புனித பத்தாம் பயஸ் – திருத்தந்தை
முதல் வாசகம்
கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 2b-8
சகோதரர் சகோதரிகளே,
பெரும் எதிர்ப்புக்கிடையில் கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நம் கடவுளிடமிருந்து துணிவு பெற்றோம். எங்கள் அறிவுரைகள் தவற்றையோ, கெட்ட எண்ணத்தையோ, வஞ்சகத்தையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. நாங்கள் தகுதி உடையவர்கள் எனக் கருதி, நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார். அதற்கேற்ப, நாங்கள் பேசுகிறோம். மனிதர்களுக்கு அல்ல, எங்கள் இதயங்களைச் சோதித்தறியும் கடவுளுக்கே உகந்தவர்களாய் இருக்கப் பார்க்கிறோம்.
நாங்கள் என்றும் போலியாக உங்களைப் புகழ்ந்ததே இல்லை. இது உங்களுக்குத் தெரிந்ததே. போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை, இதற்குக் கடவுளே சாட்சி.
கிறிஸ்துவின் திருத்தூதர்கள் என்னும் முறையில் நாங்கள் உங்களிடம் மிகுதியாக எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால் மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை. மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பது போல், கனிவுடன் நடந்துகொண்டோம்.
இவ்வாறு உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 89: 1-2. 3-4. 20-21. 24,26 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 14-15 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-17
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றி, அவர்களோடு உணவருந்தியபின் சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார்.
இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.
மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.