எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு
1ஆமோட்சின் மகன் எசாயா
பாபிலோனைக் குறித்துக் கண்ட
காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு:
2வறண்ட மலை ஒன்றில்
போர்க்கொடி ஏற்றுங்கள்;
போர்வீரர்களை
உரக்கக் கூவி அழையுங்கள்;
உயர்குடி மக்கள் வாழும்
நகர வாயில்களுக்குள் நுழையும்படி,
அவர்களுக்குக் கையசைத்துச்
சைகை காட்டுங்கள்.
3போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள
என் வீரர்களுக்கு,
நானே ஆணை பிறப்பித்துள்ளேன்;
நான் சினமடைந்து பிறப்பித்துள்ள
என் கட்டளையை நிறைவேற்றிட,
தங்கள் வலிமையால்
பெருமிதம் கொள்ளும்
என் வீரர்களை அழைத்துள்ளேன்.
4மலைகளின் மேல் எழும்
பேரிரைச்சலைக் கேளுங்கள்;
அது பெருங்கூட்டமாய் வரும்
மக்களின் ஆரவாரம்;
அரசுகளின் ஆர்ப்பாட்டக்
குரலைக் கேளுங்கள்,
பிற இனத்தார் ஒருங்கே
திரண்டு விட்டனர்;
5தொலைநாட்டிலிருந்தும்
தொடுவானத்து எல்லைகளிலிருந்தும்
அவர்கள் வருகின்றார்கள்;
ஆண்டவர் தம் கடும்சினத்தின்
போர்க் கலன்களோடு
உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார்.
6அழுது புலம்புங்கள்,
ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது;
எல்லாம் வல்லவரிடமிருந்து
அழிவு வடிவத்தில் அது வருகின்றது.
7ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்;
மானிட நெஞ்சம் அனைத்தும்
உருகி நிற்கும்.
8அவர்கள் திகிலடைவார்கள்;
துன்ப துயரங்கள்
அவர்களைக் கவ்விக்கொள்ளும்;
பேறுகாலப் பெண்ணைப்போல
வேதனையடைவார்கள்;
ஒருவர் மற்றவரைப் பார்த்துத்
திகைத்து நிற்பர்;
கோபத் தீயால் அவர்கள் முகம்
கனன்று கொண்டிருக்கும்.
9இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது,
கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும்
நிறைந்த நாள் அது;
மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும்
நாள் அது;
அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும்
அழித்துவிடும் நாள் அது.
10வானத்து விண்மீன்களும்
இராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா;
தோன்றும்போதே கதிரவன்
இருண்டு போவான்;
வெண்ணிலாவும் தண்ணொளியைத்
தந்திடாது.
11உலகை அதன் தீச்செயலுக்காகவும்
தீயோரை அவர்தம்
கொடுஞ் செயலுக்காகவும்
நான் தண்டிப்பேன்;
ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்;
அச்சுறுத்துவோரின் இறுமாப்பை
அடக்குவேன்.
12மானிடரைப் பசும் பொன்னைவிடவும்
மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும்
அரிதாக்குவேன்.
13ஆதலால், வானத்தை
நடுங்கச் செய்வேன்;
மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்து
ஆட்டங் கொடுக்கும்;
படைகளின் ஆண்டவரது கோபத்தால்
அவரது கடும்சினத்தின் நாளில்
இது நடக்கும்.
14துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும்,
ஒன்று சேர்ப்பாரின்றிச்
சிதறுண்டு ஆடுகளைப் போலவும்,
எல்லாரும் தம் மக்களிடம்
திரும்பிச் செல்வர்;
எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத்
தப்பியோடுவர்.
15அகப்பட்ட ஒவ்வொருவரும்
பிடிபட்ட ஒவ்வொருவரும்
வாளால் மடிவர்.
16அவர்கள் பச்சிளம் குழந்தைகள்
அவர்கள் கண்ணெதிரே
மோதியடிக்கப்படுவர்.
அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்,
அவர்கள் துணைவியர்
மானபங்கப்படுத்தப்படுவர்.
17இதோ, அவர்களுக்கு எதிராக நான்
மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன்,
அவர்கள் வெள்ளியைப்
பெரிதாக எண்ணாதவர்கள்;
பொன்னை அடைவதற்கு
ஆவல் கொள்ளாதவர்கள்.
18அவர்கள் வில்வீரர்
இளைஞரை மோதியடிப்பார்கள்,
பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள்
கருணை காட்டமாட்டார்கள்;
சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில்
இரக்கம் இராது.
19அரசுகளில் சிறப்புமிகு கல்தேயரின்
மேன்மையும் பெருமையுமான பாபிலோன்
கடவுள் அழித்த சோதோம்
கொமோராவைப்போல ஆகிவிடும்.
20இனி எவரும் அதில்
ஒருபோதும் குடியிருக்க மாட்டார்;
அதுவும் தலைமுறை தலைமுறையாகக்
குடியற்று இருக்கும்;
அரேபியர் அங்கே
கூடாரம் அமைக்கமாட்டார்;
ஆயர்கள் தம் மந்தையை அங்கே
இளைப்பாற விடுவதில்லை.
21ஆனால், காட்டு விலங்குகள்
அங்கே படுத்துக் கிடக்கும்;
ஊளையிடும் குள்ளநரிகள்
அவர்கள் வீடுகளை நிரப்பும்;
தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்;
வெள்ளாட்டுக் கிடாய்கள்
அங்கே துள்ளித் திரியும்.
22அவர்கள் கோட்டைகளில்
ஓநாய்கள் அலறும்;
அரண்மனைகளில்
குள்ளநரிகள் ஊளையிடும்;
அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது;
அதற்குரிய நாள்கள்
அண்மையில் உள்ளன.