Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 30, 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 30, 2023

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 21ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

இராப் பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 9-13

அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம். நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் முன்பாக நாங்கள் மிகவும் தூய்மையோடும் நேர்மையோடும் குற்றமின்றியும் ஒழுகினோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, கடவுளும் சாட்சி! ஒரு தந்தை தம் பிள்ளைகளை நடத்துவதுபோல உங்களை நடத்தினோம். தம்முடைய ஆட்சியிலும் மாட்சியிலும் பங்குபெற உங்களை அழைக்கும் கடவுளுக்கு ஏற்ப நடக்குமாறு உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுரை வழங்கினோம்; உங்களை ஊக்குவித்தோம்; வற்புறுத்தினோம். இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவையே.

கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தைதான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 139: 7-8. 9-10. 11-12ab (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!

7உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?8நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! – பல்லவி

9நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,10அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். – பல்லவி

11‘உண்மையில் இருள் என்னை மூடிக்கொள்ளாதோ? ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?’ என்று நான் சொன்னாலும்,12abஇருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை; இரவும் பகலைப் போல ஒளியாய் இருக்கின்றது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 யோவா 2: 5

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 27-32

அக்காலத்தில்

இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுபடுத்துகிறீர்கள்; ‘எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள். உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2023 செப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2023 2024
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.