லீமா நகர் புனித ரோசா – கன்னியர்
முதல் வாசகம்
கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்கும் இடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 17- 11: 2
சகோதரர் சகோதரிகளே,
“பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.” தமக்குத் தாமே நற்சான்று கொடுப்போர் அல்ல, மாறாக ஆண்டவரின் நற்சான்று பெற்றவரே ஏற்புடையவர் ஆவர்.
என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக் கொள்ள வேண்டும்; ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள்மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன். கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்கும் இடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 148: 1-2. 11-13a. 13b-14 (பல்லவி: 12a,13a காண்க)
பல்லவி: இளைஞரே, கன்னியரே, ஆண்டவரின் பெயரைப் போற்றுங்கள்.
அல்லது: அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 15: 9b, 5b
அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.