சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
செல்வச் செருக்கு
1உன் செல்வங்களில் நம்பிக்கை
வைக்காதே;
‘எனக்கு அவை போதும்’
எனச் சொல்லாதே.
2உன் நாட்டங்களுக்கும்
வலிமைக்கும் அடிமையாகாதே;
உன் உள்ளத்து விருப்பங்களைப்
பின்பற்றாதே.
3எனக்கு எதிராய்ச்
செயல்படக்கூடியவர் யார்?
எனச் சொல்லாதே;
ஆண்டவர் உன்னைத்
தண்டியாமல் விடமாட்டார்.
4‘நான் பாவம் செய்தேன்;
இருப்பினும்,
எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?’
எனக்கூறாதே;
ஆண்டவர் பொறுமை உள்ளவர்.
5பாவத்துக்கு மேல் பாவம்
செய்யும் அளவுக்குப்
பாவ மன்னிப்புப்பற்றி
அச்சம் இல்லாமல் இராதே.
‘ஆண்டவரின் பரிவு எல்லையற்றது;
6‘எண்ணற்ற என் பாவங்களை
அவர் மன்னித்துவிடுவார்’
என உரைக்காதே.
அவரிடம் இரக்கமும்
சினமும் உள்ளன;
அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்.
7ஆண்டவரிடம் திரும்பிச்
செல்லக் காலம் தாழ்த்தாதே.
நாள்களைத் தள்ளிப்போடாதே.
ஆண்டவரின் சினம்
திடீரென்று பொங்கியெழும்;
அவர் தண்டிக்கும் காலத்தில்
நீ அழிந்துபோவாய்.
8முறைகேடான செல்வங்களில்
நம்பிக்கை வைக்காதே;
பேரிடரின் நாளில் அவற்றால்
உனக்குப் பயன் இராது.
வாய்மையும் தன்னடக்கமும்
9எல்லா வகைக் காற்றிலும்
தூற்றிக் கொள்ளாதே;
எல்லா வழிகளிலும் போகாதே;
இரட்டை நாக்குக்* கொண்ட
பாவிகள் இவ்வாறே செய்வார்கள்.
10உன் மனச்சான்றை
உறுதியோடு பின்பற்று;
முன் பின் முரண்படாமல் பேசு.
11விரைந்து செவிசாய்;
பொறுத்திருந்து விடை கூறு.
12உனக்குத் தெரிந்தால்,
மறுமொழி கூறு;
இல்லையேல் வாயை மூடிக்கொள்.
13பெருமையும் சிறுமையும்
பேச்சினால் வரும்;
நாக்கே ஒருவருக்கு
வீழ்ச்சியைத் தரும்.
14புறங்கூறுபவன் எனப்
பெயர் வாங்காதே;
உன் நாவால் மற்றவர்களுக்குக்
கண்ணி வைக்காதே.
திருடர்களுக்கு உரியது இகழ்ச்சி;
இரட்டை நாக்கினருக்கு
உரியது கடும் கண்டனம்.
15பெரிதோ சிறிதோ எதிலும்
குற்றம் செய்யாதே;
நண்பனாவதற்கு மாறாகப்
பகைவனாகாதே.
கெட்ட பெயர் இழுக்கையும்
பழிச்சொல்லையும் வருவிக்கும்;
இரட்டை நாக்குக்கொண்ட
பாவிகளுக்கு இவை நேரும்.