Home » Tamil » திருப்பாடல்கள் அதிகாரம் – 74 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 74 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

நாட்டின் விடுதலைக்காக மன்றாடல்
(ஆசாபின் அறப்பாடல்)

1கடவுளே! நீர் ஏன் எங்களை

முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்?

உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல்

உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது?

2பண்டைக் காலத்திலேயே

நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட

சபைக் கூட்டத்தை நினைத்தருளும்;

நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட

இனத்தாரை மறந்துவிடாதேயும்;

நீர் கோவில் கொண்டிருந்த

சீயோன் மலையையும்

நினைவுகூர்ந்தருளும்.

3நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும்

பகுதிகளுக்குச் சென்று

பார்வையிடுவீராக!

எதிரிகள் உமது தூயகத்தில்

அனைத்தையும் பாழ்படுத்திவிட்டார்கள்.

4உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில்

வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்;

தங்கள் கொடிகளை வெற்றிக்கு

அடையாளமாக நாட்டுகின்றார்கள்.

5அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட

மரப்பின்னல் வேலைப்பாடுகளைக்

கோடரிகளால் சிதைத்தார்கள்.

6மேலும் அங்கிருந்த

மர வேலைப்பாடுகள் அனைத்தையும்

சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு

தகர்த்தெறிந்தார்கள்;

7அவர்கள் உமது தூயகத்திற்குத்

தீ வைத்தார்கள்; தரைமட்டமாக்கினார்கள்.

அவர்கள் உமது பெயருக்குரிய

உறைவிடத்தைத்

தீட்டுப்படுத்தினார்கள்.

8“அவர்களை அடியோடு

அழித்து விடுவோம்” என்று

தங்கள் உள்ளங்களில்

சொல்லிக் கொண்டார்கள்;

கடவுளின் சபையார் கூடும்

இடங்களையெல்லாம்

நாடெங்கும் எரித்தழித்தார்கள்.

9எங்களுக்கு நீர் செய்து வந்த

அருஞ்செயல்களை

இப்போது நாங்கள் காண்பதில்லை;

இறைவாக்கினரும் இல்லை;

எவ்வளவு காலம்

இந்நிலை நீடிக்குமென்று

அறியக் கூடியவரும்

எங்களிடையே இல்லை.

10கடவுளே! எவ்வளவு காலம்

பகைவர் இகழ்ந்துரைப்பர்?

எதிரிகள் உமது பெயரை எப்போதுமா

பழித்துக் கொண்டிருப்பார்கள்?

11உமது கையை

ஏன் மடக்கிக் கொள்கின்றீர்?

உமது வலக்கையை

ஏன் உமது மடியில் வைத்துள்ளீர்?

அதை நீட்டி அவர்களை அழித்துவிடும்.

12கடவுளே! முற்காலத்திலிருந்தே

நீர் எங்கள் அரசர்;

நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச்

செய்து வருகின்றீர்.

13நீர் உமது வல்லமையால்

கடலைப் பிளந்தீர்;

நீரில் வாழும் கொடும் பாம்புகளின்

தலைகளை நசுக்கிவிட்டீர்.

14லிவியத்தானின் தலைகளை

நசுக்கியவர் நீரே;

அதைக் காட்டு விலங்குகளுக்கு

இரையாகக் கொடுத்தவர் நீரே;

15ஊற்றுகளையும் ஓடைகளையும்

பாய்ந்து வரச்செய்தவர் நீரே;

என்றுமே வற்றாத ஆறுகளைக்

காய்ந்துபோகச் செய்தவரும் நீரே.

16பகலும் உமதே; இரவும் உமதே;

கதிரவனையும் நிலவையும்

தோற்றுவித்தவர் நீரே.

17பூவுலகின் எல்லைகளையெல்லாம்

வரையறை செய்தீர்;

கோடைக் காலத்தையும்

மாரிக் காலத்தையும் ஏற்படுத்தினீர்.

18ஆண்டவரே, எதிரி உம்மை இகழ்வதையும்

மதிகெட்ட மக்கள்

உமது பெயரைப் பழிப்பதையும்

நினைத்துப்பாரும்!

19உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப்

பொல்லாத விலங்கிடம்

ஒப்புவித்து விடாதேயும்!

சிறுமைப்படுகிற உம் மக்களின் உயிரை

ஒரேயடியாக மறந்து விடாதேயும்!

20உமது உடன்படிக்கையை நினைத்தருளும்!

நாட்டின் இருளான இடங்களில்

கொடுமை நடக்கும் குடியிருப்புகள்

நிறைந்திருக்கின்றன.

21சிறுமையுற்றோர் மீண்டும்

வெட்கமுறாதபடி செய்யும்;

எளியோரும் வறியோரும்

உமது பெயரைப் புகழ்வராக!

22கடவுளே! எழுந்துவாரும்;

உமக்காக நீரே வழக்காடும்;

மதிகேடரால் நாடோறும் உமக்கு வரும்

இகழ்ச்சியை நினைத்துப்பாரும்.

23உம்முடைய பகைவர் செய்யும்

முழக்கத்தை மறவாதேயும்;

உம் எதிரிகள் இடைவிடாது எழுப்பும்

அமளியைக் கேளும்.


74:13 விப 14:21.
74:14 யோபு 41:1; திபா 104:26; எசா 27:1.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more