திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1 நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்; யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து ஏத்துங்கள்.
2 இன்னிசை எழுப்புங்கள்; மத்தளம் கொட்டுங்கள்; யாழும் சுரமண்டலமும் இசைந்து இனிமையாய்ப் பாடுங்கள்.
3 அமாவாசையில், பௌர்ணமியில், நமது திருவிழாநாளில் எக்காளம் ஊதுங்கள்.
4 இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை; யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.
5 அவர் எகிப்துக்கு எதிராகச் சென்றபொழுது யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே. அப்பொழுது நான் அறியாத மொழியைக் கேட்டேன்.
6 தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன.
7 துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை விடுவித்தேன்; இடிமுழங்கும் மறைவிடத்தினின்று நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்; மெரிபாவின் நீருற்று அருகில் உங்களைச் சோதித்தேன்.
8 என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும்!
9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.
10 உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்துவந்த கடவுளாகிய ஆண்டவர் நானே; உங்கள் வாயை விரிவாகத் திறங்கள்; நான் அதை நிரப்புவேன்.
11 ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.
12 எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டுவிட்டேன்.
13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.
14 நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும்.
15 ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக்குறுகுவர்; அவர்களது தண்டனைக் காலம் என்றென்றுமாய் இருக்கும்.
16 ஆனால், உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன்.