2 தெசலோனிக்கர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1. முன்னுரை
வாழ்த்து
1நம் தந்தையாகிய கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உரிய தெசலோனிக்க திருச்சபைக்குப் பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது:
2நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
2. புகழாரம்
தீர்ப்பு நாள்
3சகோதர சகோதரிகளே! உங்கள் பொருட்டுக் கடவுளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே. ஏனெனில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஓங்கி வளருகின்றது; நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு பெருகி வழிகிறது.
4ஆகவேதான் நாங்கள் கடவுளின் சபைகளில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி வருகிறோம்; உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும் இன்னல்களுக்கு இடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும் நம்பிக்கையையும் முன்னிட்டுப் பெருமைப்படுகிறோம்.
5இவை, கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அறிகுறியாக அமைகின்றன. இவையனைத்தின் விளைவாக நீங்கள் இறையாட்சிக்குத் தகுதியுள்ளவர்களாவீர்கள். இந்த ஆட்சிக்காகவே நீங்கள் துன்புறுகிறீர்கள்.
6-7ஏனெனில் உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்குத் துன்பத்தையும் துன்புறுத்தப்படும் உங்களுக்குத் துயர் நீக்கி அமைதியையும் எங்களோடு கைம்மாறாக அளிப்பது கடவுளுடைய நீதியன்றோ! நம் ஆண்டவர் இயேசு வல்லமையுள்ள தம் தூதரோடு வானிலிருந்து வெளிப்படும் போது இப்படி நிகழும்.
8அப்பொழுது அவர் தீப்பிழம்பின் நடுவே தோன்றி, கடவுளை அறியாதவர்களையும் நம் ஆண்டவர் இயேசுவைப்பற்றிய நற்செய்தியை ஏற்காதவர்களையும் தண்டிப்பார்.
9இவர்கள் ஆண்டவருடைய சீர்மிகு மாட்சியைக் காண இயலாது, அவருடைய திருமுன்னிருந்து அகற்றப்பட்டு, முடிவில்லா அழிவைத் தண்டனையாகப் பெறுவர்.
10அந்நாளில் அவர் வரும்பொழுது இறைமக்கள் அவரைப் போற்றிப்புகழ்வர்; நம்பிக்கை கொண்டோர் அனைவரும் வியந்து போற்றுவர். நாங்கள் உங்களுக்கு அளித்த சான்றை நம்பி ஏற்றதினால் நீங்களும் அவ்வாறு செய்வீர்கள்.
11இதற்காகத்தான் நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் வேண்டுகிறோம். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக!
12இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!