எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
மக்களினத்தார்க்கு ஆண்டவர் அளிக்கும் தீர்ப்பு
1ஆண்டவர் கூறுவது இதுவே:
விண்ணகம் என் அரியணை;
மண்ணகம் என் கால்மணை;
அவ்வாறிருக்க எத்தகைய கோவிலை
நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்?
எத்தகைய இடத்தில்
நான் ஓய்வெடுப்பேன்?
2இவை அனைத்தையும்
என் கைகளே உண்டாக்கின;
இவை யாவும் என்னால் உருவாகின,
என்கிறார் ஆண்டவர்.
எளியவரையும்,
உள்ளம் வருந்துபவரையும்,
என் சொல்லுக்கு அஞ்சுபவரையும்
நான் கண்ணோக்குவேன்.
3அவர்களுக்கு
இளம் காளையை வெட்டிப் பலியிடுவதும்
மனிதரைக் கொலைச்செய்வதும்
ஒன்றாம்;
ஆட்டுக் குட்டியைப்
பலியாகக் கொடுப்பதும்
நாயின் கழுத்தை முறிப்பதும் ஒன்றாம்;
உணவுப் படையலைப் படைப்பதும்,
பன்றியின் இரத்தத்தை
ஒப்புக் கொடுப்பதும் ஒன்றாம்;
நினைவுப் படையலாகிய
தூபம் காட்டுதலைச் செய்வதும்
சிலைகளை வணங்குதலும் ஒன்றாம்;
அவர்கள் தங்கள் வழிகளையே
தெரிந்தெடுத்துள்ளனர்;
தங்கள் அருவருப்புகள் மீது
அவர்கள் உள்ளம் மகிழ்கின்றது.
4நானும் அவர்களுக்குரிய
தண்டனையைத் தேர்ந்து கொள்வேன்;
அவர்கள் அஞ்சுகின்றவற்றை
அவர்கள்மீது வரச்செய்வேன்;
ஏனெனில், நான் அழைத்தபோது
எவரும் பதில் தரவில்லை;
நான் பேசியபோது
அவர்கள் செவி கொடுக்கவில்லை;
என் கண்முன்னே
தீயவற்றைச் செய்தார்கள்;
நான் விரும்பாதவற்றைத்
தெரிந்தெடுத்தார்கள்.
5ஆண்டவரின் வாக்குக்கு
நடுநடுங்குவோரே, இதைக் கேளுங்கள்;
என் பெயர் பொருட்டு
உங்களை வெறுத்து ஒதுக்கும்
உங்கள் உறவின் முறையார்
‘நாங்கள் உங்கள் மகிழ்ச்சியைக்
காணும் பொருட்டு
ஆண்டவர் தம் மாட்சியைக்
காண்பிக்கட்டும்’ என்கிறார்கள்.
ஆனால் அவர்கள்தான்
வெட்கம் அடைவார்கள்.
6இதோ, நகரில்
பேரொலி கேட்கின்றது!
திருக்கோவிலில் பேரோசை எழுகின்றது!
ஆண்டவர் தம் பகைவருக்குத்
தக்க பதலடி கொடுப்பதால்
எழும் இரைச்சலே அது!
7வேதனை வருமுன்னே
சீயோன் பிள்ளை பெற்றாள்!
பிரசவ நேரம் நெருங்குமுன்னே
ஆண்மகவை ஈன்றாள்!
8இத்தகைய நிகழ்ச்சிபற்றிக்
கேள்வியுற்றவர் யார்?
இதைப் போன்ற ஒன்றைப் பார்த்தவர் யார்?
ஒரே நாளில் நாடு ஒன்று
உருவாகிட இயலுமா?
ஒரு நொடிப்பொழுதில்
மக்களினம் ஒன்று பிறக்கக்கூடுமா?
ஆனால் வேதனை ஏற்பட்டவுடனே
சீயோன் தன் பிள்ளைகளைப்
பெற்றுவிட்டாள்.
9பேறுகாலத்தை ஏற்படுத்திய நான்
மகப்பேற்றைத் தடை செய்வேனா?
என்கிறார் ஆண்டவர்.
மகப்பேற்றுக்குக் காரணமான நான்
கருப்பையை அடைத்துவிடுவேனா?
என்கிறார் உங்கள் கடவுள்.
10எருசலேமின் மேல்
அன்பு கொண்ட அனைவரும்
அவளுடன் அகமகிழ்ந்து
அவள் பொருட்டு அக்களியுங்கள்;
அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும்
அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து
கொண்டாடி ஆர்ப்பரியுங்கள்.
11அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும்
முலைகளில் குடித்து
நீங்கள் நிறைவடைவீர்கள்;
அவள் செல்வப் பெருக்கில்
நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.
12ஆண்டவர் கூறுவது இதுவே:
ஆறுபோல் நிறைவாழ்வு
பாய்ந்தோடச் செய்வேன்;
பெருக்கெடுத்த நீரோடைபோல்
வேற்றினத்தாரின் செல்வம்
விரைந்து வரச் செய்வேன்;
நீங்கள் பால் பருகுவீர்கள்;
மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்;
மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.
13தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல்
நான் உங்களைத் தேற்றுவேன்;
எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.
14இதை நீங்கள் காண்பீர்கள்,
உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும்,
உங்கள் எலும்புகள்
பசும்புல்போல் வளரும்;
ஆண்டவர் தம் ஆற்றலைத்
தம் ஊழியருக்குக் காட்டுவார் என்பதும்
அவரது சினம்
அவர்தம் பகைவருக்கு எதிராய்
மூளும் என்பதும் அறியப்படும்.
15இதோ! ஆண்டவர்
நெருப்பென வருவார்;
அவர் தேர்கள் புயலென விரையும்;
கொழுந்து விட்டெரியும்
தம் சினத்தைக் கொட்டுவார்;
தீப்பிழம்பென
அவர்தம் கண்டனம் வருகின்றது.
16தம் நெருப்பையும்
வாளையும் கொண்டு
மானிடர் அனைவர்மீதும்
ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பு
வழங்குவார்;
எண்ணிறந்தோரை
ஆண்டவர் கொன்றுவிடுவார்.
17தோட்ட வழிபாட்டிற்கெனத் தங்களைத் தூய்மைப்படுத்தித் தீட்டகற்றுவோர், அதற்கு அணி அணியாய்ச் செல்வோர், பன்றி, எலி இவற்றின் இறைச்சி மற்றும் அருவருப்புகளை உண்போர் ஆகிய அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர், என்கிறார் ஆண்டவர்.
18அவர்கள் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்.
19அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில்வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ்பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.
20அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர்.
21மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும் லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
22நான் படைக்கின்ற
புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும்
என் முன்னே நிலைத்திருப்பது போல்,
உங்கள் வழித்தோன்றல்களும்
உங்கள் பெயரும் நிலைத்திருக்கும்,
என்கிறார் ஆண்டவர்.
23அமாவாசைதோறும்
ஓய்வுநாள்தோறும்
மானிடர் அனைவரும்
என்முன் வழிபட வருவர்,
என்கிறார் ஆண்டவர்.
24அவர்கள் புறப்பட்டுச் சென்று,
என்னை எதிர்த்துக்
கிளர்ச்சி செய்தோரின்
பிணங்களைக் காண்பார்கள்;
அவர்களை அரிக்கும் புழு சாவதில்லை;
அவர்களை எரிக்கும் நெருப்பு
அணைந்து போவதில்லை;
மானிடர் யாவருக்கும்
அவர்கள் ஓர் அருவருப்பாக இருப்பார்கள்.