திருத்தூதர் பணிகள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
ஸ்தேவானின் அருளுரை
1தலைமைக் குரு, “இவையெல்லாம் உண்மைதானா?” என்று கேட்டார்.
2அதற்கு ஸ்தேவான் கூறியது: “சகோதரரே, தந்தையரே, கேளுங்கள். நம் தந்தையாகிய ஆபிரகாம் காரான் நகரில் குடியேறுமுன்பு மெசப்பொத்தாமியாவில் வாழ்ந்து வந்தபோது மாட்சி மிகு கடவுள் அவருக்கு தோன்றி,
3“நீ உன் நாட்டிலிருந்தும்
உன் இனத்தாரிடமிருந்தும் புறப்பட்டு,
நான் உனக்குக் காண்பிக்கும்
நாட்டிற்குச் செல்”
என்று கூறினார்.
4அதன்பின் அவர் கல்தேயருடைய நாட்டைவிட்டு வெளியேறிக் காரான் நகரில் வந்து அங்கே குடியிருந்தார். அவருடைய தந்தை இறந்தபின்பு, நீங்கள் இப்போது குடியிருக்கும் இந்நாட்டுக்குக் கூட்டி வந்து இங்குக் குடிபெயரச் செய்தார்.
5இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.
6மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாட்டில் அந்நியராய்க் குடியிருப்பர். நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்.
7‘அவர்கள் அடிமை வேலை
செய்யும் நாட்டுக்குத்
தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்.
அதற்குப்பின் அவர்கள்
அங்கிருந்து வெளியேறி
இவ்விடத்துக்கு வந்து
என்னை வழிபடுவார்கள்’
என்றும் அவர் உரைத்துள்ளார்.
8பின் அவர் விருத்தசேதனத்தை அடையாளமாகக் கொண்ட உடன்படிக்கையை ஆபிரகாமுக்கு கொடுத்தார். அதன்படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்து எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார். அவ்வாறே ஈசாக்கு யாக்கோபுக்கும், யாக்கோபு பன்னிரு குலமுதல்வருக்கும் செய்தனர்.
9“பின் நம் குலமுதல்வர்கள் பொறாமை கொண்டு யோசேப்பை எகிப்தியருக்கு விற்றுவிட்டனர். ஆனால், கடவுள் அவரோடு இருந்தார்.
10அவருக்கு வந்த அனைத்து இன்னல்களினின்றும் அவர் அவரை விடுவித்தார்; அத்துடன் எகிப்திய அரசரான பார்வோன் பார்வையில் யோசேப்புக்கு அருளையும் ஞானத்தையம் வழங்கினார். அரசர் அவரை எகிப்து நாட்டுக்கும் தன் உடைமை அனைத்துக்கும் ஆளுநராக நியமித்தார்.
11பின் எகிப்து, கானான் ஆகிய நாடுகள் அனைத்திலும் பஞ்சமும் அதனால் மிகுந்த இன்னலும் எற்பட்டன. நம் மூதாதையருக்கும் உணவு கிடைக்கவில்லை.
12அப்போது யாக்கோபு எகிப்து நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டு, முதன்முறையாக நம் மூதாதையரை அங்கு அனுப்பி வைத்தார்.
13இரண்டாம் முறை அவர்களை அனுப்பியபோது, யோசேப்பு தம் சகோதரர்களுக்குத் தாம் யார் என்று தெரியப்படுத்தினார். பார்வோனுக்கும் யோசேப்பின் இனத்தார் யார் என்பது தெளிவாயிற்று.
14பின்பு, யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.
15யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர்.
16அவர்களுடைய உடல்கள் செக்கேமுக்குக் கொண்டு செல்லப்பட்டன; அங்கு, ஆபிரகாம் அமோரின் மைந்தர்களிடம் வெள்ளிக் காசுகளை விலையாக கொடுத்து வாங்கிய கல்லறையில் வைக்கப்பட்டன.
17ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் நேரம் நெருங்கியபோது மக்கள் எகிப்து நாட்டில் மிகுதியாகப் பல்கிப் பெருகியிருந்தனர்.
18இறுதியில் எகிப்து நாட்டில் யோசேப்பை அறியாத வேறோர் அரசன் தோன்றினான்.
19அவன் நம் இனத்தவரை வஞ்சகத்துடன் கொடுமையாக நடத்தி, நம் மூதாதையர் தங்கள் குழந்தைகளை வெளியே எறிந்து சாகடிக்கச் செய்தான்.
20அக்காலத்தில்தான் மோசே பிறந்தார். கடவுளுக்கு உகந்தவரான அவர் மூன்று மாதம் தந்தை வீட்டில் பேணி வளர்க்கப்பட்டார்.
21பின்பு, வெளியே எறியப்பட்ட அவரை பார்வோனின் மகள் தத்தெடுத்துத் தன் சொந்த மகனைப் போல் பேணி வளர்த்தார்.
22மோசே எகிப்து நாட்டின் கலைகள் அனைத்தையும் பயின்று சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.
23அவருக்கு நாற்பது வயதானபோது, தம் சகோதரர்களாகிய இஸ்ரயேல் மக்களின் நிலைமையைச் சென்று கவனிக்க வேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் எழுந்தது.
24அப்போது அவர்களுள் ஒருவருக்கு ஓர் எகிப்தியன் தீங்கு விளைவித்ததைக் கண்டு, அவருக்குத் துணை நின்று, ஊறு விளைவித்தவனை வெட்டி வீழ்த்திப் பழி வாங்கினார்.
25தம் கையால் கடவுள் தம் சகோதரர்களுக்கு விடுதலை கொடுப்பார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால், அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை.
26மறுநாள் சிலர் சண்டையிடுவதைக் கண்டு, “நீங்கள் சகோதரர்கள் அல்லவா? ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்?” என்று கூறி அவர்களிடையே அமைதியும் நல்லுறவும் ஏற்படுத்த முயன்றார்.
27ஆனால், தீங்கிழைத்தவன்
‘எங்களுக்கு உன்னைத் தலைவனாகவும்
நடுவனாகவும் நியமித்தவர் யார்?
28நேற்று எகிப்தியனைக்
கொன்றதுபோல் என்னையும்
கொல்லவா எண்ணுகிறாய்?’
என்று கூறி அவரைப் பிடித்து அப்பால் தள்ளினான்.
29இதைக் கேட்ட மோசே அங்கிருந்து தப்பி, மிதியான் நாட்டுக்குச் சென்று அந்நியராக வாழ்ந்து வந்தார். அங்கு அவருக்கு மைந்தர் இருவர் பிறந்தனர்.
30நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டவரின் தூதர் சீனாய் மலை அருகே உள்ள பாலைநிலத்தில் ஒரு முட்புதர் நடுவே தீப்பிழம்பில் தோன்றினார்.
31மோசே இந்தக் காட்சியைக் கண்டு வியப்புற்றார். அதைக் கூர்ந்து கவனிக்கும்படி அவர் நெருங்கிச் சென்றபோது,
32“உன்னுடைய மூதாதையராகிய
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின்
கடவுள் நானே”
என்று ஆண்டவரின் குரல் ஒலித்தது. மோசே நடுநடுங்கி இக்காட்சியைக் கூர்ந்து கவனிக்கத் துணியவில்லை.
33கடவுள் அவரிடம்,
“உன் கால்களிலிருந்து
மிதியடிகளை அகற்றிவிடு.
ஏனெனில், நீ நின்றுகொண்டிருக்கிற
இந்த இடம் புனிதமான நிலம்.
34எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை
என் கண்களால் கண்டேன்.
அவர்களது ஏக்கக் குரலைக் கேட்டேன்.
அவர்களை விடுவிக்கும்படி
இறங்கி வந்துள்ளேன்.
உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன்.
இப்போதே வா” என்றார்.
35முன்பு, ‘உன்னைத் தலைவனாகவும்
நடுவனாகவும் நியமித்தவர் யார்?’
என்று கூறி மக்கள் மோசேயை ஏற்க மறுத்தார்கள். ஆனால், அதே மோசேயையே கடவுள் முட்புதரில் தோன்றிய தம்தூதர் வழியாய்த் தலைவராகவும் மீட்பராகவும் அனுப்பினார்.
36அவர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார்; அங்கும் செங்கடலிலும் நாற்பது ஆண்டுகளாகப் பாலைநிலத்திலும் அருஞ்செயல்களையும் அடையாளச் செயல்களையும் புரிந்தார்.
37“கடவுள் என்னைப்போன்ற இறைவாக்கினர் ஒருவரைச் சகோதரர்களாகிய உங்கள் நடுவிலிருந்து தோன்றச் செய்வார்” என்று இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும் இதே மோசேதான்.
38பாலை நிலத்தில் மக்கள் சபையாகக் கூடியபோது சீனாய் மலையில் தம்மோடு பேசிய தூதருக்கும் நம் மூதாதையருக்கும் இடையே நின்றவர் இவரே. வாழ்வளிக்கும் வார்த்தைகளை நமக்குப் பெற்றுத் தந்தவரும் இவரே.
39ஆனால், நம் மூதாதையர் அவருக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரை உதறித் தள்ளினர்; எகிப்துக்குத் திரும்பிச் செல்ல உளம் கொண்டனர்.
40அவர்கள் ஆரோனை நோக்கி,
“எகிப்து நாட்டினின்று எங்களை
நடத்தி வந்த அந்தஆள் மோசேக்கு
என்ன ஆயிற்றோ தெரியவில்லை.
எங்களை வழி நடத்தும் தெய்வங்களை நீர்
எங்களுக்கு உருவாக்கிக் கொடும்”
என்று கேட்டார்கள்.
41அக்காலத்தில் அவர்கள் ஒரு கன்றுக்குட்டிச் சிலையைச் செய்து அதற்குப் பலி செலுத்தினார்கள். தாங்களே செய்துகொண்ட சிலைக்குமுன் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.
42ஆகவே, கடவுள் அவர்களிடமிருந்து விலகி, வான்வெளிக் கோள்களை வணங்குமாறு அவர்களை விட்டுவிட்டார். இதைக் குறித்து இறைவாக்கினர் நூலில்,
‘இஸ்ரயேல் வீட்டாரே,
பாலைநிலத்தில் இருந்த அந்த
நாற்பது ஆண்டுகளில்
பலிகளும் காணிக்கைகளும்
எனக்குக் கொடுத்தீர்களோ?
43நீங்கள் மோளோக்குடைய
கூடாரத்தையும்,
உங்கள் தெய்வமாகிய
இரேப்பானுடைய விண்மீனையும்
தூக்கிக் கொண்டு சென்றீர்கள்.
நீங்கள் இந்தச் சிலைகளை
வணங்குவதற்கென்றே செய்தீர்கள்.
எனவே நான் உங்களைப்
பாபிலோனுக்கும் அப்பால்
குடி பெயரச் செய்வேன்’
என்று எழுதப்பட்டுள்ளது.
44பாலை நிலத்தில் நம் மூதாதையருக்குச் சந்திப்புக் கூடாரம் இருந்தது. கடவுள் மோசேயோடு பேசியபோது அவருக்குக் காண்பித்த மாதிரியின்படி அதனை அமைக்கப்பணித்திருந்தார்.
45பின்பு ,நம் மூதாதையர் தங்கள் முன்பாகக் கடவுள் விரட்டியடித்த வேற்றினத்தாரின் நாடுகளை யோசுவாவின் தலைமையில் கைப்பற்றியபோது அவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து பெற்றிருந்த அந்தக் கூடாரத்தையும் கொண்டு வந்தனர். தாவீது காலம் வரை அக்கூடாரம் அங்கேயே இருந்தது.
46தாவீது கடவுளின் அருளைப் பெற்றிருந்தார். எனவே, அவர் யாக்கோபின் வீட்டார் வழிபடக் கடவுளுக்கு ஓர் உறைவிடம் அமைக்க விரும்பி அவரை வேண்டிக் கொண்டார்.
47ஆனால், கடவுளுக்குக் கோவில் கட்டியெழுப்பியவர் சாலமோனே.
48“உன்னத கடவுளோ மனிதர் கையால் கட்டிய இல்லங்களில் குடியிருப்பதில்லை” என்று இறைவாக்கினர் கூறியது போல,
49‘விண்ணகம் என் அரியணை;
மண்ணகம் என் கால்மணை;
அவ்வாறிருக்க,
எத்தகைய கோயிலை நீங்கள்
எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்?
எத்தகைய இடத்தில்
நான் ஓய்வெடுப்பேன்?
50இவை அனைத்தையும்
என் கைகளே உண்டாக்கின’
என்கிறார் ஆண்டவர்.
51திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள்.
52எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமலிருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள்.
53கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச் சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை.”
ஸ்தேவான் மீது கல்லெறிதல்
54இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள்.
55அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்று நோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு,
56“இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார்.
57ஆனால், அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக் கொண்டு பெருங் கூச்சலிட்டு ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள்.
58நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்.
59அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக் கொண்டார்.
60பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்.