செப்பனியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1ஆமோனின் மகன் யோசியா யூதாவின் அரசனாய் இருந்தபொழுது செப்பனியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. இவர் எசேக்கியாவின் கொள்ளுப் பேரனும் அமரியாவின் பேரனும் கெதலியாவின் மகனுமான கூசியின் மைந்தர் ஆவார்.
ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள்
2“மண்ணுலகில் எதுவும் இராதவாறு
3அனைத்தையும் அழித்துவிடுவேன்,”
என்கிறார் ஆண்டவர்.
“மனிதரையும் விலங்குகளையும்
அழிப்பேன்;
வானத்துப் பறவைகளையும்
கடல் மீன்களையும் ஒழிப்பேன்;
கொடியவர்களை
இடறிவிழச் செய்வேன்;
மனிதஇனம்
மண்ணுலகில் இல்லாதவாறு
அற்றுப் போகச் செய்வேன்,”
என்கிறார் ஆண்டவர்.
4யூதாவுக்கும் எருசலேமில் வாழும்
அனைவர்க்கும் எதிராக
நான் கையை ஓங்குவேன்.
பாகால் வழிபாட்டில்
எஞ்சியிருப்பதையும்
அந்தச் சிலை வழிபாட்டு
அர்ச்சகர்களின் பெயரையும்
அழித்து விடுவேன்.
5வீட்டின் மேல்தளத்திலிருந்து
வான் படைகளை வணங்குவோரையும்,
ஆண்டவரை வணங்கி
அவர் பெயராலும்
மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும்
ஆணையிடுவோரையும்
ஒழித்து விடுவேன்.
6ஆண்டவரைவிட்டு விலகிச் செல்வோரையும்
ஆண்டவரைத் தேடாது,
அவரை அறிய முயலாது இருப்போரையும்
அழித்துவிடுவேன்.
7தலைவராகிய ஆண்டவர் திருமுன்
மௌனமாயிருங்கள்;
ஏனெனில் ஆண்டவரின் நாள்
அண்மையில் உள்ளது;
பலி ஒன்றை
ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்;
தாம் அழைத்தவர்களை
அவர் புனிதப்படுத்தியுள்ளார்
8ஆண்டவரது பலியின் நாளில்
தலைவர்களையும்
அரசனுடைய புதல்வர்களையும்
வெளிநாட்டு ஆடை அணிந்துள்ள
அனைவரையும் தண்டிப்பேன்.
9வாயிற்படியை மிதிக்காமல்
தாண்டி வந்து,
தங்கள் தலைவனின் வீட்டை
வன்செயலாலும் வஞ்சனையாலும்
நிரப்புகிறவர்களை
அந்நாளில் தண்டிப்பேன்.
10ஆண்டவர் கூறுகின்றார்:
“அந்நாளில் எருசலேமின்
மீன் வாயிலிருந்து கூக்குரலும்,
புதிய நகர்ப் பகுதியிலிருந்து புலம்பலும்,
குன்றுகளிலிருந்து
இடிந்துவிழும் பேரொலியும் கேட்கும்.
11நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்போரே!
கதறி அழுங்கள்;
ஏனெனில், வணிகர் அனைவர்க்கும்
அழிவு வருகின்றது;
பணம் படைத்தவர் அனைவரும்
வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்;
12அக்காலத்தில்,
நான் கையில் விளக்கேந்திக் கொண்டு
எருசலேமைச் சோதித்துப் பார்ப்பேன்;
‘ஆண்டவர் நன்மையும் செய்யார்;
தீமையும் செய்யார்’ என்று
தங்கள் உள்ளங்களில்
சொல்லிக் கொண்டு
பஞ்சணையில் சாய்ந்து
கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன்.
13அவர்களுடைய உடைமைகள்
கொள்ளையடிக்கப்படும்;
வீடுகள் பாழாக்கப்படும்;
அவர்கள் வீடுகள்
கட்டிக்கொள்வார்கள்;
ஆனால் அவற்றில்
குடியிருக்கப்போவதில்லை;
திராட்சைத் தோட்டங்களைப்
பயிர் செய்தாலும்,
அவற்றின் இரசத்தைக்
குடிக்கப் போவதில்லை.”
14ஆண்டவரின் மாபெரும் நாள்
அண்மையில் உள்ளது;
அது விரைந்து
நெருங்கிக் கொண்டிருக்கிறது;
ஆண்டவரது நாளின் பேரொலி
கசப்பை உண்டாக்கும்;
மாவீரனையும் கலங்கி
அலறும்படி செய்யும்.
15அந்த நாள் கடும் சினத்தின் நாள்;
துன்பமும் துயரமும் நிறைந்த நாள்;
பேரழிவும் பேரிழப்பும்
கொண்டு வரும் நாள்;
இருட்டும் காரிருளும் கவிந்த நாள்;
16அரண்சூழ் நகர்களுக்கும்
உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக
எக்காளமும் போர் முழக்கமும்
கேட்கும் நாள்.
17மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்;
பார்வையற்றோர்போல்
அவர்கள் தடுமாறுவர்;
ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப்
பாவம் செய்தனர்;
அவர்களது இரத்தம்
புழுதி போல் கொட்டப்படும்;
சதைப்பிண்டம்
சாணம்போல் எறியப்படும்.
18ஆண்டவரது சினத்தின் நாளில்,
அவர்களது வெள்ளியும் பொன்னும்
அவர்களைக் காப்பாற்றா.
உலகம் முழுவதும்
அவரது வெஞ்சினத் தீக்கு இரையாகும்.
உலகில் வாழும் அனைவரையும்
அவர் நொடிப்பொழுதில்
முற்றிலும் அழித்துவிடுவார்.