பொதுக்காலம் 21ஆம் வாரம் – ஞாயிறு
முதல் வாசகம்
தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 22: 19-23
உன்னை உன் பதவியிலிருந்து இறக்கி விடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன். அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான்.
அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்ட மாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்க மாட்டான். உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 138: 1-2a. 2bc-3. 6,8bc (பல்லவி: 8bc)
பல்லவி: ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.
இரண்டாம் வாசகம்
அனைத்தும் கடவுளிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 33-36
சகோதரர் சகோதரிகளே,
கடவுளின் அருள்செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! “ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?” அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 16: 18
அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-20
அக்காலத்தில்
இயேசு, பிலிப்புச் செசாரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.
“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.
பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.