பொதுக்காலம் 17ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
யூபிலி ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.
லேவியர் நூலிலிருந்து வாசகம் 25: 1, 8-17
ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது:
தொடர்ந்து வரும் ஏழு ஓய்வுஆண்டுகளை – ஏழேழு ஆண்டுகளாக – ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச் செய்யுங்கள். ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கு எல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு – அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும். ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம். கிளை நறுக்காத திராட்சைக் கொடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்; ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள்.
அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள். யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும். பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான். உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 3)
பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12
அக்காலத்தில்
குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான்.
ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம், “நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல” என்று சொல்லி வந்தார். ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.
ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர்முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்; அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.
யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.