எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
மக்களினத்தார் யாவரும் ஆண்டவரின் மக்கள்
1ஆண்டவர் கூறுவது இதுவே:
நீதியை நிலைநாட்டுங்கள்,
நேர்மையைக் கடைபிடியுங்கள்;
நான் வழங்கும் விடுதலை
அண்மையில் உள்ளது;
நான் அளிக்கும் வெற்றி
விரைவில் வெளிப்படும்.
2இவ்வாறு செய்யும் மனிதர்
பேறு பெற்றவர்;
ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது
கடைப்பிடித்து,
எந்தத் தீமையும் செய்யாது
தம் கையைக் காத்துக் கொண்டு,
இவற்றில் உறுதியாய் இருக்கும்
மானிடர் பேறுபெற்றவர்.
3ஆண்டவரோடு தம்மை
இணைத்துக்கொண்ட பிறஇனத்தவர்,
‘தம் மக்களிடமிருந்து ஆண்டவர்
என்னைப் பிரித்துவிடுவது உறுதி’
என்று சொல்லாதிருக்கட்டும்;
அவ்வாறே அண்ணகனும்,
‘நான் வெறும் பட்டமரம்’ என்று
கூறாதிருக்கட்டும்.
4ஆண்டவர் கூறுவது இதுவே:
என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து,
நான் விரும்புகின்றவற்றையே
தேர்ந்து கொண்டு,
என் உடன்படிக்கையை உறுதியாய்ப்
பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,
5என் இல்லத்தில்,
என் சுற்றுச்சுவர்களுக்குள்
நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்;
புதல்வர் புதல்வியரைவிடச்
சிறந்ததொரு பெயரை வழங்குவேன்;
ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை
அவர்களுக்குச் சூட்டுவேன்.
6ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும்,
அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும்,
அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும்,
தங்களை ஆண்டவரோடு
இணைத்துக்கொண்டு
ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது
கடைப்பிடித்து,
தம் உடன்படிக்கையை
உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும்
பிற இன மக்களைக் குறித்து
ஆண்டவர் கூறுவது:
7அவர்களை நான் என் திருமலைக்கு
அழைத்துவருவேன்;
இறைவேண்டல் செய்யப்படும்
என் இல்லத்தில்
அவர்களை மகிழச் செய்வேன்;
அவர்கள் படைக்கும் எரிபலிகளும்
மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல்
ஏற்றுக்கொள்ளப்படும்;
ஏனெனில், என் இல்லம்
மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய
‘இறைமன்றாட்டின் வீடு’
என அழைக்கப்படும்.
8சிதறிப்போன இஸ்ரயேல் மக்களை
ஒருங்கே சேர்க்கும்
என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது:
அவர்களுள் ஏற்கெனவே
கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களோடு
ஏனையோரையும் சேர்த்துக் கொள்வேன்.
இஸ்ரயேலின் தலைவர்கள் கண்டிக்கப்படல்
9வயல்வெளி விலங்குகளே,
காட்டு விலங்குகளே, நீங்களெல்லாம்
இரை விழுங்க வாருங்கள்.
10அவர்களின் சாமக்காவலர் அனைவரும்
குருடர், அறிவற்றவர்;
அவர்கள் அனைவரும்
குரைக்க இயலா ஊமை நாய்கள்;
படுத்துக்கிடந்து
கனவு காண்கின்றவர்கள்;
தூங்குவதையே விரும்புகின்றவர்கள்.
11தீராப் பசிகொண்ட நாய்கள்;
நிறைவு என்பதையே அறியாதவர்;
பகுத்தறிவு என்பதே இல்லாத மேய்ப்பர்;
அவர்கள் அனைவரும் அவரவர் தம்
வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்;
ஒவ்வொருவரும் தம் சொந்த
ஆதாயத்தைத் தேடுகின்றனர்.
12ஒவ்வொருவரும், ‘வாருங்கள்;
நான் திராட்சை இரசம்
கொண்டு வருவேன்;
போதையேற நாம் மது அருந்துவோம்;
நாளை இன்று போலும்
இதைவிடச் சிறப்பாகவும்
அமையும்’ என்கின்றனர்.