எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1ஆண்டவர் கூறுவது இதுவே:
உன் தாயைத் தள்ளி
வைத்ததற்கான மணமுறிவுச் சீட்டு எங்கே?
உங்களை விற்றுவிடும் அளவுக்கு
எவனுக்கு நான் கடன்பட்டிருந்தேன்?
இதோ, உங்கள் தீச்செயல்களை
முன்னிட்டே நீங்கள் விற்கப்பட்டீர்கள்;
உங்கள் வன்செயல்களின் பொருட்டே
உங்கள் தாய் தள்ளி வைக்கப்பட்டாள்.
2நான் வந்தபோது ஒருவனும்
இல்லாமற் போனதேன்?
நான் அழைத்தபோது பதில் தர
எவனும் இல்லாததேன்?
உங்களை மீட்க இயலாதவாறு
என்கை சிறுத்துவிட்டதோ?
விடுவிக்கக் கூடாதவாறு
என் ஆற்றல் குன்றிவிட்டதோ?
இதோ என் கடிந்துரையால்
கடல்தனை வற்றச் செய்கிறேன்;
ஆறுகளைப் பாலையாக்குகிறேன்;
அவற்றின் மீன்கள் நீரின்றி நாறுகின்றன;
தாகத்தால் சாகின்றன.
3வான்வெளியைக் காரிருளால்
உடுத்துவிக்கின்றேன்;
அதனைச் சாக்கு உடையால்
போர்த்துகின்றேன்.
ஆண்டவர்தம் ஊழியரின் ஒப்படைப்பு
4நலிந்தவனை நல்வாக்கால்
ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட,
ஆண்டவராகிய என் தலைவர்,
கற்றோனின் நாவை
எனக்கு அளித்துள்ளார்;
காலைதோறும் அவர் என்னைத்
தட்டி எழுப்புகின்றார்;
கற்போர் கேட்பது போல்
நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.
5ஆண்டவராகிய என் தலைவர்
என் செவியைத் திறந்துள்ளார்;
நான் கிளர்ந்தெழவில்லை;
விலகிச் செல்லவுமில்லை.
6அடிப்போர்க்கு என் முதுகையும்,
தாடியைப் பிடுங்குவோர்க்கு
என் தாடையையும் ஒப்புவித்தேன்.
நிந்தனை செய்வோர்க்கும்
காறி உமிழ்வோர்க்கும்
என் முகத்தை மறைக்கவில்லை.
7ஆண்டவராகிய என் தலைவர்
துணை நிற்கின்றார்;
நான் அவமானம் அடையேன்;
என் முகத்தைக் கற்பாறை
ஆக்கிக் கொண்டேன்;
இழிநிலையை நான் அடைவதில்லை
என்றறிவேன்.
8நான் குற்றமற்றவன் என எனக்குத்
தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்;
என்னோடு வழக்காடுபவன் எவன்?
நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்;
என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்?
அவன் என்னை நெருங்கட்டும்.
9இதோ, ஆண்டவராகிய என் தலைவர்
எனக்குத் துணைநிற்கின்றார்;
நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட
யாரால் இயலும்?
அவர்கள் அனைவரும் துணியைப் போல்
இற்றுப்போவார்கள்;
புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.
10உங்களுள் ஆண்டவருக்கு அஞ்சி நடந்து
அவர்தம் அடியானின் சொல்லுக்குச்
செவிசாய்ப்பவன் எவன்?
அவன் ஒளிபெற இயலா நிலையில்
இருளில் நடந்துவருபவன்;
ஆண்டவரின் பெயர்மீது
நம்பிக்கை கொண்டு
தன்கடவுளைச் சார்ந்து கொள்பவன்.
11ஆனால், நெருப்பு மூட்டித்
தீப்பிழம்புகளால் சூழப்பட்டவர்களே;
நீங்கள் அனைவரும்
உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும்,
நீங்கள் மூட்டிய
தீப்பிழம்புகளிடையேயும் நடங்கள்;
என் கையினின்று
உங்களுக்குக் கிடைப்பது இதுவே:
நீங்கள் வேதனையின் நடுவே
உழன்று கிடப்பீர்கள்.