Home » Tamil » 1 மக்கபேயர் அதிகாரம் – 15 – திருவிவிலியம்

1 மக்கபேயர் அதிகாரம் – 15 – திருவிவிலியம்

1 மக்கபேயர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

ஏழாம் அந்தியோக்கும் சீமோனும்

1தெமேத்திரி மன்னனின் மகன் அந்தியோக்கு யூதர்களின் தலைமைக் குருவும் ஆட்சியாளருமான சீமோனுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தீவுகளிலிருந்து மடல் எழுதினான்.

2அதன் உள்ளடக்கம் பின்வருமாறு: “தலைமைக் குருவும் ஆட்சியாளருமான சீமோனுக்கும் யூத இனத்தாருக்கும் அந்தியோக்கு மன்னன் வாழ்த்துக் கூறி எழுதுவது:

3எங்கள் மூதாதையரின் நாட்டைச் சில கயவர்கள் கைப்பற்றிக்கொண்டபடியால் அதைச் சீர்படுத்திப் பழைய நிலைக்குக் கொணர முடிவுசெய்துள்ளேன்; அதற்காகவே பெரும் கூலிப்படையையும் போர்க் கப்பல்களையும் திரட்டியிருக்கிறேன்;

4எங்களது நாட்டை அழித்து என் ஆட்சிக்கு உட்பட்ட பல நகரங்களைப் பாழாக்கியவர்களைத் தண்டிப்பதற்காக அவர்களது நாட்டின்மீது படையெடுக்க எண்ணம் கொண்டுள்ளேன்.

5ஆதலால் எனக்குமுன் இருந்த மன்னர்கள் அனைவரும் உமக்கு விலக்கியிருந்த எல்லா வரிகளையும் வழங்கியிருந்த எல்லாச் சலுகைகளையும் இப்போது உறுதிப்படுத்துகிறேன்;

6நாட்டுக்குத் தேவையான நாணயங்களை நீரே அடித்துக்கொள்ள உமக்கு அனுமதி அளிக்கிறேன்.

7எருசலேம் நகரும் அதன் திருஉறைவிடமும் தன்னாட்சி பெற்றவையாய் இருக்கும். நீர் செய்துள்ள எல்லாப் படைக்கலங்களும், நீர் கட்டி முடித்து இப்போதும் உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள கோட்டைகளும் உமக்கே சொந்தமாய் இருக்கும்.

8அரச கருவூலத்துக்கு நீர் இப்போது செலுத்தவேண்டிய எல்லாக் கடனையும், இனிச் செலுத்தவேண்டிய கடனையும் இன்றுமுதல் என்றென்றும் தள்ளுபடி செய்கின்றேன்.

9எமது நாட்டை நாம் மீண்டும் அடைந்தபிறகு, உங்களது பெருமை உலகெங்கும் விளங்கும்படி உம்மையும் உம் இனத்தாரையும் கோவிலையும் பெரிதும் மாட்சியுறச் செய்வோம்.”

10நூற்று எழுபத்து நான்காம் ஆண்டு* அந்தியோக்கு தன் மூதாதையரின் நாட்டினுள் புகுந்தான். எல்லாப் படைகளும் அவனோடு சேர்ந்து கொண்டன. ஆதலால் திரிபோவுடன் சிலர் மட்டுமே இருந்தனர்.

11அந்தியோக்கு அவனைத் துரத்தியதால், அவன் கடலோரமாய் இருந்த தோர் நகருக்குத் தப்பியோடினான்;

12ஏனென்றால் தன் படைகள் தன்னைக் கைவிட்டதால் தனக்குப் பல தொல்லைகள் நேர்ந்தன என்பதை உணர்ந்திருந்தான்.

13அந்தியோக்கு ஓர் இலட்சத்து இருபதாயிரம் படைவீரர்களோடும் எண்ணாயிரம் குதிரைவீரர்களோடும் தோருக்கு எதிராகப் பாசறை அமைத்தான்;

14அந்த நகரைச் சுற்றி வளைத்துக்கொண்டான். கப்பல்களும் கடலில் இருந்தவண்ணம் போரில் கலந்து கொண்டன. கடல்பக்கமும் தரைப்பக்கமும் நகரை நெருக்கி யாரும் வெளியே போகாமலும் உள்ளே நுழையாமலும் தடுத்தான்.

யூதர்களுக்கு உரோமையின் ஆதரவு

15இதற்கிடையில் பல்வேறு மன்னர்களுக்கும் நாடுகளுக்கும் எழுதப்பட்ட மடல்களோடு நூமேனியும் அவனுடன் இருந்தவர்களும் உரோமையினின்று எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். அவற்றில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது;

16“தாலமி மன்னருக்கு உரோமையர்களின் பேராளர் லூசியு வாழ்த்துக் கூறி எழுதுவது:

17தலைமைக் குருவான சீமோனும் எங்களின் நண்பர்களும் கூட்டாளிகளுமான யூத மக்களும் அனுப்பிய தூதர்கள் பழைய நட்புறவையும் ஒப்பந்தத்தையும் புதுப்பிக்கும்படி எங்களிடம் வந்தார்கள்.

18அவர்கள் அறுநூற்று எண்பத்து ஐந்து கிலோ* எடையுள்ள பொற் கேடயம் ஒன்று கொண்டுவந்தார்கள்.

19ஆதலால் அவர்களுக்குத் தீங்கு இழைக்கக் கூடாது என்றும், அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் நாட்டையும் எதிர்த்துப் போரிடக்கூடாது என்றும், அவர்களை எதிர்த்துப் போர் செய்கிறவர்களோடு கூட்டுச் சேரக்கூடாது என்றும் பல்வேறு மன்னர்களுக்கும் நாடுகளுக்கும் எழுத முடிவுசெய்தோம்.

20அவர்கள் கொண்டு வந்த கேடயத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடிவுசெய்தோம்.

21ஆதலால் கயவர்கள் யாரேனும் யூதேயாவிலிருந்து உங்களிடம் தப்பியோடி வந்திருந்தால், யூதச் சட்டப்படி அவர்களைத் தண்டிக்குமாறு தலைமைக் குருவான சீமோனிடம் அவர்களை ஒப்புவித்துவிடுங்கள்.”

22இவ்வாறே தெமேத்திரி மன்னனுக்கும் அத்தால், அரியாரது, அர்சாகு ஆகியோருக்கும் லூசியு எழுதினான்;

23சம்சாம், ஸ்பார்த்தா, தேல், மிந்து, சிகியோன், காரியா, சாமு, பம்பிலியா, லீக்கியா, அலிக்கார்னசு, உரோது, பசேல், கோசு, சீது, அராது கோர்த்தினா, கினிது, சைப்பிரசு, சீரேன் ஆகிய எல்லா நாடுகளுக்கும் எழுதினான்.

24இம்மடலின் நகல் தலைமைக் குரு சீமோனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஏழாம் அந்தியோக்கு சீமோனின் பகைவனாதல்

25அந்தியோக்கு மன்னன் மீண்டும் தோருக்கு எதிராய்ப் பாசறை அமைத்தான்; அதைத் தன் படையால் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தான்; படைப்பொறிகள் செய்தான்; திரிபோவை அடைத்துவைத்து அவன் வெளியே போகவோ உள்ளே வரவோ முடியாதவாறு செய்தான்.

26சீமோன் அந்தியோக்குக்கு உதவியாக, தேர்ந்தெடுத்த இரண்டாயிரம் வீரர்களை பொன், வெள்ளி திரளான படைக்கலங்களோடு அனுப்பிவைத்தார்.

27ஆனால் அந்தியோக்கு அவர்களை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் சீமோனுடன் தான் செய்திருந்த ஒப்பந்தங்களை மீறி நட்புறவை முறித்துக் கொண்டான்.

28அதன்பிறகு சீமோனைச் சந்தித்துப் பேசத் தன் நண்பர்களுள் ஒருவரான அத்தநோபியை அவன் அனுப்பி, “நீங்கள் எனது நாட்டின் நகரங்களாகிய யாப்பா, கசாரா, எருசலேம் கோட்டை ஆகியவற்றைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்;

29அப்பகுதிகளைப் பாழாக்கி நாட்டில் பெரும் தீமைகள் புரிந்து எனது அரசில் பல இடங்களைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்.

30எனவே இப்போது நீங்கள் கைப்பற்றியுள்ள நகரங்களையும் யூதேயாவின் எல்லைகளுக்கு அப்பால் நீங்கள் பிடித்து வைத்துள்ள நாடுகளில் திரட்டியுள்ள திறையையும் ஒப்படைத்துவிடுங்கள்;

31அல்லது அவற்றுக்குப் பதிலாக இருபது டன்* வெள்ளியை எனக்குச் செலுத்துங்கள்; நீங்கள் உண்டாக்கிய அழிவுக்கும் நகரங்களுக்காகக் கட்ட வேண்டிய திறைக்கும் ஈடாக வேறு இருபது டன் வெள்ளியைக் கட்டிவிடுங்கள். இல்லையேல் நாங்கள் வந்து உங்கள்மீது போர்தொடுப்போம்” என்று சொல்லச் சொன்னான்.

32மன்னனின் நண்பன் அத்தநோபி எருசலேம் வந்து, சீமோனுடைய மாட்சியையும் பொன், வெள்ளிக் கலன்கள் நிறைந்த நிலையடுக்கையும் மற்றச் செல்வப் பகட்டையும் கண்டு வாயடைத்து நின்றான்; மன்னனுடைய சொற்களை அவருக்கு அறிவித்தான்.

33ஆனால் சீமோன் அவனுக்கு மறுமொழியாக, “நாங்கள் அயல்நாட்டைப் பிடித்துக்கொள்ளவில்லை; பிறருடைய சொத்துகளைக் கைப்பற்றிக்கொள்ளவுமில்லை. ஆனால் எங்கள் பகைவர்கள் நேர்மையின்றிக் கவர்ந்து, சிறிது காலம் வைத்திருந்த எங்கள் மூதாதையரின் உரிமைச் சொத்துகளையே திரும்பப் பெற்றுள்ளோம்.

34தகுந்த வாய்ப்பு ஏற்பட்டதால் எங்கள் மூதாதையரின் உரிமைச் சொத்துகளை எங்களோடு தக்க வைத்துக் கொண்டுள்ளோம்.

35ஆனால் நீர் கோரும் யாப்பா, கசாராவைப் பொறுத்தமட்டில், அந்நகரங்கள் மக்கள் நடுவிலும் எங்கள் நாட்டிலும் பெரும் தீமைகள் விளைவித்து வந்துள்ளன. ஆயினும் அவற்றுக்காக நான்கு டன்* வெள்ளி கொடுப்போம்” என்றார்.

36அதற்கு அத்தநோபி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை; மாறாக, சினத்துடன் மன்னனிடம் திரும்பிச் சென்று, சீமோன் தன்னிடம் கூறியவற்றையும் அவரது மாட்சியையும் தான் கண்ட யாவற்றையும் அறிவித்தான். அப்போது மன்னன் கடுஞ் சீற்றம் கொண்டான்.

யோவானின் வெற்றி

37இதற்கிடையே திரிபோ கப்பலேறி ஒர்த்தோசியாவுக்கு ஓடிப்போனான்.

38அந்தியோக்கு மன்னன் கெந்தபாயைக் கடற்கரைப் பகுதிக்குப் படைத் தலைவனாக ஏற்படுத்தி, காலாட்படையையும் குதிரைப்படையையும் அவனுக்கு அளித்தான்;

39யூதர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும்பொருட்டு யூதேயாவுக்கு எதிரில் பாசறை அமைக்கவும், கிதரோனை மீண்டும் கட்டியெழுப்பி, அதன் வாயில்களை வலுப்படுத்தவும் கெந்தபாய்க்குக் கட்டளையிட்டபின் திரிபோவைத் துரத்திச் சென்றான்.

40யாம்னியா சேர்ந்த கெந்தபாய் மக்களைத் துன்புறுத்தி, யூதேயாமீது போர் தொடுத்தான்; அவர்களைச் சிறைப்பிடித்துக் கொல்லத் தொடங்கினான்.

41மன்னனின் கட்டளைப்படி அவன் கிதரோனைக் கட்டியெழுப்பினான்; யூதேயா நாட்டில் புகுந்து சுற்றுக்காவல் புரியுமாறு அவ்விடத்தில் குதிரைப்படையையும் காலாட்படையையும் நிறுவினான்.


15:15 1 மக் 12:16.

15:10 கி.மு. 138.
15:18 ஆயிரம் மினா என்பது கிரேக்க பாடம்.
15:31 ‘ஐந்நூறு தாலந்து’ என்பது கிரேக்க பாடம்.
15:35 ‘நூறு தாலந்து’ என்பது கிரேக்க பாடம்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.