கலசான்ஸ் நகர் புனித யோசேப்பு – மறைப்பணியாளர் (வி.நினைவு)
புனித லூயி – மறைப்பணியாளர் (வி.நினைவு)
பொதுக்காலம் 20ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
நகோமியும் அவர்தம் மருமகளான மோவாபியப் பெண் ரூத்தும் பெத்லகேம் வந்தனர்.
ரூத்து நூலிலிருந்து வாசகம் 1: 1, 3-6, 14b-16, 22
நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில், நாட்டில் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார்ந்த ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக்கொண்டு மோவாபு நாட்டிற்குச் சென்றார். அவர் பெயர் எலிமலேக்கு.
அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேக்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார்.
அவ்விருவரும் மோவாபு நாட்டுப் பெண்களை மணந்துகொண்டனர். ஒருவர் பெயர் ஓர்பா; மற்றவர் பெயர் ரூத்து. அவர்கள் பிழைக்க வந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆயின. பிறகு, மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந்தனியராய் விடப்பட்டார்.
நகோமியின் சொந்த நாட்டில் ஆண்டவர் தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கி, அவர்களுக்கு உணவு கிடைக்கும்படி செய்தார். இதை நகோமி மோவாபு நாட்டில் இருந்தபோதே கேள்விப்பட்டார். எனவே, அவர் மோவாபு நாட்டை விட்டுப்போக ஏற்பாடு செய்தார்.
அதைக் கேட்டு அவர்கள் மீண்டும் கதறி அழுதார்கள். பிறகு ஓர்பா தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார். ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார்.
நகோமி அவரிடம், “இதோ பார்! உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப் போ” என்றார்.
அதற்கு ரூத்து, “உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல்லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்” என்றார்.
இவ்வாறு, நகோமியும் அவர்தம் மருமகளான மோவாபியப் பெண் ரூத்தும் அந்நாட்டை விட்டுத் திரும்பி வந்தனர். அவர்கள் பெத்லகேம் ஊர் வந்து சேர்ந்தபோது, வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 146: 5-6. 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1b)
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
அல்லது: அல்லேலூயா.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 25: 4c, 5a
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
அக்காலத்தில்
இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.
அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.