சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
சோம்பேறி
1சோம்பேறிகள் மாசுபடிந்த
கல் போன்றவர்கள்;
அவர்களது இழிவு கண்டு
எல்லோரும் எள்ளி நகையாடுவர்.
2சோம்பேறிகள் குப்பைமேட்டுக்கு
ஒப்பானவர்கள்; அதைத்
தொடுவோர் அனைவரும்
கையை உதறித் தட்டிவிடுவர்.
பண்பற்ற பிள்ளைகள்
3நற்பயிற்சி பெறாத
மகனைப் பெற்ற
தந்தை இகழ்ச்சி அடைவார்;
அத்தகைய மகளோ
அவருக்கு இழிவைக் கொணர்வாள்.
4அறிவுத்திறன் கொண்ட மகள்
கணவரை அடைவாள்;
இழிவாக நடப்பவள்
தன் தந்தைக்கு வருத்தம்
ஏற்படுத்துவாள்.
5நாணமற்ற மகள்
தன் தந்தைக்கும் கணவருக்கும்
இகழ்ச்சியைக் கொணர்வாள்;
அவ்விருவரும் அவளை இகழ்வர்.
6நேரத்திற்குப் பொருந்தாத
பேச்சு புலம்பவேண்டிய
நேரத்தில் இன்னிசை
எழுப்புவதைப் போன்றது;
கண்டிப்பும் நற்பயிற்சியும்
எக்காலத்திலும் ஞானத்தைக்
கொடுக்கும்.
7*[நல்வாழ்க்கை வாழப்
பயிற்றுவிக்கப் பெற்ற மக்கள்
தங்கள் பெற்றோரின் இழிபிறப்பை
மறைத்துவிடுகிறார்கள்.
8ஒழுக்கத்தில் வளர்க்கப்படாமல்
இறுமாப்பும் பிடிவாதமும்
கொண்ட மக்கள்
தங்களின் குலப்பெருமைக்கு
அவமானம் கொணர்வார்கள்.]
மெய்யறிவும் பேதைமையும்
9மூடருக்குக் கல்வியறிவு
புகட்டுவோர் உடைந்துவிட்ட
பானை ஓடுகளை
ஒட்டுவோருக்கு ஒப்பாவர்;
ஆழ்ந்த தூக்கத்தில் இருப்போரைத்
தட்டி எழுப்புவோர் போலாவர்.
10மூடரோடு பேசுவோர்
தூக்கக்கலக்கத்தில்
உள்ளவரோடு பேசுவோருக்கு
ஒப்பாவர்;
பேச்சின் முடிவில், ‘அது என்ன?’
என மூடர் கேட்பர்.
11இறந்தோருக்காக அழு;
ஒளி அவர்களைவிட்டு
மறைந்து விட்டது.
மூடருக்காக அழு;
அறிவுக்கூர்மை அவர்களை
விட்டு அகன்றுவிட்டது.
இறந்தோருக்காக அமைதியாக அழு;
அவர்கள் அமைதியில்
துயில் கொள்கிறார்கள்.
மூடரின் வாழ்வு சாவைவிடக் கொடிது.
12இறந்தோருக்காக ஏழு நாள்
துயரம் கொண்டாடப்படும்;
மூடருக்காகவும்
இறைப்பற்றில்லாதோருக்காகவும்
அவர்களின் வாழ்நாள் முழுவதும்
துயரம் கொண்டாடப்படும்.
13அறிவிலிகளோடு மிகுதியாய்ப்
பேசாதே; மதியீனரிடம் செல்லாதே.
உனக்குத் தொல்லை ஏற்படாதவாறு
எச்சரிக்கையாய் இரு;
அவர்களோடு தொடர்பு
கொண்டால் நீயும் பாழாவாய்.
அவர்களை விட்டு விலகிப்போ;
அப்போது ஓய்வு காண்பாய்;
அவர்களின் அறிவின்மையால்
சோர்வுறமாட்டாய்.
14ஈயத்தைவிடக் கனமானது எது?
மூடர் என்பதைவிட
அவர்களுக்கு வேறு என்ன
பெயர் பொருந்தும்?
15மதி கெட்டோரைப்
பொறுத்துக் கொள்வதைவிட
மணல், உப்பு, இரும்புத் துண்டு
ஆகியவற்றைச் சுமப்பது எளிது.
16கட்டடத்தில் இணைக்கப்பட்ட
மர உத்திரங்களை
நிலநடுக்கத்தால்கூட
அசைக்க முடியாது.
ஆழ்ந்த சிந்தனையில்
முதிர்ச்சிபெற்ற
உள்ளம் கொண்டவர்கள்
எந்தக் குழப்பத்திலும்
தளர்ச்சியுற மாட்டார்கள்.
17அறிவுக்கூர்மை கொண்ட
சிந்தனையில் அமைந்த
உள்ளம் சுவரை அழகு
செய்யும் பூச்சுப் போன்றது.
18உயர்ந்த இடத்தில்
அமைக்கப்பட்ட வேலி
காற்றை எதிர்த்து நிற்காது;
மூடத்தனமான எண்ணங்கள்
கொண்ட கோழை உள்ளம்
எவ்வகை அச்சுறுத்தல்களையும்
எதிர்த்து நிற்காது.
நட்பு
19கண்ணைக் குத்திக்கொள்வோர்
கண்ணீரை வரவழைக்கின்றனர்;
உள்ளத்தைக் குத்திக்கொள்வோர்
உணர்ச்சிகளை வெளிக்காட்டுகின்றனர்.
20பறவைகள் மீது கல்லெறிவோர்
அவற்றை அச்சுறுத்தி ஓட
வைக்கின்றனர்;
நண்பர்களைப் பழிப்போர்
நட்பை முறித்துவிடுகின்றனர்.
21உன் நண்பருக்கு எதிராக
வாளை நீ உருவியிருந்தபோதிலும்
நம்பிக்கை இழந்துவிடாதே.
மீண்டும் நட்பு ஏற்பட வழி உண்டு.
22உன் நண்பருக்கு எதிராகப்
பேசியிருந்தாலும் அஞ்சாதே.
நல்லிணக்கத்துக்கு வழி உண்டு.
இகழ்ச்சி, இறுமாப்பு,
இரகசியங்களை வெளியிடல்,
வஞ்சகத்தாக்குதல்
ஆகியவற்றினின்று எந்த
நண்பருமே ஓடிவிடுவர்.
23அடுத்திருப்பவர்களது வறுமையில்
அவர்களது நம்பிக்கையைப் பெறு;
அவர்களது வளமையை
முழுமையாய்ப் பகிர்ந்து
கொள்வாய். துன்பவேளையிலும்
அவர்களைச் சார்ந்திரு;
அதனால் அவர்களின்
உரிமைச்சொத்தில்
நீயும் பங்கு கொள்வாய்.
24சூளையிலிருந்து நெருப்புக்குமுன்
ஆவியும் புகையும்
வெளிவருகின்றன.
கொலைக்கு முன்னே
இழிசொல் இடம் பெறும்.
25நண்பருக்குப் பாதுகாப்பு
அளிக்க நான்
வெட்கப்படமாட்டேன்;
அவரது பார்வையினின்று
என்னை மறைத்துக்
கொள்ளவும் மாட்டேன்.
26அவர்களால் எனக்குத்
தீங்கு நேர்ந்தால்,
அதைக் கேள்வியுறுவோர்
அனைவரும் அவர்களிடம்
எச்சரிக்கையாய் இருப்பர்.
பாவத்தில் விழாதிருக்க மன்றாட்டு
27நான் வீழ்ச்சியுறாதிருக்கவும்
என் நாவே என்னை
அழிக்காதிருக்கவும் என் வாயைக்
காவல் செய்பவர் யார்?
என் உதடுகளை நுண்ணறிவு
எனும் முத்திரையிட்டு
மூடுபவர் யார்?