எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர் தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார்.
வரவிருக்கும் அரசர்
2காரிருளில் நடந்துவந்த மக்கள்
பேரொளியைக் கண்டார்கள்;
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில்
குடியிருப்போர்மேல்
சுடர் ஒளி உதித்துள்ளது.
3ஆண்டவரே! அந்த இனத்தாரைப்
பல்கிப் பெருகச் செய்தீர்;
அவர்கள் மகிழ்ச்சியை
மிகுதிப்படுத்தினீர்;
அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல்
உம் திருமுன் அவர்கள்
அகமகிழ்கிறார்கள்;
கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது
அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.
4மிதியான் நாட்டுக்குச் செய்தது போல
அவர்களுக்குச் சுமையாக இருந்த
நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்;
அவர்கள் தோளைப் புண்ணாக்கிய
தடியைத் தகர்த்துப் போட்டீர்;
அவர்களை ஒடுக்குவோரின்
கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.
5அமளியுற்ற போர்க்களத்தில்
போர்வீரன் அணிந்திருந்த
காலணிகளும், இரத்தக் கறைபடிந்த
ஆடைகள் அனைத்தும்
நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.
6ஏனெனில், ஒரு குழந்தை
நமக்குப் பிறந்துள்ளார்;
ஓர் ஆண்மகவு நமக்குத்
தரப்பட்டுள்ளார்;
ஆட்சிப்பொறுப்பு
அவர் தோள்மேல் இருக்கும்;
அவர் திருப்பெயரோ
‘வியத்தகு ஆலோசகர்,
வலிமைமிகு இறைவன்,
என்றுமுள தந்தை,
அமைதியின் அரசர்’
என்று அழைக்கப்படும்.
7அவரது ஆட்சியின் உயர்வுக்கும்
அமைதி நிலவும் அவரது அரசின்
வளர்ச்சிக்கும் முடிவு இராது;
தாவீதின் அரியணையில் அமர்ந்து
தாவீதின் அரசை நிலைநாட்டுவார்;
இன்றுமுதல் என்றென்றும்
நீதியோடும் நேர்மையோடும்
ஆட்சிபுரிந்து அதை
நிலை பெயராது உறுதிப்படுத்துவார்;
படைகளின் ஆண்டவரது பேரார்வம்
இதைச் செய்து நிறைவேற்றும்.
8யாக்கோபுக்கு எதிராக ஓர் வார்த்தையை
ஆண்டவர் அனுப்பியுள்ளார்;
அது இஸ்ரயேல்மேல் இறங்கித்
தன் செயலைச் செய்யும்.
இஸ்ரயேலுக்குத் தண்டனைத் தீர்ப்பு
9எப்ராயிமியர், சமாரியாவின் குடிகள்
ஆகிய அனைத்து மக்களும்
இதை அறிந்து கொள்வார்கள்.
10செருக்கினாலும் இதயத்தில் எழும்
இறுமாப்பினாலும்
அவர்கள் சொல்லுவதாவது:
“செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது:
எனினும், செதுக்கிய கற்களால்
நாங்கள் கட்டியெழுப்புவோம்.
காட்டத்தி மரங்கள்
வெட்டி வீழ்த்தப்பட்டன;
எனினும், அவற்றிற்குப் பதிலாகக்
கேதுரு மரங்களை வைப்போம்”.
11ஆதலால் ஆண்டவர்
இரட்சீனின் அதிகாரிகளை
அவர்களுக்கு எதிராய்க்
கிளர்ந்தெழச் செய்தார்;
அவர்கள் பகைவரைத் தூண்டி விட்டார்.
12கிழக்கிலிருந்து சிரியரும்,
மேற்கிலிருந்து பெலிஸ்தியரும்
வந்தார்கள்;
தங்கள் வாயை விரிவாய்த்திறந்து
இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்;
இவையெல்லாம் நடந்தும்,
அவரது சீற்றம் தணியவிலலை;
ஓங்கிய அவரது சினக் கை
இன்னும் மடங்கவில்லை.
13தங்களை நொறுக்க வைத்தவரிடம்
மக்கள் திரும்பவில்லை;
படைகளின் ஆண்டவரைத்
தேடவுமில்லை.
14ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில்
உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை
அனைவரையும்,
ஒலிவமரக்கிளையையும் நாணலையும்
ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்;
15முதியவரும், மதிப்புமிக்கவருமே
உயர்ந்தோர்;
பொய்யைப் போதிக்கும்
இறைவாக்கினரோ தாழ்ந்தோர்.
16இந்த மக்களை வழிநடத்தியோர்
அவர்களை நெறிபிறழச் செய்தனர்;
அவர்களால் வழிநடத்தப்பட்டவரோ
அழிந்துபோயினர்.
17ஆதலால், அவர்களுடைய
இளைஞரைக் குறித்து
என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை;
அவர்களிடையே வாழும் திக்கற்றோர்,
கைம்பெண்கள்மேல்
இரக்கம் காட்டவில்லை;
அவர்கள் அனைவரும்
இறைப்பற்று இல்லாதவர்கள்;
தீச்செயல் புரிபவர்கள்;
எல்லாரும் மதிகேட்டையே பேசினர்;
இவையெல்லாம் நடந்தும்
அவர் சீற்றம் தணியவில்லை;
ஓங்கிய அவரது சினக் கை
இன்னும் மடங்கவில்லை.
18கொடுமை தீயைப்போல்
கொழுந்து விட்டு எரிந்தது;
அது முட்புதர்களையும்
நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது;
காட்டின் அடர்ந்த பகுதிகளை
அது கொளுத்திவிட்டது;
அதனால் புகைமண்டலம் சுழன்று
மேலே எழுந்தது.
19படைகளின் ஆண்டவரது சினத்தால்
நாடு நெருப்புக்கு இரையானது;
மக்கள் நெருப்புக்கு
விறகைப் போல் ஆனார்கள்;
ஒருவரும் தம் அடுத்திருப்பாரை
விட்டு வைக்கவில்லை.
20அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப்
பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை;
இடப்புறம் இருப்பனவற்றை
எடுத்து விழுங்கியும்
மனம் நிறைவடையவில்லை;
ஒவ்வொருவரும் தம் குழந்தையின்
சதையைக் கூடத் தின்றனர்;
21மனாசே குடும்பத்தார்
எப்ராயிம் குடும்பத்தாரையும்
எப்ராயிம் குடும்பத்தார்
மனாசே குடும்பத்தாரையும்
கொன்று தின்றனர்;
இரு குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து
யூதாவின் மேல் பாய்ந்தனர்;
இவையெல்லாம் நடந்தும்
அவரது சீற்றம் தணியவில்லை;
ஓங்கிய அவரது சினக் கை
இன்னும் மடங்கவில்லை;