திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.
2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்.
3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும்.
5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை.
6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன்.
7 பலருக்கு நான் ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்; நீரே எனக்கு உறுதியான அடைக்கலம்.
8 என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே; நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.
9 முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்.
10 ஏனெனில், என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே; என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர்;
11 கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்; அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்; அவனைக் காப்பாற்ற ஒருவருமில்லை என்று அவர்கள் சொல்கின்றார்கள்.
12 கடவுளே! என்னைவிட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் கடவுளே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
13 என்னைப் பழிப்பவர்கள் வெட்கி அழிவார்களாக! எனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை இழிவும் மானக்கேடும் சூழட்டும்!
14 ஆனால், நான் என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்; மேலும் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன்.
15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட் செயல்களை என்னால் கணிக்க இயலாது.
16 தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதிமுறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.
17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.
18 கடவுளே, உம் கைவன்மையையும் ஆற்றலையும் இனிவரும் தலைமுறைக்கு நான் அறிவிக்குமாறு வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட என்னைக் கைவிடாதேயும்.
19 கடவுளே, உமது நீதி வானம் வரைக்கும் எட்டுகின்றது; மாபெரும் செயல்களை நீர் செய்திருக்கிறீர்; கடவுளே, உமக்கு நிகர் யார்?
20 இன்னல்கள் பலவற்றையும் தீங்குகளையும் நான் காணுமாறு செய்த நீரே, எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்; பாதாளத்தினின்று என்னைத் தூக்கி விடுவீர்.
21 என் மேன்மையைப் பெருகச் செய்து மீண்டும் என்னைத் தேற்றுவீர்.
22 என் கடவுளே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உமது உண்மையையும் புகழ்வேன்; இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
23 நான் உமக்குப் புகழ்பாடுகையில் என் நா அக்களிக்கும்; நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்.
24 என் வாழ்நாளெல்லாம் என் நா உமது நீதியை எடுத்துரைக்கும். ஏனெனில் எனக்குத் தீங்குசெய்யப் பார்த்தவர்கள் வெட்கமும் மானக்கேடும் அடைந்து விட்டார்கள்.
யோபு நீதிமொழிகள் சபை உரையாளர்
Visit Catholic Gallery Main Site
Related Articles