எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
கலகம் செய்வோர்க்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு
1முன்பு என்னிடம் எதுவும்
கேளாதவர்கள்
என்னைத் தேடி அடைய இடமளித்தேன்;
என்னை நாடாதவர்கள்
என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்;
என் பெயரை வழிபடாத
மக்களினத்தை நோக்கி,
“இதோ நான், இதோ நான்” என்றேன்.
2தங்கள் எண்ணங்களின்படி நடந்து
பயனற்ற வழிமுறைகளைப் பின்பற்றும்
கலகக்கார மக்களினத்தின்
மீது நாள் முழுவதும்
என் கைகளை விரித்து நீட்டினேன்.
3அந்த மக்களினத்தார் என் கண் எதிரே
இவற்றைச் செய்து இடையறாது
எனக்குச் சினமூட்டுகின்றனர்;
தோட்டங்களில் பலியிட்டு,
செங்கற்கள்மேல் தூபம் காட்டுகின்றனர்.
4கல்லறைகளிடையே அமர்ந்து
மறைவிடங்களில்
இரவைக் கழிக்கின்றனர்;
பன்றி இறைச்சியைத் தின்கின்றனர்;
தீட்டான கறிக்குழம்பைத்
தம் கலங்களில் வைத்துள்ளனர்.
5இவ்வாறிருந்தும், “எட்டி நில்,
என் அருகில் வராதே,
நான் உன்னைவிடத்
தூய்மையானவன்” என்கின்றனர்.
என் சினத்தால்
மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும்
நாள்முழுவதும் எரியும் நெருப்புப் போலும்
இவர்கள் இருக்கின்றனர்.
6அவர்களுக்குரியது என்முன்
எழுதப்பட்டாயிற்று;
நான் அமைதியாய் இருப்பதில்லை;
அவர்களுக்குத் தகுந்த கைம்மாறை
அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.
7அவர்கள் தீச்செயலுக்கும்
அவர்கள் மூதாதையர் தீச்செயலுக்கும்
சேர்த்துக் கொட்டுவேன்,
என்கிறார் ஆண்டவர்.
ஏனெனில் அவர்கள்
மலைமேல் தூபம் காட்டினார்கள்;
குன்றுகளின்மேல்
என்னைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்;
அவர்களுடைய முன்னைய
செயல்களுக்குரிய கைம்மாறை
அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.
8ஆண்டவர் கூறுவது இதுவே:
திராட்சைக்குலையில்
புது இரசம் கிடைக்கும்போது,
‘அதை அழிக்காதே,
அதில் ஆசி உள்ளது’ என்பார்கள்.
அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும்
நான் செயலாற்றுவேன்;
அவர்கள் அனைவரையும்
அழிந்துவிட மாட்டேன்.
9யாக்கோபினின்று வழிமரபினரையும்,
யூதாவினின்று என் மலைகளை
உடைமையாக்குவோரையும்
தோன்றச் செய்வேன்.
நான் தேர்ந்துகொண்டோர்
நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்;
என் ஊழியர் அங்கே வாழ்வர்.
10என்னை வழிபடும் என் மக்களுக்குச்
சாரோன் சமவெளி
ஆடுகளுக்கு மேய்நிலமாகவும்
ஆக்கோர் பள்ளத்தாக்கு
மாடுகளுக்குத் தொழுவமாகவும் அமையும்.
11ஆண்டவராகிய என்னைக் கைவிட்டு விட்டு,
என் திருமலையை மறந்தவர்களே!
கத்து* தெய்வத்திற்கு விருந்து படைத்து,
மெனீ** தெய்வத்திற்கு
நறுமணத்திராட்சை இரசத்தைக்
கிண்ணங்களில் வார்ப்பவர்களே!
12உங்களை வாளுக்கு
இரையெனக் குறிப்பேன்;
நீங்கள் அனைவரும்
கொலைக்குத் தலைதாழ்த்துவீர்கள்;
ஏனெனில், நான் அழைப்பு விடுத்தேன்;
நீங்கள் மறுமொழி தரவில்லை;
நான் பேசினேன்,
நீங்கள் கவனிக்கவில்லை;
என் பார்வைக்குத்
தீமையெனப்பட்டதைச் செய்தீர்கள்;
எனக்கு விருப்பமில்லாததைத்
தேர்ந்து கொண்டீர்கள்.
13ஆதலால் என் தலைவராகிய
ஆண்டவர் கூறுவது இதுவே:
என் ஊழியர்கள் உண்பார்கள்;
நீங்களோ பசியால் வாடுவீர்கள்.
என் வேலையாள்கள் பானம் பருகுவார்கள்;
நீங்களோ தாகத்தால் தவிப்பீர்கள்;
என் அடியார்கள் அக்களிப்பார்கள்;
நீங்களோ அவமதிக்கப்படுவீர்கள்.
14என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்து
ஆர்ப்பரிப்பார்கள்;
நீங்களோ நெஞ்சம் உடைந்து
கூக்குரலிடுவீர்கள்;
ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள்.
15நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு
உங்கள் பெயரைச்
சாபப் பெயராய் விட்டுச் செல்வீர்கள்;
என் தலைவராகிய ஆண்டவர்
உங்களைக் கொன்றொழிப்பார்;
தம் ஊழியருக்கோ புதுப்பெயர் சூட்டுவார்.
16மண்ணுலகில் ஆசி பெற விழைபவன்
உண்மைக் கடவுளின் பெயரால்
ஆசிபெறுவான்;
பூவுலகில் ஆணையிடுபவன்
மெய்க் கடவுளின் பெயரால்
ஆணையிடுவான்;
ஏனெனில், முந்நாளைய துன்பங்கள்
மறந்து போயின;
அவை என் பார்வையிலிருந்து
மறைந்து போயின.
புதிய படைப்பு
17இதோ! புதிய விண்ணுலகையும்
புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்;
முந்தியவை
நினைத்துப் பார்க்கப்படுவதில்லை;
மனத்தில் எழுதுவதுமில்லை.
18நான் படைப்பனவற்றில் நீங்கள்
என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள்.
இதோ நான் எருசலேமை
மகிழ்ச்சிக்குரியதாகவும்
அதன் மக்களைப்
பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.
19நானும் எருசலேமை முன்னிட்டு
மகிழ்ச்சியடைவேன்;
என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்;
இனி அங்கே அழுகையும் கூக்குரலும்
ஒருபோதும் கேட்கப்படா.
20இனி அங்கே
சில நாள்களுக்குள் இறக்கும்
பச்சிளங்குழந்தையே இராது;
தம் வாழ்நாளை நிறைவு செய்யாத
முதியவர் இரார்;
ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும்
இளைஞனாகக் கருதப்படுவான்.
பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும்
சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.
21அவர்கள் வீடு கட்டி
அங்குக் குடியிருப்பார்கள்;
திராட்சை நட்டு
அதன் கனிகளை உண்பார்கள்.
22வேறொருவர் குடியிருக்க
அவர்கள் கட்டுவதில்லை;
மற்றொருவர் உண்ண
அவர்கள் நடுவதில்லை;
மரங்களின் வாழ்நாள் போன்றே
என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்;
நான் தேர்ந்து கொண்டவர்கள்
தங்கள் உழைப்பின் பயனை
நெடுநாள் துய்ப்பார்கள்.
23வீணாக அவர்கள் உழைப்பதில்லை;
தங்கள் பிள்ளைகளை
அழிவுக்கெனப் பெற்றெடுப்பதில்லை;
ஏனெனில், அவர்கள்
ஆண்டவரது ஆசியைப் பெற்றோரின்
வழிமரபினர்!
அவர்களின் தலைமுறையினர்
அவர்களுடன் இருப்பார்கள்.
24அவர்கள் வேண்டுவதற்கு முன்னே
நான் மறுமொழி தருவேன்;
அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே
பதிலளிப்பேன்.
25ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
ஒருமித்து மேயும்;
சிங்கம் மாட்டைப்போல்
வைக்கோல் தின்னும்;
பாம்பு புழுதியைத் தின்னும்;
என் திருமலை முழுவதிலும்
தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும்
எவருமில்லை, என்கிறார் ஆண்டவர்.