திருத்தூதர் பணிகள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
யாக்கோபு கொலை செய்யப்படுதலும் பேதுரு சிறையிடப்படுதலும்
1அக்காலத்தில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான்.
2யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான்.
3அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்பவிழா நாள்களில் நடந்தது.
4அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப்பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான்.
5பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது.
பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்படல்
6ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்துகொண்டிருந்தார்கள்.
7அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, “உடனே எழுந்திடும்” என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.
8வானதூதர் அவரிடம், “இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக் கொள்ளும்” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், “உமது மேலுடையை அணிந்து கொண்டு என்னைப் பின்தொடரும்” என்றார்.
9பேதுரு வானதூதரைப் பின் தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார்.
10அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரைவிட்டு அகன்றார்.
11பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, “ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்” என்றார்.
12அவர் யாவற்றையும் புரிந்துகொண்டவராய் மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் வீட்டுக்குப் போனார். அங்கே பலர் ஒருங்கிணைந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.
13அவர் வெளிக் கதவைத் தட்டியபோது ரோதி என்னும் பெயருடைய பணிப்பெண், தட்டியது யாரெனப் பார்க்க வந்தார்.
14அது பேதுருவின் குரல் என்பதை உணர்ந்ததும் மகிழ்ச்சியால் வாயிலைத் திறக்காமல் உள்ளே ஓடி, பேதுரு வாயில் அருகே நிற்கிறார் என்று அறிவித்தார்.
15அவர்கள் அவரை நோக்கி, “உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா?” என்று கேட்டார்கள். ஆனால் அவர், “அது உண்மையே” என்று வலியுறுத்திக் கூறினார். அதற்கு அவர்கள், “அது அவருடைய வானதூதராய் இருக்கலாம்” என்றார்கள்.
16பேதுரு விடாமல் தட்டிக் கொண்டேயிருந்தார். கதவைத் திறந்தபோது, அவர்கள் அவரைக் கண்டு மலைத்துப் போனார்கள்.
17அவர்கள் அமைதியாயிருக்குமாறு பேதுரு கையால் சைகை காட்டி ஆண்டவர் எவ்வாறு தம்மைச் சிறையிலிருந்து வெளியே கூட்டி வந்தார் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்து யாக்கோபுக்கும் மற்றச் சகோதரர் சகோதரிகளுக்கும் இதை அறிவிக்குமாறு கூறினார். பின்பு அவர் புறப்பட்டு வேறோர் இடத்துக்குப் போய்விட்டார்.
18பொழுதுவிடிந்ததும், பேதுருவுக்கு என்ன ஆயிற்று என்பது பற்றிப் படைவீரர்களிடையே பெருங்குழப்பம் ஏற்பட்டது.
19ஏரோது அவரைத் தேடிப் பார்க்கச் செய்தான். அவரைக் காணாததால் காவலரை விசாரித்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான். பின்பு பேதுரு யூதாயாவைவிட்டுச் செசரியா சென்று அங்கே தங்கினார்.
ஏரோதின் சாவு
20ஏரோது தீர், சீதோன் மக்கள் மீது கடுஞ்சினம் கொண்டிருந்தான். அவர்கள் மனமொத்தவர்களாய் ஏரோதுவைக் காண வந்தார்கள். அவர்கள் அரண்மனை அந்தப்புர அதிகாரியான பிலாஸ்துவின் நல்லெண்ணத்தைப் பெற்று அரசனோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார்கள். ஏனெனில், ,அரசனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்துதான் அவர்கள் உணவுப்பொருள்களைப் பெற்றுவந்தார்கள்.
21குறித்த நாளில் ஏரோது அரச ஆடை அணிந்து மேடையில் அமர்ந்து அவர்களுக்கு உரையாற்றினான்.
22அப்போது மக்கள், “இது மனிதக் குரல் அல்ல; கடவுளின் குரல்” என்று ஆர்ப்பரித்தனர்.
23உடனே ஆண்டவரின் தூதர் அவனை அடித்தார். ஏனெனில், அவன் கடவுளைப் பெருமைப்படுத்தவில்லை; அவன் புழுத்துச் செத்தான்.
24கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது.
25பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து* திரும்பிச் சென்றனர்.