ஆண்டவரின் தோற்றமாற்றம்
முதல் வாசகம்
அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.
இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 97: 1-2. 5-6. 9 (பல்லவி: 9a, 1a)
பல்லவி: உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.
இரண்டாம் வாசகம்
விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.
திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-19
சகோதரர் சகோதரிகளே,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள்.
“என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.
எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற் கொள்வது நல்லது; ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 17: 5c
அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9
அக்காலத்தில்
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின.
இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.
பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.
இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்த போது இயேசு, “மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக் கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.