திருத்தூதர் பணிகள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
பவுல் மாசிதோனியா, கிரேக்க நாடு செல்லுதல்
1கலகம் ஓய்ந்தபின் பவுல் சீடர்களை வரவழைத்து அவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை வாழ்த்தி விட்டு மாசிதோனியா புறப்பட்டுச் சென்றார்.
2அந்தப் பகுதி வழியாகச் சென்று அங்குள்ளோர்க்கு அறிவுரைகள் பல கூறியபின் கிரேக்க நாடு போய்ச் சேர்ந்தார்;
3அங்கே அவர் மூன்று மாதங்கள் செலவிட்டார். பின் சிரியாவுக்குக் கப்பலேறப் போகும்போது யூதர்கள் அவருக்கு எதிராகச் சதித்திட்டமிட்டதால் அவர் மாசிதோனியா வழியாகத் திரும்பத் தீர்மானித்தார்.
4பெரோயா நகர் பீருவின் மகன் சோப்பத்தர், தெசரோனிக்காவைச் சேர்ந்த அரிஸ்தர்க்கு, செக்குந்து, தெருபையைச் சேர்ந்த காயு, திமொத்தேயு, ஆசியாவைச் சேர்ந்த திக்கிக்கு, துரொப்பிம் ஆகியோரும் அவரோடு சென்றனர்.
5அவர்கள் முன்னே சென்று துரோவாவில் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
6நாங்கள் புளிப்பற்ற அப்பவிழா நாள்களுக்குப் பின்பு பிலிப்பியிலிருந்து கப்பலேறினோம். ஐந்து நாளில் துரோவாவில் இருந்த அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அங்கு ஏழு நாள் தங்கினோம்.
பவுல் துரோவாவுக்கு இறுதியாகச் செல்லுதல்
7வாரத்தின் முதல் நாள் அப்பம் பிடுவதற்காக நாங்கள் கூடியிருந்தோம். மறுநாள் பவுல் புறப்பட வேண்டியிருந்ததால் நள்ளிரவு வரை அவர் அவர்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார்.
8நாங்கள் கூடியிருந்த மேல் மாடியில் விளக்குகள் பல இருந்தன.
9யூத்திகு என்னும் இளைஞர் ஒருவர் பலகணியில் உட்கார்ந்திருந்தார். பவுல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்; தூக்கத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தார்; அவரை அவர்கள் பிணமாகத்தான் தூக்கி எடுத்தார்கள்.
10பவுல் கீழே இறங்கி வந்து அவர் மீது படுத்து அணைத்துக்கொண்டு, “அமளியை நிறுத்துங்கள்; இவர் உயிரோடுதானிருக்கிறார்” என்று கூறினார்.
11பின் மாடிக்குச் சென்று அப்பம் பிட்டு உண்டார். பொழுது புலரும் வரை நீண்ட நேரம் அவர்களோடு உரையாடியபின் புறப்பட்டுச்சென்றார்.
12உயிர்பெற்ற இளைஞரை அவர்கள் அழைத்துச்சென்று மிகவும் ஆறுதல் அடைந்தார்கள்.
துரோவாவிலிருந்து மிலேத்துவுக்குச் செல்லுதல்
13நாங்கள் கப்பலேறிப் பவுலுக்கு முன்பாக ஆசோ நகர்வரை சென்றோம். அங்கிருந்து அவரைக் கப்பலில் ஏற்றிச்செல்லவிருந்தோம். ஏனெனில், அந்நகர்வரை தரைவழியாகச் செல்ல அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
14ஆசோவில் அவர் எங்களைச் சந்தித்தார்; அவரை ஏற்றிக்கொண்டு மித்திலேன் நகருக்குச் சென்றோம்.
15அங்கிருந்து கப்பலேறி மறுநாள் கீயு தீவின் எதிர்ப்புறம் சென்றடைந்தோம். அதற்கு அடுத்த நாள் சாமு தீவுக்கும் அதற்கு அடுத்த நாள் மிலேத்து நகருக்கும் சென்றோம்.
16பவுல் ஆசியாவில் காலம் தாழ்த்த விரும்பாததால் எபேசுக்குப் போகாமலே எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்திருந்தார்; முடியுமானால் பெந்தக்கோஸ்து நாளில் அங்கிருக்க வேண்டும் என்று விரைவாய்ச் சென்றார்.
பவுல் எபேசு மூப்பர்களிடமிருந்து விடை பெறுதல்
17பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆளனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார்.
18அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது: “நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
19யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன்.
20நன்மை பயக்குமொன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டு விடவில்லை; பொது இடங்களிலும் வீடுவீடாகவும் சென்று உங்களுக்குக் கற்றுக் கொடுத்தேன்.
21நம் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறும், மனம்மாறி கடவுளிடம் வந்து சேருமாறும் நான் யூதரிடமும் கிரேக்கரிடமும் வற்புறுத்திக் கூறினேன்.
22இப்போதும் தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு நான் எருசலேமுக்குச் செல்லுகிறேன். அங்கு எனக்கு என்ன நேரிடுமென்பது தெரியாது.
23சிறை வாழ்வும், இன்னல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று தூய ஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார்.
24என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைப் பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்.
25இதுவரை நான் உங்களிடையே வந்து இறையாட்சியைப் பற்றி பறைசாற்றினேன். ஆனால், இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை என்று நான் அறிவேன்.
26உங்களுள் எவரது அழிவுக்கும் நான் பொறுப்பாளியல்ல என்று இன்று நான் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
27கடவுளின் திட்டம் எதையும் நான் உங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிடவில்லை.
28தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும்.
30உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.
31எனவே, விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள்.
32இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்குமுரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்லது.
33எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை.
34என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடிருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
35இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன்.”
36இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள் படியிட்டு அவர்களெல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார்.
37பின் எல்லாரும் பவுலைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கதறி அழுதனர்.
38“இனி மேல் நீங்கள் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை” என்று அவர் கூறியது அவர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும் சென்று அவரை வழியனுப்பி வைத்தனர்.