சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
திருச்சட்டமும் பலிகளும்
1திருச்சட்டத்தைக்
கடைப்பிடிப்பது
பல காணிக்கைகளைக்
கொடுப்பதற்கு ஈடாகும்.
கட்டளைகளைக் கருத்தில்
கொள்வது நல்லுறவுப் பலி
செலுத்துவதற்கு ஒப்பாகும்.
2அன்புக்குக் கைம்மாறு
செய்வது மாவுப் படையல்
அளிப்பதற்கு இணையாகும்.
தருமம் செய்வது
நன்றிப்பலி செலுத்துவதாகும்.
3தீச்செயலை விட்டுவிடுதல்
ஆண்டவருக்கு விருப்பமானது;
அநீதியைக் கைவிடுதல்
பாவக் கழுவாய்ப் பலியாகும்.
4ஆண்டவர் திருமுன்
வெறுங்கையோடு வராதே;
கட்டளையை நிறைவேற்றவே
பலிகளையெல்லாம் செலுத்து.
5நீதிமான்கள் காணிக்கைகளைச்
செலுத்தும்போது பலிபீடத்தில்
கொழுப்பு வழிந்தோட,
உன்னத இறைவன் திருமுன்
நறுமணம் எழுகிறது.
6நீதிமான்களின் பலி
ஏற்றுக்கொள்ளத்தக்கது;
அதன் நினைவு என்றும் நீங்காது.
7ஆண்டவரைத் தாராளமாய்
மாட்சிமைப்படுத்து;
உன் உழைப்பின் முதற்கனிகளைக்
கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே.
8கொடை வழங்கும்போதெல்லாம்
முகமலர்ச்சியோடு கொடு;
பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு
கடவுளுக்கு உரித்தாக்கு.
9உன்னத இறைவன்
உனக்குக் கொடுத்திருப்பதற்கு
ஏற்ப நீயும் அவருக்குக் கொடு;
உன்னால் முடிந்த அளவுக்குத்
தாராளமாய்க் கொடு.
10ஆண்டவரே கைம்மாறு செய்பவர்;
ஏழு மடங்கு உனக்குத்
திருப்பித் தருபவர்.
இறை நீதி
11ஆண்டவருக்குக் கையூட்டுக்
கொடுக்க எண்ணாதே;
அவர் அதை ஏற்கமாட்டார்.
அநீத பலியில் நம்பிக்கை வைக்காதே.
12ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்;.
அவரிடம் ஒருதலைச் சார்பு
என்பதே கிடையாது.
13அவர் ஏழைகளுக்கு எதிராய்
எவரையும் ஒருதலைச்
சார்பாய் ஏற்கமாட்டார்;
தீங்கிழைக்கப்பட்டோரின்
மன்றாட்டைக் கேட்பார்.
14கைவிடப்பட்டோரின்
வேண்டுதலைப் புறக்கணியார்.
தம்மிடம் முறையிடும்
கைம்பெண்களைக் கைவிடார்.
15கைம்பெண்களின் கண்ணீர்
அவர்களுடைய கன்னங்களில்
வழிந்தோடுவதில்லையா?
அவர்களைக் கண்ணீர்
சிந்த வைத்தவர்களுக்கு
எதிராக அவர்களது
அழுகுரல் எழுவதில்லையா?
16ஆண்டவரின் விருப்பதிற்கு
ஏற்றவாறு பணி
செய்வோர் ஏற்றுக்கொள்ளப்படுவர்.
. அவர்களுடைய மன்றாட்டு
முகில்களை எட்டும்.
17தங்களைத் தாழ்த்துவோரின்
வேண்டுதல் முகில்களை
ஊடுருவிச் செல்லும்;
அது ஆண்டவரை அடையும்வரை
அவர்கள் ஆறுதல் அடைவதில்லை.
18உன்னத இறைவன்
சந்திக்க வரும்வரை
அவர்கள் நற்பயிற்சியில்
தளர்ச்சியடைவதில்லை;
அவர் நீதிமான்களுக்குத்
தீர்ப்பு வழங்குகிறார்; தம்
தீர்ப்பைச் செயல்படுத்துகிறார்.
19ஆண்டவர் காலம்
தாழ்த்தமாட்டார்.
20இரக்கமற்றோரின் இடுப்பை
அவர் முறித்துப்
பிற இனத்தார்மீது
பழி தீர்க்கும்வரை,
21இறுமாப்புக் கொண்டோரின்
கூட்டத்தை அழித்து
அநீதர்களின் செங்கோல்களை
முறிக்கும்வரை,
22மனிதருக்கு அவரவர்
செயல்பாட்டுக்கு ஏற்பக்
கைம்மாறு செய்யும்வரை,
அவரவர் எண்ணத்திற்கு
ஏற்ப அவர்களின் செயல்களுக்கு
ஈடு செய்யும்வரை,
23தம் மக்களின் வழக்கில்
அவர் நீதித் தீர்ப்பிட்டு
அவர்களைத் தம்
இரக்கத்தினால் மகிழ்விக்கும்வரை,
அவர்களிடம் பொறுமை காட்டமாட்டார்.
24வறட்சிக் காலத்தில் தோன்றும்
கார் முகில்போலத்
துன்பக் காலத்தில் அவரின்
இரக்கம் வரவேற்கத்தக்கது.