1 மக்கபேயர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1. முகவுரை
மாமன்னர் அலக்சாண்டர்
1மாசிடோனியராகிய பிலிப்புமகன் அலக்சாண்டர் முதலில் கிரேக்க நாட்டை ஆண்டுவந்தார்; பின்னர் கித்திம் நாட்டினின்று புறப்பட்டுப் பாரசீகருடையவும் மேதியருடையவும் மன்னரான தாரியுவை வென்று அவருக்குப் பதிலாக ஆட்சிபுரிந்தார்.
2அவர் போர்கள் பல புரிந்து, கோட்டைகள் பல பிடித்து, மண்ணுலகின் மன்னர்களைக் கொலைசெய்தார்.
3மண்ணுலகின் கடையெல்லைவரை முன்னேறிச் சென்று பல நாடுகளைக் கொள்ளையடித்தார்; மண்ணுலகு முழுவதும் அவரது ஆட்சியில் அமைதியாக இருந்தபோது அவர் தம்மையே உயர்வாகக் கருதினார்; அவரது உள்ளம் செருக்குற்றது.
4ஆகவே அவர் வலிமைமிக்க படையைத் திரட்டிப் பல மாநிலங்கள், நாடுகள், மன்னர்கள்மீது ஆட்சிசெலுத்திவந்தார். அவர்களும் அவருக்குத் திறை செலுத்தி வந்தார்கள்.
5அதன்பிறகு அவர் கடின நோயுற்றுத் தாம் சாகவிருப்பதை உணர்ந்தார்.
6ஆதலால் இளமைமுதல் தம்முடன் வளர்க்கப்பெற்றவர்களும் மதிப்புக்குரியவர்களுமான அலுவலர்களை அழைத்து, தாம் உயிரோடு இருந்தபோதே தம் பேரரசை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
7அலக்சாண்டர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சிசெய்த பின் இறந்தார்.
8அலக்சாண்டருடைய அலுவலர்கள் தங்களுக்குரிய இடங்களில் ஆட்சி செலுத்தத் தொடங்கினார்கள்.
9அவர் இறந்தபின் அவர்கள் எல்லாரும் முடி சூடிக்கொண்டார்கள். அவர்களுக்குப்பின் அவர்களின் மைந்தர்களும் பல ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அவர்களால் மண்ணுலகெங்கும் தீமைகள் பெருகின.
2. யூதர்களின் துன்பமும் மக்கபேயரின் கிளர்ச்சியும்
அந்தியோக்கு எப்பிபானும் நெறிகெட்ட யூதரும்
10அவர்கள் நடுவிலிருந்து பொல்லாத வழிமரபினன் ஒருவன் தோன்றினான்; அவன் மன்னர் அந்தியோக்கின் மகன் அந்தியோக்கு எப்பிபான் ஆவான்; முன்பு உரோமையில் பிணைக் கைதியாக இருந்த அவன் கிரேக்கப் பேரரசின் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு* ஆட்சி செய்யத் தொடங்கினான்.
11அக்காலத்தில் இஸ்ரயேலில் தீநெறியாளர் சிலர் தோன்றி, “வாருங்கள், நம்மைச் சுற்றிலும் இருக்கும் வேற்றினத்தாரோடு நாம் உடன்படிக்கை செய்துகொள்வோம்; ஏனெனில் நாம் அவர்களைவிட்டுப் பிரிந்ததிலிருந்து நமக்குப் பல வகைக் கேடுகள் நேர்ந்துள்ளன” என்று கூறி, மக்கள் அனைவரையும் தவறான வழியில் செல்லத் தூண்டினர்.
12இது அவர்களுக்கு ஏற்படையதாய் இருந்தது.
13உடனே மக்களுள் சிலர் ஆர்வத்தோடு மன்னனிடம் சென்றனர். அவர்கள் கேட்டதற்கு இணங்க, வேற்றினத்தாரின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு அவன் அவர்களுக்கு உரிமை அளித்தான்.
14வேற்றினத்தாருடைய பழக்கவழக்கத்திற்கு ஏற்ப அவர்கள் எருசலேமில் உடற்பயிற்சிக்கூடம் ஒன்று ஏற்படுத்தினார்கள்;
15விருத்தசேதனத்தின் அடையாளத்தை மறைத்து, தூய உடன்படிக்கையை விட்டுவிட்டு, வேற்றினத்தாரோடு கலந்து, எல்லாவகைத் தீமைகளையும் செய்தார்கள்.
அந்தியோக்கு எகிப்தைக் கைப்பற்றல்
16அந்தியோக்கு தன் சொந்த நாட்டில் ஆட்சியை நிலைநாட்டிய பின், இரு நாடுகளுக்கு மன்னனாகும் எண்ணத்துடன் எகிப்திலும் ஆட்சிபுரிய விரும்பினான்;
17ஆதலால் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, பெரும் கப்பற்படை அடங்கிய வலிமைமிக்க படைத்திரளோடு எகிப்து நாட்டில் புகுந்தான்.
18எகிப்து மன்னனான தாலமியோடு அவன் போர் தொடுக்கவே, தாலமி அவனுக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடினான்; அவனுடைய வீரர்களுள் பலர் வெட்டுண்டு மடிந்தனர்.
19எகிப்து நாட்டின் அரண்சூழ் நகர்கள் பல பிடிபட்டன. அந்தியோக்கு எகிப்திலிருந்து கொள்ளைப் பொருள்களை எடுத்துச் சென்றான்.
அந்தியோக்கு யூதர்களைத் துன்புறுத்தல்
20நூற்று நாற்பத்து மூன்றாம் ஆண்டில்* அந்தியோக்கு எகிப்தை வென்று திரும்புகையில் வலிமைமிக்க படையோடு இஸ்ரயேலைத் தாக்கி எருசலேமை அடைந்தான்;
21அகந்தையோடு திருஉறைவிடத்திற்குள் புகுந்து, பொற்பீடம், விளக்குத்தண்டு, அதோடு இணைந்தவை,
22காணிக்கை அப்பமேசை, நீர்மப் படையலுக்கான குவளைகள், கிண்ணங்கள், பொன் தூபக் கிண்ணங்கள், திரை, பொன் முடிகள், கோவில் முகப்பில் இருந்த பொன் அணிகலன்கள் ஆகிய அனைத்தையும் சூறையாடினான்;
23வெள்ளியையும் பொன்னையும் விலையுயர்ந்த கலன்களையும் கைப்பற்றினான்; ஒளித்து வைத்திருந்த செல்வங்களையும் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டான்;
24இஸ்ரயேலில் பலரைக் கொன்று குவித்தபின், கொள்ளைப் பொருள்களோடு தன் நாடு திரும்பினான்; தன் செயல்கள்பற்றிப் பெருமையாகப் பேசிவந்தான்.
25இஸ்ரயேல் மக்கள் தாங்கள்
வாழ்ந்த எல்லா இடங்களிலும்
இஸ்ரயேலைக் குறித்து
அழுது புலம்பினார்கள்.
26தலைவர்களும் மூப்பர்களும்
அழுது அரற்றினார்கள்;
கன்னிப்பெண்களும் இளைஞர்களும்
நலிவுற்றார்கள்; பெண்கள்
அழகுப்பொலிவினை இழந்தார்கள்.
27மணமகன் ஒவ்வொருவனும்
புலம்பி அழுதான்; மணவறையில்
இருந்த மணமகள் ஒவ்வொருத்தியும்
வருந்தி அழுதாள்.
28தன் குடிமக்கள் பொருட்டு
நாடே நடுநடுங்கியது;
யாக்கோபின் வீடே
வெட்கித் தலைகுனிந்தது.
29இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மன்னன் வரி தண்டுவதற்காக ஒருவனை யூதேயாவின் நகரங்களுக்கு அனுப்பி வைத்தான். அவன் பெரும் படையோடு எருசலேம் சேர்ந்தான்.
30அமைதிச் செய்தியுடன் தான் வந்திருப்பதாக அவன் எருசலேம் மக்களிடம் நயவஞ்சகமாகக் கூறி, அவர்களது நம்பிக்கையைப் பெற்றான். ஆனால் அவன் திடீரென்று நகர்மீது பாய்ந்து கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரைக் கொன்றான்;
31நகரைக் கொள்ளையடித்துத் தீக்கரையாக்கி, வீடுகளையும் சுற்று மதில்களையும் தகர்த்தெறிந்தான்.
32அவனும் அவனுடைய வீரர்களும் பெண்களையும் பிள்ளைகளையும் நாடு கடத்திக் கால் நடைகளைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள்;
33தாவீதின் நகரில் உயர்ந்த, உறுதியான மதில்களையும் வலுவான காவல்மாடங்களையும் கட்டியெழுப்பி, அதைத் தங்கள் கோட்டையாக்கிக் கொண்டார்கள்;
34தீநெறியாளர்களான பொல்லாத மக்களினத்தை அங்குக் குடியேற்றினார்கள்; இவ்வாறு தங்கள் நிலையை வலுப்படுத்தினார்கள்;
35படைக்கலன்களையும் உணவுப்பொருள்களையும் அங்குச் சேர்த்து வைத்தார்கள்; எருசலேமில் கொள்ளையடித்த பொருள்களை ஒன்று திரட்டி வைத்தார்கள்; இதனால் இஸ்ரயேலருக்குப் பேரச்சம் விளைவித்து வந்தார்கள்.
36அந்தக்கோட்டை,
திருஉறைவிடத்தைத் தாக்குவதற்கு
ஏற்ற பதுங்கிடமாக அமைந்தது;
இஸ்ரயேலுக்குக் கொடிய
எதிரியாகத் தொடர்ந்து இருந்தது.
37அவர்கள் திருஉறைவிடத்தைச்
சுற்றிலும் மாசற்ற
குருதியைச் சிந்தினார்கள்;
திருஉறைவிடத்தைத்
தீட்டுப் படுத்தினார்கள்.
38அவர்களை முன்னிட்டு எருசலேமின்
குடிகள் அதைவிட்டு
ஓடிவிட்டார்கள். எருசலேம்
அன்னியரின் குடியிருப்பு
ஆயிற்று; தன் குடிகளுக்கோ
அன்னியமானது. அதன் மக்கள்
அதனைக் கைவிட்டார்கள்.
39அதன் திருஉறைவிடம்
பாழடைந்து பாலைநிலம்போல்
ஆயிற்று; திருநாள்கள்
துயர நாள்களாக மாறின;
ஓய்வுநாள்கள் பழிச்சொல்லுக்கு
உள்ளாயின; அதன் பெருமை
இகழ்ச்சிக்கு உட்பட்டது.
40அதன் மாட்சியின் அளவுக்கு
மானக்கேடும் மிகுந்தது;
அதன் பெருமை புலம்பலாக மாறியது.
41-42எல்லாரும் ஒரே மக்களினமாய் இருக்கவேண்டும் என்றும், தனிப்பட்ட பழக்கவழக்கங்களைக் கைவிடவேண்டும் என்றும்
43இஸ்ரயேலருள் பலர் மன்னனுடைய வழிபாட்டுமுறைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டனர்; சிலைகளுக்குப் பலியிட்டனர்; ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தினர்.
44மன்னன் தன் தூதர்கள் வழியாக எருசலேமுக்கும் யூதாவின் நகரங்களுக்கும் மடல்களை அனுப்பி வைத்தான்; யூதர்கள் தங்கள் நாட்டு மரபுக்குப் புறம்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றவேண்டும்;
45எரிபலிகளோ மற்றப் பலிகளோ நீர்மப் படையல்களோ திருஉறைவிடத்தில் நிகழ்வதைத் தடுக்க வேண்டும்; ஓய்வுநாள்களையும் திருவிழாக்களையும் தீட்டுப்படுத்த வேண்டும்;
46திருஉறைவிடத்தையும் அதைச் சேர்ந்த தூய பொருள்களையும் கறைப்படுத்த வேண்டும்;
47பிற இனத்தாரின் பலிபீடங்கள், கோவில்கள், சிலைவழிபாட்டுக்குரிய இடங்கள் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப வேண்டும்; பன்றிகளையும் தீட்டுப்பட்ட விலங்ககளையும் பலியிடவேண்டும்;
48அவர்கள் தங்கள் திருச்சட்டத்தை மறந்து, தங்கள் விதிமுறைகளையும் மாற்றிக்கொள்ளும் பொருட்டு, தங்கள் மைந்தர்களுக்கு விருத்தசேதனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்;
49தங்களை எல்லாவகை மாசுகளாலும் தீட்டுகளாலும் அருவருப்புக்குரியோர் ஆக்கிக்கொள்ள வேண்டும்.
50மன்னனின் கட்டளைப்படி நடவாதவர்கள் சாவார்கள்.
51மன்னன் இந்த கட்டளைகளையெல்லாம் எழுதித் தன் பேரரசு முழுவதற்கும் அனுப்பி வைத்தான்; இவற்றை மக்கள் எல்லாரும் செயல்படுத்த மேற்பார்வையாளரை ஏற்படுத்தினான்; யூதாவின் நகரங்கள் ஒவ்வொன்றும் பலியிடவேண்டும் என்று கட்டளையிட்டான்.
52மக்களுள் பலர், அதாவது திருச்சட்டத்தைப் புறக்கணித்தோர் அனைவரும் அந்த மேற்பார்வையாளர்களோடு சேர்ந்துகொண்டனர்; நாட்டில் தீமைகள் செய்தனர்;
53இஸ்ரயேலர் தங்களுக்கு இருந்த எல்லாப் புகலிடங்களையும் நோக்கி ஓடி ஒளிந்து கொள்ளக் கட்டாயப்படுத்தினர்.
54நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு* கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள் அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள்; யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்;
55வீட்டுக் கதவுகளுக்கு முன்பும் வீதிகளிலும் தூபம் காட்டினார்கள்;
56தங்கள் கண்ணில் பட்ட திருச்சட்ட நூல் ஒவ்வொன்றையும் கிழித்து நெருப்பிலிட்டு எரித்தார்கள்.
57எவரிடம் உடன்படிக்கை நூல் காணப்பட்டதோ, யார் திருச்சட்டத்தின்படி நடந்துவந்தார்களோ அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும் என்பது மன்னனது கட்டளை.
58இவ்வாறு ஒவ்வொரு மாதமும் நகரங்களில் காணப்பட்ட இஸ்ரயேலருக்கு எதிராக அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தினார்கள்;
59எரிபலிபீடத்தின்மேல் அமைக்கப்பட்டிருந்த சிலைவழிபாட்டுப் பீடத்தின்மீது ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்தாம் நாள் பலியிடுவார்கள்;
60தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்வித்த பெண்களை மன்னனின் கட்டளைப்படி கொன்றார்கள்.
61பிள்ளைகளை அவர்களுடைய அன்னையரது கழுத்தில் கட்டித் தொங்க விட்டார்கள்; அவர்களின் குடும்பத்தினரையும் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தவர்களையும் கொலைசெய்தார்கள்.
62எனினும் இஸ்ரயேலருள் பலர் உறுதியாய் இருந்தனர்; தூய்மையற்ற உணவுப்பொருள்களை உண்பதில்லை என்று தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்;
63உணவுப்பொருள்களால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்வதைவிட, தூய உடன்படிக்கையை மாசுபடுத்துவதைவிடச்சாவதே சிறந்தது என்று கருதினர்; அவ்வாறே இறந்தனர்.
64இவ்வாறு இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது.