சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
ஆண்டவரிடம் பற்றுறுதி
1குழந்தாய், ஆண்டவருக்குப்
பணிபுரிய நீ முன்வந்தால்,
சோதனைகளை எதிர்கொள்ள
முன்னேற்பாடு செய்துகொள்.
2உள்ளத்தில்
உண்மையுள்ளவனாய் இரு;
உறுதியாக இரு;
துன்ப வேளையில்
பதற்றமுடன் செயலாற்றாதே.
3ஆண்டவரைச் சிக்கெனப்
பிடித்துக்கொள்;
அவரை விட்டு விலகிச் செல்லாதே.
உன் வாழ்க்கையின் முடிவில்
வளமை அடைவாய்.
4என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்;
இழிவுவரும்போது
பொறுமையாய் இரு.
5நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது;
ஏற்புடைய மனிதர் மானக்கேடு
எனும் உலையில்
சோதித்துப் பார்க்கப்படுகின்றனர்.
6ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்;
அவர் உனக்குத் துணை செய்வார்.
உன் வழிகளைச் சீர்படுத்து;
அவரிடம் நம்பிக்கை கொள்.
7ஆண்டவருக்கு அஞ்சுவோரே.
அவரிடம் இரக்கத்துக்காகக்
காத்திருங்கள்;
நெறி பிறழாதீர்கள்;
பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள்.
8ஆண்டவருக்கு அஞ்சுவோரே,
அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்;
உங்களுக்குக் கைம்மாறு
கிடைக்காமற் போகாது.
9ஆண்டவருக்கு அஞ்சுவோரே,
நல்லவைமீது நம்பிக்கை
கொள்ளுங்கள்;
நிலையான மகிழ்ச்சியையும்
இரக்கத்தையும் எதிர்நோக்கியிருங்கள்.
10முந்திய தலைமுறைகளை
எண்ணிப்பாருங்கள்.
ஆண்டவரிடம் பற்றுறுதி
கொண்டிருந்தோருள்
ஏமாற்றம் அடைந்தவர் யார்?
அவருக்கு அஞ்சி நடந்தோருள்
கைவிடப்பட்டவர் யார்?
அவரை மன்றாடினோருள்
புறக்கணிக்கப்பட்டவர் யார்?
11ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்;
பாவங்களை மன்னிப்பவர்;
துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர்.
12கோழை நெஞ்சத்தவருக்கும்
ஆற்றலற்ற கையருக்கும்
இரட்டை வேடமிடும்
பாவிகளுக்கும்
ஐயோ, கேடு வரும்!
13உறுதியற்ற உள்ளத்தவருக்கும்
ஐயோ, கேடு வரும்!
ஏனெனில் அவர்கள்
பற்றுறுதி கொள்ளவில்லை;
எனவே அவர்களுக்குப்
பாதுகாப்பு இராது.
14தளர்ச்சி அடைந்தோரே,
உங்களுக்கும் ஐயோ, கேடு வரும்!
ஆண்டவர் உங்களைச் சந்திக்க
வரும்போது என்ன செய்வீர்கள்?
15ஆண்டவருக்கு அஞ்சுவோர்
அவருடைய சொற்களைக்
கடைப்பிடிப்பர்;
அவர்மீது அன்புசெலுத்துவோர்
அவர்தம் வழிகளைப் பின்பற்றுவர்.
16ஆண்டவருக்கு அஞ்சுவோர்
அவர்தம் விருப்பத்தையே தேடுவர்;
அவரிடம் அன்பு பாராட்டுவோர்
அவர்தம் திருச்சட்டத்தில்
நிறைவு அடைவர்.
17ஆண்டவருக்கு அஞ்சுவோர்
முன்னேற்பாடாய் இருப்பர்;
அவர் திருமுன் தங்களைத்
தாழ்த்திக் கொள்வர்.
18‘ஆண்டவரின் கைகளில்
நாம் விழுவோம்;
மனிதரின் கைகளில்
விழமாட்டோம்; ஏனெனில்
அவரது பெருமையைப் போன்று
அவர்தம் இரக்கமும் சிறந்தது’
என அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.