றது;

இளம் வெட்டுக்கிளி தின்று எஞ்சியதைத்

துள்ளும் வெட்டுக் கிளி தின்றது;

துள்ளும் வெட்டுக் கிளி தின்று எஞ்சியதை

வளர்ந்த வெட்டுக்கிளி தின்றழித்தது.

5குடிவெறியர்களே,

விழித்தெழுந்து அழுங்கள்;

திராட்சை இரசம் குடிக்கிறவர்களே,

நீங்கள் அனைவரும் அந்த இனிப்பான

திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்;

ஏனெனில், அது உங்கள் வாய்க்கு

எட்டாமற் போயிற்று.

6ஆற்றல்மிக்க,

எண்ணிக்கையில் அடங்காத

வேற்றினம் ஒன்று

என் நாட்டிற்கு எதிராய்

எழும்பி இருக்கின்றது;

அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்;

பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள்

அதற்கு உண்டு.

7என்னுடைய திராட்சைக் கொடிகளை

அது பாழாக்கிற்று;

அத்தி மரங்களை முறித்துப் போட்டது;

அவற்றின் பட்டைகளை முற்றிலும்

உரித்துக் கீழே எறிந்தது;

அவற்றின் கிளைகள் வெளிறிப் போயின.

8கணவனாக வரவிருந்தவனை

இழந்ததால்

சாக்கு உடை உடுத்திக் கொள்ளும்

கன்னிப் பெண்ணைப்போல்

கதறி அழுங்கள்.

9ஆண்டவரது இல்லத்தில்

தானியப் படையலும் நீர்மப் படையலும்

இல்லாமல் ஒழிந்தன.

ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்

குருக்கள் புலம்பி அழுகின்றார்கள்.

10வயல்வெளிகள் பாழாயின;

நிலமும் புலம்புகின்றது;

ஏனெனில்,

தானிய விளைச்சல் அழிவுற்றது;

இரசம் தரும் திராட்சைக் கொடிகள்

காய்ந்துபோயின;

எண்ணெய் தரும் ஒலிவ மரங்கள்

பட்டுப் போயின.

11உழவுத் தொழில் செய்வோரே,

கலங்கி நில்லுங்கள்;

திராட்சைத் தோட்டக்காரர்களே,

அழுங்கள். ஏனெனில்,

கோதுமையும் வாற்கோதுமையும்

இல்லாமற் போயின;

வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று.

12திராட்சைக் கொடி வாடிப் போகின்றது;

அத்தி மரம் உலர்ந்துபோகின்றது;

மாதுளை, பேரீந்து, பேரிலந்தை போன்ற

வயல்வெளி மரங்கள் யாவும்

வதங்குகின்றன;

மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு

மறைந்து போகின்றது.

13குருக்களே,

சாக்கு உடை உடுத்திக்கொண்டு
தேம்பி அழுங்கள்;

பலிபீடத்தில் பணிபுரிவோரே!

அலறிப் புலம்புங்கள்;

என் கடவுளின் ஊழியர்களே,

சாக்கு உடை அணிந்தவர்களாய்
இரவைக் கழியுங்கள்;

ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில்

தானியப் படையலும் நீர்மப் படையலும்
இல்லாமற் போயின.

14உண்ணா நோன்புக்கென

நாள் குறியுங்கள்;

வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்;

ஊர்ப் பெரியோரையும்

நாட்டில் குடியிருப்போர் அனைவரையும்

உங்கள் கடவுளாகிய ஆண்டவரின்

இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்;

ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள்.

15மிகக் கொடிய நாள் அந்த நாள்!

ஆண்டவரின் நாள்
அண்மையில் உள்ளது;

எல்லாம் வல்லவர்

அழிவை அனுப்பும் நாளாக அது வரும்;

16உணவுப் பொருளெல்லாம்

பாழாய்ப் போனதை

நம் கண்கள் காணவில்லையா?

நம் கடவுளின் இல்லத்திலிருந்து

மகிழ்ச்சியும் அக்களிப்பும்

இல்லாமற்போனதை
நாம் பார்க்கவில்லையா?

17விதைகள் மண்கட்டிகளின் கீழ்

மக்கிப்போயின;

பண்டசாலைகள் பாழடைந்துவிட்டன;

களஞ்சியங்கள் இடிந்து விழுந்தன;

கோதுமை விளைச்சல்

இல்லாமற் போயிற்று.

18காட்டு விலங்கினங்கள்

என்னவாய்த் தவிக்கின்றன!

மேய்ச்சல் காணா மாட்டு மந்தைகள்

திகைத்து நிற்கின்றன;

ஆட்டு மந்தைகளும்

இன்னலுற்றுத் தவிக்கின்றன!

19ஆண்டவரே, நான்

உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;

பாலைநிலத்தின் மேய்ச்சல் இடங்கள்

தீக்கிரையாயின;

வயல்வெளியிலிருந்த

மரங்கள் அனைத்தையும்

நெருப்பு சுட்டெரித்துவிட்டது.

20நீரோடைகள் வற்றிப்போனதால்

காட்டு விலங்குகள் கூட

உம்மை நோக்கிக் கதறுகின்றன;

பாலைநிலத்திலிருந்த

மேய்ச்சல் இடங்களை

நெருப்பு விழுங்கிவிட்டது.


1:5 எசா 13:6.
1:6 திவெ 9:8.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.