சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
ஞானத்தின் புகழ்ச்சி
1ஞானம் தன்னையே
புகழ்ந்து கொள்கிறது;
தன் மக்கள் நடுவே தனது
மாட்சியை எடுத்துரைக்கிறது.
2உன்னத இறைவனின் மன்றத்தில்
திருவாய் மலர்ந்து பேசுகிறது;
அவரது படைத்திரள்முன்பாக
தமது மாட்சியை எடுத்துரைக்கிறது.
3உன்னதரின் வாயினின்று
நான் வெளிவந்தேன்;
மூடுபனிபோன்று மண்ணுலகை
மூடிக்கொண்டேன்.
4உயர் வானங்களில் நான்
வாழ்ந்து வந்தேன்;
முகில்தூணில் அரியணை
கொண்டிருந்தேன்;
5வானத்தையெல்லாம் நானே
தனியாகச் சுற்றிவந்தேன்;
கீழுலகின் ஆழத்தை
ஊடுருவிச் சென்றேன்.
6கடலின் அலைகள்மேலும்
மண்ணுலகெங்கும் மக்கள்
அனைவர் மீதும் நாடுகள் மீதும்
ஆட்சி செலுத்தினேன்.
7இவை அனைத்தின் நடுவே
ஓய்வு கொள்ள ஓர் இடத்தை
நான் விரும்பினேன்;
யாருடைய உரிமைச் சொத்தில்
நான் தங்குவேன்?
8பின், அனைத்தையும் படைத்தவர்
எனக்குக் கட்டளையிட்டார்;
என்னைப் படைத்தவர்
என் கூடாரம் இருக்கவேண்டிய
இடத்தை முடிவு செய்தார்.
‘யாக்கோபில் தங்கி வாழ்;
இஸ்ரயேலில் உன்
உரிமைச்சொத்தைக்
காண்பாய்’ என்று உரைத்தார்.
9காலத்திற்கு முன்பே
தொடக்கத்தில் அவர்
என்னைப் படைத்தார்.
எக்காலமும் நான் வாழ்ந்திடுவேன்.
10தூய கூடாரத்தில்
அவர் திருமுன் பணிசெய்தேன்;
இதனால் சீயோனில்
உறுதிப்படுத்தப்பெற்றேன்.
11இவ்வாறு அந்த அன்புக்குரிய
நகரில் அவர் எனக்கு
ஓய்விடம் அளித்தார்;
எருசலேமில் எனக்கு
அதிகாரம் இருந்தது.
12ஆண்டவரின் உரிமைச்சொத்தாகிய
பங்கில் மாட்சிமைப்படுத்தப்
பெற்ற மக்கள் நடுவே
நான் வேரூன்றினேன்.
13லெபனோனின் கேதுருமரம்
போலவும் எர்மோன்
மலையின் சைப்பிரசுமரம்
போலவும் நான் ஓங்கி
வளர்ந்தேன்.
14எங்கேதி ஊரின்
பேரீச்சமரம் போலவும்,
எரிகோவின் ரோசாச்செடி
போலவும் சமவெளியின்
அழகான ஒலிவமரம் போலவும்,
பிளாத்தான்மரம் போலவும்
நான் ஓங்கி வளர்ந்தேன்.
15இலவங்கப் பட்டைபோலும்,
பரிமளத்தைலம் போலும்
மணம் கமழ்ந்தேன்;
சிறந்த வெள்ளைப்போளம்
போல நறுமணம் தந்தேன்;
கல்பானும், ஓனிக்சா எனும்
நறுமணப் பொடிகள்போலும்,
உடன்படிக்கைக் கூடாரத்தில்
எழுப்பப்படும் புகைபோலும்
நறுமணம் வீசினேன்.
16தேவதாருமரத்தைப்போல்
என் கிளைகளைப் பரப்பினேன்;
என் கிளைகள் மாட்சியும்
அருளும் நிறைந்தவை.
17நான் அழகு அளித்திடும்
திராட்சைக் கொடி,
மாட்சி, செல்வத்தினுடைய
கனிகள், என் மலர்கள்.
18*[நானே தூய அன்பு, அச்சம்,
அறிவு, தூய நம்பிக்கை
ஆகியவற்றின் அன்னை.
கடவுளால் குறிக்கப்பட்ட
என் பிள்ளைமேல் நான்
பொழியப்படுவேன்.]
19என்னை விரும்புகிற அனைவரும்
என்னிடம் வாருங்கள்;
என் கனிகளை வயிறார
உண்ணுங்கள்.
20என்னைப்பற்றிய நினைவு
தேனினும் இனியது;
என் உரிமைச்சொத்து
தேனடையினும் மேலானது.
21என்னை உண்பவர்கள்
மேலும் பசி கொள்வார்கள்;
என்னைக் குடிப்பவர்கள்
மேலும் தாகம் கொள்வார்கள்.
22எனக்குக் கீழ்ப்படிவோர்
இகழ்ச்சி அடையார்;
என்னோடு சேர்ந்து
உழைப்போர் பாவம் செய்யார்.
ஞானமும் திருச்சட்டமும்
23இவ்வாறு ஞானம் கூறிய
அனைத்தும் உன்னத
இறைவனின் உடன்படிக்கை
நூலாகும்.
மோசே நமக்குக் கட்டளையிட்ட,
யாக்கோபின் சபைகளுக்கு
உரிமைச் சொத்தாக
வழங்கப்பெற்ற திருச்சட்டமாகும்.
24*[ஆண்டவரில் வலிமை
கொள்வதை விட்டுவிடாதே.
அவர் உனக்கு வலுவூட்டும்
பொருட்டு அவரைப் பற்றிக்கொள்.
எல்லாம் வல்ல ஆண்டவர்
ஒருவரே கடவுள்;
அவரைத்தவிர வேறு
மீட்பர் இல்லை.]
25பீசோன் ஆறுபோன்றும்
அறுவடைக்காலத்தில்
திக்ரீசு ஆறு போன்றும்
திருச்சட்டம் ஞானத்தால்
நிறைந்து வழிகிறது.
26யூப்பிரத்தீசு ஆறுபோல,
அறுவடைக்காலத்தில்
பெருக்கெடுத்தோடும்
யோர்தான் ஆறுபோல,
அது அறிவுக்கூர்மையால்
நிரம்பி வழிகிறது.
27திராட்சை அறுவடைக்
காலத்தில் நைல் ஆறு
வழிந்தோடுவதைப் போல்
அது நற்பயிற்சியைப்
பெருக்கெடுத்து ஓடச்செய்யும்.
28முதல் மனிதன் ஞானத்தை
முழுமையாக அறியவில்லை;
இறுதி மனிதனும் அதன்
ஆழத்தைக் கண்டானில்லை.
29ஞானத்தின் எண்ணங்கள்
கடலினும் பரந்தவை;
அதன் அறிவுரைகள்
படுகுழியை விட ஆழமானவை.
30நான் ஆற்றிலிருந்து பிரியும்
கால்வாய் போன்றவன்;
தோட்டத்தில் ஓடிப் பாயும்
வாய்க்கால் போன்றவன்.
31‘எனது தோட்டத்துக்கு
நான் நீர் பாய்ச்சுவேன்;
எனது பூங்காவை நீரால்
நிரப்புவேன்’ என்று சொல்லிக்
கொண்டேன். உடனே என்
கால்வாய் ஆறாக மாறிற்று;
என் ஆறு கடலாக மாறிற்று.
32நான் நற்பயிற்சியை விடியல்
போன்று ஒளிரச் செய்வேன்;
அது தொலைவிலும் தெரியும்படி
செய்வேன்.
33போதனைகளை
இறைவாக்குப் போன்று
பொழிவேன்; அதைக்
காலங்களுக்கெல்லாம்
விட்டுச் செல்வேன்.
34எனக்காக மட்டும்
உழைக்கவில்லை;
ஞானத்தைத் தேடுவோர்
அனைவருக்காகவும்
உழைத்தேன் என அறிந்து
கொள்ளுங்கள்.