பொதுக்காலம் 21ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பில் வளர்வீர்களாக.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-13
அன்பர்களே! எங்கள் இன்னல் இடுக்கண்கள் நடுவிலும் உங்களது நம்பிக்கையைக் கண்டு உங்களால் நாங்கள் ஆறுதல் அடைகிறோம். நீங்கள் ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருக்கிறீர்கள் என்று அறிந்ததும் எங்களுக்கு உயிர் வந்தது. நம் கடவுள் முன்னிலையில் உங்களால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அதற்காக உங்கள் பொருட்டு எத்தகைய நன்றியை அவருக்குக் கைம்மாறாகக் காட்ட இயலும்? நாங்கள் உங்கள் முகத்தைக் காணவும், உங்கள் நம்பிக்கையில் குறைவாக உள்ளவற்றை நிறைவாக்கவும், அல்லும் பகலும் மிகுந்த ஆர்வமுடன் மன்றாடுகிறோம்.
இப்பொழுது நம் தந்தையாம் கடவுளும், நம் ஆண்டவராம் இயேசுவும் உங்களிடம் வருவதற்கான வழியை எங்களுக்குக் காட்டுவார்களாக! உங்கள்மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 90: 3-4. 12-13. 14,17 (பல்லவி: 14)
பல்லவி: உமது பேரன்பால் நிறைவளியும்; நாங்கள் களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 24: 42a, 44
அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஆயத்தமாய் இருங்கள். நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51
அக்காலத்தில்
இயேசு தம் சீடரிடம் கூறியது: “விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.
தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.