சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1[*]
2தீய நாட்டங்களின் பிடியில்
சிக்கிக்கொள்ளாதே;
இல்லையேல்,
காளையிடம் சிக்கியவன்
போலக் கீறிக் குதறப்படுவாய்.
3உன் இலைகள் விழுங்கப்படும்;
கனிகள் அழிக்கப்படும்;
பட்ட மரம்போல நீ விடப்படுவாய்.
4தீய நாட்டங்களுக்கு
ஒருவர் இடம் கொடுத்தால்
அவையே அவரை அழித்துவிடும்;
அவர் பகைவரின்
நகைப்புக்கும் ஆளாவார்.
நட்பு
5இன்சொல் நண்பர்
தொகையைப் பெருக்கும்;
பண்பான பேச்சு
உன் மதிப்பை உயர்த்தும்.
6அனைவரோடும் நட்புடன் பழகு;
ஆனால் ஆயிரத்தில்
ஒருவரே உனக்கு
ஆலோசகராய் இருக்கட்டும்.
7ஆய்ந்து நட்புக்கொள்;
நண்பரையும் விரைவில்
நம்பிவிடாதே.
8தன்னலம் தேடும்
நண்பர்களும் உண்டு;
அவர்கள் உன் நெருக்கடியான
வேளையில் உன்னோடு
இருக்கமாட்டார்கள்.
9பகைவர்களாய் மாறும்
நண்பர்களும் உண்டு;
அவர்கள் உங்கள் பிணக்கை
மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி,
உனக்கு இழிவைக்
கொண்டு வருவார்கள்.
10உன்னுடன் விருந்துண்ணும்
நண்பர்களும் உண்டு;
அவர்கள் உன் நெருக்கடியான
வேளையில் உன்னோடு
இருக்கமாட்டார்கள்.
11நீ நல்ல நிலையில்
இருக்கும்போது,
அவர்கள் உன் உயிருக்கு உயிரான
நண்பர்களாய் இருப்பார்கள்;
உன் பணியாளர்களை
ஆட்டிப் படைப்பார்கள்;
12நீ தாழ்ந்துவிட்டால்
உனக்கு எதிராய்
அவர்கள் மாறுவார்கள்;
உன் முகத்தில் விழிக்கமாட்டார்கள்.
13உன் பகைவர்களிடமிருந்து
விலகி நில்;
உன் நண்பர்களிடம்
எச்சரிக்கையாய் இரு.
14நம்பிக்கைக்குரிய நண்பர்கள்
பாதுகாப்பான புகலிடம்
போன்றவர்கள்;
இத்தகைய நண்பர்களைக்
கண்டவர்கள்
புதையலைக் கண்டவரைப்
போன்றவர்கள்.
15நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு
ஈடான செல்வம் எதுவுமில்லை;
அவர்களது தகைமைக்கு
அளவுகோல் இல்லை.
16நம்பிக்கைக்குரிய நண்பர்கள்
நலம் அளிக்கும் மருந்து
போன்றவர்கள்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரே
இத்தகைய நண்பர்களைக்
கண்டடைவர்.
17ஆண்டவருக்கு அஞ்சுவோரே
முறையான நட்புப் பேணுவோர்.
அவர்களை அடுத்தவர்களும்
அவர்களைப்போலவே இருப்பார்கள்.
ஞானத்தை அடையப் பயிற்சி
18குழந்தாய், இளமைமுதல்
நற்பயிற்சியைத் தேர்ந்துகொள்;
முதுமையிலும் ஞானம் பெறுவாய்.
19உழுது, விதைத்து,
பின் நல்ல விளைச்சலுக்காகக்
காத்திருக்கும் உழவர்போன்று
ஞானத்தை அணுகு.
ஞானத்துக்காக உழைப்போர்
சிறிதளவே களைப்படைவர்;
விரைவிலேயே அதன் கனிகளை உண்பர்.
20நற்பயிற்சி இல்லாதவர்களிடம்
ஞானம் மிகக் கடுமையாக
நடந்துகொள்ளும்;
அறிவிலிகள் அதனோடு
நிலைத்திருக்கமுடியாது.
21அது அவர்களைச் சோதிக்கும்
பாறாங்கல்லாய் இருக்கும்;
அவர்கள் அதைத் தள்ளிவிடக்
காலம் தாழ்த்தமாட்டார்கள்.
22ஞானம் பெயர்ப் பொருத்தம்
உடையது;
பலருக்கு அது புலப்படுவதில்லை.
23குழந்தாய், உற்றுக்கேள்;
என் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்;
என் அறிவுரைகளைப் புறக்கணியாதே.
24ஞானத்தின் விலங்குகளில்
உன் கால்களைப் பிணைத்துக்கொள்;
அதன் சங்கிலியில் உன் கழுத்தைப்
புகுத்திக்கொள்.
25குனிந்து அதனைத் தோளில்
தூக்கிச் சுமந்து செல்;
அதன் தளைகளைக் கண்டு
எரிந்து விழாதே.
26உன் முழு உள்ளத்தோடும்
அதனை அணுகு;
உன் முழு வலிமையோடும்
அதன் வழியில் நடந்து செல்.
27அதனை நீ நாடித் தேடு;
அது உனக்குப் புலப்படும்.
அதனைச் சிக்கெனப் பிடி;
நழுவவிடாதே.
28முடிவில் அது அளிக்கும்
ஓய்வைப் பெறுவாய்;
அதுவே உனக்கு
மகிழ்ச்சியாய் மாறும்.
29அதன் விலங்குகள் உனக்கு
வலிமையான பாதுகாப்பு ஆகும்;
அதன் தளைகள் மாட்சிமிகு
ஆடையாக மாறும்.
30அதன் மீது பொன் அணிகலன்
உள்ளது;
அதன் தளைகள் நீல மணிவடமாகும்.
31ஞானத்தை மாட்சிமிகு
ஆடையாக அணிந்துகொள்;
மகிழ்ச்சிதரும் மணிமுடியாகச்
சூடிக்கொள்.
32சூழந்தாய், நீ விரும்பினால்
நற்பயிற்சி பெற முடியும்;
உன் கருத்தைச் செலுத்தினால்
திறமையுடன் திகழ முடியும்.
33கேட்டறிய ஆர்வம் கொண்டால்
அறிவு பெறுவாய்;
பிறருக்குச் செவிசாய்த்தால்
ஞானியாவாய்;
34மூப்பர்களின் தோழமையை நாடு;
ஞானிகள் யார் எனக் கண்டு
அவர்களைச் சார்ந்து நில்.
35கடவுளைப் பற்றிய எல்லா
உரைகளுக்கும் செவிசாய்ப்பதில்
ஆர்வம் காட்டு;
அறிவுக்கூர்மை கொண்ட
பழமொழிகளைக் கேட்காமல்
விட்டுவிடாதே.
36அறிவுக்கூர்மை படைத்தோரை
நீ கண்டுவிட்டால்,
விரைந்து அவர்களிடம் செல்;
உன் காலடி பட்டு அவர்களின்
வீட்டு வாயிற்படிகள் தேயட்டும்.
37ஆண்டவரின் நெறிமுறைகளை
எண்ணிப்பார்;
அவருடைய கட்டளைகளை
எப்போதும் உள்ளத்தில் இருத்து.
அவரே உன் உள்ளத்திற்குத்
தெளிவூட்டுவார்;
நீ விரும்பும் ஞானத்தை
உனக்கு அருள்வார்.