புனித மாக்சிமிலியன் மரிய கோல்பே – மறைப்பணியாளர், மறைச்சாட்சி (நினைவு)
பொதுக்காலம் 19ஆம் வாரம் – திங்கள்
முதல் வாசகம்
அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 10: 12-22
மோசே மக்களை நோக்கிக் கூறியது:
இஸ்ரயேலரே, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவர்தம் அனைத்து வழிகளிலும் நடந்து, அவர்மீது அன்புகூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து, உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்?
விண்ணும் விண்ணின் வானங்களும், மண்ணும் அதில் உள்ள அனைத்தும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியன. இருப்பினும், உங்கள் மூதாதையர்மீது பற்றுவைத்து அன்பு கூர்ந்தார். அவர்களுக்குப் பின் அவர்களுடைய வழிமரபினராகிய உங்களை எல்லா மக்கள் இனங்களினின்றும், இந்நாளில் இருப்பதுபோலத் தெரிந்து கொண்டார்.
ஆகவே, உங்கள் உள்ளத்தை விருத்தசேதனம் செய்யுங்கள். வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுதற்குரிய கடவுள் அவரே. அவர் ஓரவஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை. அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே. அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.
உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்; அவருக்கே பணி புரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் பெயராலே ஆணையிடுங்கள். அவரே உங்கள் புகழ்ச்சி! அவரே உங்கள் கடவுள்! உங்கள் கண்கள் கண்ட ஆற்றல்மிகு அச்செயல்களை உங்களுக்காகச் செய்தவர் அவரே. உங்கள் மூதாதையர் எழுபது ஆள்களாய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வானத்து விண்மீன்கள் போல் பெருகச் செய்துள்ளார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12)
பல்லவி: எருசலேமே! கடவுளாம் ஆண்டவரைப் புகழ்வாயாக!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 தெச 2: 14
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மானிட மகனைக் கொலை செய்வார்கள்; அவர் உயிருடன் எழுப்பப்படுவார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 22-27
அக்காலத்தில்
கலிலேயாவில் சீடர்கள் ஒன்றுதிரண்டிருக்கும் போது இயேசு அவர்களிடம், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்.
அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தபோது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டனர். அவர், “ஆம், செலுத்துகிறார்” என்றார்.
பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?” என்று கேட்டார். “மற்றவரிடமிருந்துதான்” என்று பேதுரு பதிலளித்தார்.
இயேசு அவரிடம், “அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல. ஆயினும் நாம் அவர்களுக்குத் தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.