புலம்பல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
எருசலேமின் துன்பங்கள்
1அந்தோ! மக்கள் மிகுந்த மாநகர்
தனியளாய் அமர்ந்தனளே!
நாடுகளில் மாண்புடையாள்
விதவைபோல் ஆனாளே!
மாநிலங்களின் இளவரசி
அடிமைப்பெண் ஆயினளே!
2ஆறாத் துயருற்று
இரவில் அவள் அழுகின்றாள்;
அவளின் கன்னங்களில்
கண்ணீர் வடிகின்றது;
அவளின் காதலரில்
தேற்றுவார் எவரும் இல்லை;
அவளின் நண்பர் அனைவரும்
அவளுக்குத் துரோகம் செய்து
பகைவர் ஆயினர்.
3இன்னலுற்ற அடிமையான யூதா
நாடுகடத்தப்பட்டாள்!
வேற்றினத்தாருடன் தங்கியிருக்கும்
அவள் அமைதி பெறவில்லை!
துரத்தி வந்தோர் இடுக்குகளிடையே
அவளை வளைத்து பிடித்தனர்!
4விழாக்களுக்குச் செல்பவர்
யாருமில்லை;
சீயோனுக்குச் செல்லும் வழிகள்
புலம்புகின்றன;
அவள் நுழைவாயில்கள்
பாழடைந்துள்ளன;
அவள் குருக்கள்
பெருமூச்சு விடுகின்றனர்;
அவளின் கன்னிப் பெண்கள்
ஏங்கித் தவிக்கின்றனர்;
அவளுக்கு வாழ்க்கையே கசப்பாயிற்று.
5உயர் தலைவர் ஆயினர்
அவளின் எதிரிகள்!
வளமுடன் வாழ்கின்றனர்
அவளின் பகைவர்!
அவளுடைய பல்வேறு குற்றங்களுக்காக
ஆண்டவர் அவளைத்
துன்பத்திற்கு உட்படுத்தினார்!
அவள் குழந்தைகளை எதிரிகள்
கைதியாக்கிக்கொண்டு போயினர்.
6அனைத்து மேன்மையும்
மகள் சீயோனை விட்டு அகன்றது;
அவள் தலைவர்கள்
பசும்புல் காணா
மான்கள்போல் ஆயினர்.
துரத்தி வருவோர் முன் அவர்கள்
ஆற்றல் அற்றவர் ஆயினர்.
7எருசலேம், தன் துன்ப நாள்களிலும்,
அகதியாய் வாழ்ந்தபோதும்,
முன்னாள்களில் தனக்கிருந்த
நலன்கள் அனைத்தையும்
நினைவுகூர்ந்தாள்;
அவளின் மக்கள்
எதிரிகளின் கைகளில்
சிக்கினார்கள்;
அவளுக்கு உதவி செய்வார்
யாருமில்லை; அவளது வீழ்ச்சியைக் கண்ட எதிரிகள்
அவளை ஏளனம் செய்தனர்.
8ஏராளமாய்ப் பாவம் செய்தாள்
எருசலேம்;
அதனால் அவள்
கறைப்பட்டவள் ஆனாள்;
அவளை முன்பு மதித்த அனைவரும்
அவமதித்தனர்;
அவளுடைய திறந்த
மேனியைக் கண்டனர்;
அவளும் பெருமூச்சுவிட்டுப்
பின்னோக்கித் திரும்பினாள்.
9ஐயகோ! அவள் தீட்டு
அவள் ஆடையில் தெரிகின்றதே!
அவள் தனக்கு வரவிருப்பதை
நினைவில் கொள்ள வில்லை!
அவளது வீழ்ச்சி
அதிர்ச்சியைத் தருகின்றது!
அவளைத் தேற்றுவார்
யாரும் இல்லை!
“ஆண்டவரே
என் துன்பத்தைப் பாரும்!
பகைவன் பெருமை பெற்றுவிட்டான்!”
10ஒப்பற்ற அவளது விருப்பமான
பொருளனைத்தின்மீதும்
கைவைத்தான் பகைவன்!
வேற்றினத்தார்
உம் சபைக்கு வருவதைத்
தடை செய்தீர்!
அன்னார் அவளது
திருத்தலத்தில் நுழைவதை
அவள் பார்த்து நின்றாள்!
11உணவைத் தேடி
அவளின் மக்கள் அனைவரும்
ஓலமிடுகின்றனர்!
உயிரைக் காத்திடத்
தம் ஒப்பற்ற பொருள்களை
உணவுக்காகத் தந்தனர்!
“ஆண்டவரே என்னைக் கண்ணோக்கும்!
நான் எத்தகு இழிநிலைக்கு
உள்ளானேன் என்று பாரும்!”
12இவ்வழியாய்க் கடந்து செல்வோரே!
உங்களுக்குக் கவலை இல்லையா?
அனைவரும் உற்றுப் பாருங்கள்!
எனக்கு வந்துற்ற துயர்போல
வேறேதும் துயர் உண்டோ?
ஆண்டவர் தம் வெஞ்சின நாளில்
என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினார்.
13மேலிருந்து அவர் நெருப்பினை
என் எலும்புகளுக்குள்
இறங்கச் செய்தார்!
என் கால்களுக்கு வலை விரித்தார்!
அவர் என்னைப்
பின்னடையச் செய்தார்!
அவர் என்னைப் பாழாக்கினார்!
நாள் முழுவதும்
நான் சோர்ந்து போகிறேன்.
14என் குற்றங்கள் என்னும் நுகம்
அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது;
அவை பிணைக்கப்பட்டு,
என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன;
அவர் என் வலிமையைக்
குன்றச் செய்தார்;
நான் எழ இயலாதவாறு
என் தலைவர் என்னை
அவர்கள் கையில் ஒப்புவித்தார்.
15என் தலைவர் என்னிடமுள்ள
வலியோர் அனைவரையும்
அவமதித்தார்;
என் இளைஞரை அடித்து நொறுக்க
அவர் எனக்கு எதிராக
ஒரு கூட்டத்தை வரவழைத்தார்;
மகள் யூதாவாகிய கன்னியை,
ஆலையில் திராட்சைப் பழத்தைப்
பிழிவதுபோல,
என் தலைவர் கசக்கிப் பிழிந்தார்.
16இவற்றின் பொருட்டு
நான் புலம்புகின்றேன்;
என் இரு கண்களும்
கண்ணீரைப் பொழிகின்றன;
என் உயிரைக் காத்து
ஆறுதல் அளிப்பவர்
எனக்கு வெகு தொலையில் உள்ளார்;
பகைவன் வெற்றி கொண்டதால்
என் பிள்ளைகள்
பாழாய்ப் போயினர்.
17சீயோன் தன் கைகளை
உயர்த்துகின்றாள்;
அவளைத் தேற்றுவார்
யாருமில்லை;
சூழ்ந்து வாழ்வோர்
யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு
ஆண்டவர் கட்டளையிட்டார்;
எருசலேம் அவர்களிடையே
தீட்டுப்பொருள் ஆயிற்று.
18ஆண்டவரோ நீதியுள்ளவர்;
நான் அவரது வாக்குக்கு எதிராகக்
கிளர்ச்சி செய்தேன்;
அனைத்து மக்களினங்களே,
செவிகொடுங்கள்;
என் துயரத்தைப் பாருங்கள்;
என் கன்னிப்பெண்களும்
இளைஞரும் நாடுகடத்தப்பட்டனர்.
19என் காதலர்களை அழைத்தேன்;
அவர்களோ என்னை ஏமாற்றினர்;
என் குருக்களும் பெரியோரும்
தங்கள் உயிரைக் காத்திட
உணவு தேடுகையில்,
நகரில் பசியால் மாண்டனர்.
20ஆண்டவரே,
என்னைக் கண்ணோக்கும்!
துயரில் நான் மூழ்கியுள்ளேன்!
நான் பெருங் கலகம் செய்துள்ளேன்!
என் குலை நடுங்குகின்றது!
என் இதயம் வெடிக்கின்றது!
வெளியே வாளுக்கு இரையாகினர்
என் பிள்ளைகள்!
வீட்டினுள்ளும் சாவு மயம்!
21நான் விடும் பெருமூச்சை
அவர்கள் கேட்டார்கள்;
என்னைத் தேற்றுவார்
யாரும் இல்லை;
என் எதிரிகள் அனைவரும்
எனக்கு நேரிட்ட தீங்கைப்பற்றிக்
கேள்வியுற்றனர்;
நீரே அதைச் செய்தீர் என
மகிழ்ச்சி அடைகின்றனர்!
நீர் அறிவித்த நாளை வரச் செய்யும்!
அவர்களும் என்னைப்போல்
ஆகட்டும்!
22அவர்கள் தீச்செயல்கள் அனைத்தும்
உம் திருமுன் வருவதாக!
என் அனைத்துக் குற்றங்களின் பொருட்டு,
நீர் என்னைத் தண்டித்தது போல்,
அவர்களையும் தண்டியும்!
விம்மல்கள் மிகப் பல!
என் இதயம் சோர்ந்துபோயிற்று!