பொதுக்காலம் 17ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
மேகம் சந்திப்புக் கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 40: 16-21, 34-38
அந்நாள்களில்
ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே செயல்பட்டார். இரண்டாம் ஆண்டில், முதல் மாதம், முதல் தேதியன்று திருஉறைவிடம் எழுப்பப்பட்டது. மோசே திருஉறைவிடத்தை எழுப்பினார்; பாதப் பொருத்துகளை வைத்து அதன்மேல் சட்டங்களைப் பொருத்தினார், குறுக்குச் சட்டங்களையும் பொருத்தினார்; தூண்களையும் நிறுத்தினார். திருஉறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்; அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது. உடன்படிக்கைப் பலகையை அவர் எடுத்து, அதைப் பேழையில் வைத்தார். தண்டுகளைப் பேழையில் செருகினார். இரக்கத்தின் இருக்கையைப் பேழையின்மேல் வைத்தார். திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது. திருத்தூயகத் திரை தொங்கவிடப்பட்டு, உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது. இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்.
பின்பு, மேகம் சந்திப்புக் கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று. சந்திப்புக் கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று. இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மேகம் திருஉறைவிடத்தை விட்டு எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள். மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள் வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள். ஏனெனில் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 84: 2. 3. 4-5a,7a. 10 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திப 16: 14b
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53
அக்காலத்தில்
இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”
“இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள், “ஆம்” என்றார்கள். பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.
இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.