திருத்தூதர் பணிகள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
மால்தா தீவில் பவுல்
1நாங்கள் தப்பிக் கரை சேர்ந்த பின், அந்தத் தீவின் பெயர் மால்தா என்று அறிந்துகொண்டோம்.
2அத்தீவினர் எங்களிடம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர். மழை பெய்து குளிராயிருந்த காரணத்தால் அவர்கள் தீ மூட்டி எங்கள் அனைவரையும் அருகே அழைத்துச் சென்றனர்.
3பவுல் சுள்ளிகளைப் பொறுக்கிச் சேர்த்துத் தீயில் போட்டபோது, ஒரு விரியன் பாம்பு சூட்டின் மிகுதியால் வெளியே வந்து, அவரது கையைப் பற்றிக் கொண்டது.
4அவர் கையில் பாம்பு தொங்குவதை அத்தீவினர் பார்த்தபோது, “இவன் ஒரு கொலைகாரன் என்பது உறுதி. கடலிருந்து இவன் தப்பித்துக் கொண்டாலும் நீதியின் தெய்வம் இவனை வாழவிடவில்லை” என்று ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள்.
5ஆனால், அவர் அந்தப் பாம்பை நெருப்பில் உதறினார். அவருக்குக் கேடு எதுவும் நேரிடவில்லை.
6அவருக்கு வீக்கம் ஏற்படப் போகிறது அல்லது திடீரெனச் செத்து விழப்போகிறார் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அவருக்குத் தீங்கு எதுவும் ஏற்படாததைக் கண்டு தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள்; அவர் ஒரு தெய்வம் என்று சொல்லத் தொடங்கினார்கள்.
7அந்த இடத்துக்கு அருகில் அத்தீவின் தலைவருடைய நிலங்கள் இருந்தன. அவர் பெயர் புப்பிலியு. அவர் எங்களை வரவேற்று மூன்று நாள் அன்புடன் விருந்தோம்பினார்.
8புப்பிலியுவினது தந்தை காய்ச்சலினாலும் வயிற்று அளைச்சலாலும் நோயுற்றுக் கிடந்தார். பவுல் அங்குச் சென்று அவர்மேல் தம் கையை வைத்து இறைவனிடம் வேண்டி அவரை நலமாக்கினார்.
9இந்நிகழ்ச்சிக்குப்பின் அத்தீவில் நோயுற்றிருந்த ஏனையோரும் அவரிடம் வந்து குணமடைந்தனர்.
10அவர்கள் எங்களுக்கு மதிப்பு அளித்து பல கொடைகளையும் தந்தார்கள்; நாங்கள் கப்பலேறியபோது எங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் கொடுத்தார்கள்.
பவுல் உரோமையை அடைதல்
11மூன்று மாதங்களுக்குப்பிறகு குளிர் காலத்தில் அத்தீவில் ஒதுங்கியிருந்த ஒரு சிறிய கப்பலில் ஏறினோம். அதில் மிதுனச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அது அலக்சாந்தரியாவைச் சார்ந்தது.
12நாங்கள் சிரக் கூசா துறைமுகத்தை அடைந்து அங்கு மூன்று நாள் தங்கியிருந்தோம்.
13அங்கிருந்து கரையோரமாகச் சுற்றி வந்து இரேகியு என்னுமிடத்தை அடைந்தோம். ஒரு நாள் அங்குத் தங்கிய பின் தெற்கிலிருந்து காற்று வீசுவே இரண்டாம் நாள் புத்தயோலி என்னுமிடம் சென்றோம்.
14அங்கு நாங்கள் சகோதரர் சகோதரிகளைக் கண்டோம். நாங்கள் அவர்களோடு ஏழு நாள் தங்குமாறு அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டார்கள். அதன்பின் நாங்கள் உரோமை போய்ச் சேர்ந்தோம்.
15அங்குள்ள சகோதரர் சகோதரிகள் எங்களைப்பற்றிக் கேள்வியுற்று, ‘அப்பியு சந்தை’* ‘மூன்றுவிடுதி’ என்னுமிடங்கள் வரை எங்களை எதிர்கொண்டு வந்தார்கள். பவுல் அவர்களைக் கண்டபோது துணிவு கொண்டு கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.
16நாங்கள் உரோமைக்கு வந்தபோது பவுல் தனி வீட்டில் தங்கியிருக்க அனுமதி பெற்றுக் கொண்டார். ஆனால், படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார்.
பவுல் உரோமையில் நற்செய்தி அறிவித்தல்
17மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, “சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும், எருசலேமில் நான் கைது செய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன்.
18அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.
19யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், “சீசரே என்னை விசாரிக்க வேண்டும்” என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். ஆனால், என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை.
20இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன். இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்” என்றார்.
21அவர்கள் அவரை நோக்கி, “உம்மைக் குறித்து எங்களுக்கு யூதேயாவிலிருந்து கடிதமொன்றும் வரவில்லை. மேலும், இங்கு வந்த சகோதரருள் எவரும் உம்மைக் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை; தீயது எதுவும் பேசவுமில்லை.
22ஆயினும், இதுபற்றி நீர் எண்ணுவதை நாங்கள் கேட்டறிய விரும்புகிறோம். ஏனெனில், இந்தக் கட்சியை எல்லா இடங்களிலும் மக்கள் எதிர்த்துப் பேசுகிறார்கள் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றார்கள்.
23அதற்காக ஒரு நாளைக் குறித்தார்கள். அன்று பலர் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வந்தனர். பவுல் காலை முதல் மாலை வரை அவர்களுக்கு இறையாட்சியைப் பற்றிச் சான்றுகளுடன் விளக்கினார். மோசேயின் சட்டம் மற்றும் இறைவாக்கினர் நூல்கள் அடிப்படையில் இயேசுவை அவர்கள் நம்பும்படி செய்தார்.
24சிலர் பவுல் கூறியதை நம்பினர்; மற்றவர்கள் நம்பவில்லை.
25இப்படி அவர்கள், தங்களிடையே மன வேற்றுமை கொண்டவர்களாய்க் கலைந்து செல்லும்போது பவுல் அவர்களிடம் ஒன்று கூறினார்; “நம் மூதாதையருக்கு இறைவாக்கினர் எசாயா மூலம் தூய ஆவியார் பின்வருபவற்றைப் பொருத்தமாகக் கூறியுள்ளார்;
26-27“நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து
கேட்டும் கருத்தில் கொள்வதில்லை.
உங்கள் கண்களால்
பார்த்துக் கொண்டேயிருந்தும்
உணர்வதில்லை.
இம்மக்களின் இதயம்
கொழுத்துப் போய்விட்டது.
காதுகள் மந்தமாகிவிட்டன.
இவர்கள் தம் கண்களை
மூடிக் கொண்டார்கள்;
எனவே, கண்ணால் காணாமலும்
காதால் கேளாமலும்
உள்ளத்தால் உணராமலும்
மனம் மாறாமலும் இருக்கின்றனர்.
நானும் அவர்களைக்
குணமாக்காமல் இருக்கிறேன் என
நீ இம்மக்களிடம் போய்ச் சொல்.”
28“ஆகையால் கடவுள் இந்த மீட்பைப் பிற இனத்தார்க்கு அளித்துள்ளார். அவர்கள் செவி சாய்ப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும்.”
29அவர் இப்படிச் சொன்னதும் யூதர்கள் தங்களிடையே மிகுந்த வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து போய்விட்டார்கள்.
30பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று,
31இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுத் துணிவோடு தடையேதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.