எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1 சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்;;தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே;
2 நான் உனக்கு முன்னே சென்று குன்றுகளைச் சமப்படுத்துவேன்; செப்புக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களைத் தகர்ப்பேன்.
3 இருளில் மறைத்துவைத்த கருவூலங்களையும் மறைவிடங்களில் ஒளித்துவைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன்; பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன்.
4 என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்.
5 நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்.
6 கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.
7 நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல் வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே.
8 வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக்கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.
9 தன்னை உருவாக்கியவரை எதிர்த்து வழக்காடுபவனுக்கு ஐயோ கேடு! பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே! களிமண் குயவனிடம், “நீ என்னைக் கொண்டு என்ன செய்கிறாய்” என்றும் அவன் வனைந்தது அவனிடம், “உனக்குக் கைத்திறனே இல்லை” என்றும் கூறுவதுண்டோ?
10 தந்தையிடம், “நீர் ஏன் என்னை இப்படிப் பிறப்பித்தீர்” என்றும், தாயிடம், “நீ ஏன் என்னை இப்படிப் பெற்றெடுத்தாய்” என்றும் வினவுபவனுக்கு ஐயோ கேடு!
11 இஸ்ரயேலின் தூயவரும் அவனை உருவாக்கியவருமான ஆண்டவர் கூறுவது இதுவே; “நிகழவிருப்பன குறித்தும் என் மக்களைப்பற்றியும் என்னிடம் கேள்வி கேட்பீர்களா? என் கைவினை பற்றி எனக்கே கட்டளையிடுவீர்களா?
12 நான் உலகை உருவாக்கி அதன்மேல் மனிதரைப் படைத்தேன்; என் கைகளே வானத்தை விரித்தன; அதன் படைத்திரளுக்கு ஆணையிட்டதும் நானே.
13 வெற்றிபெறுமாறு நான் சைரசை எழுப்பினேன்; அவன் செல்லும் அனைத்து வழிகளையும் சீர்படுத்தினேன்; அவன் என் நகரைக் கட்டியெழுப்புவான்; நாடு கடத்தப்பட்ட என் மக்களை ஈட்டுப்பொருளோ அன்பளிப்போ பெறாது திருப்பி அனுப்புவான்” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
14 ஆண்டவர் கூறுவது இதுவே; “எகிப்தியர் தம் செல்வத்தோடும், எத்தியோப்பியர் தம் வணிகப் பொருளோடும் நெடிது வளர்ந்த செபாவியரும் உனக்கு உடைமையாவர். அவர்கள் விலங்கிடப்பட்டு, உனக்குப் பின்வந்து உன்னைப் பணிவர்; உன்னிடம் தன் மன்றாட்டைச் சமர்ப்பித்து, “இறைவன் உம்மிடம்தான் இருக்கிறார்; வேறெங்கும் இல்லை; வேறு கடவுளும் இல்லை “என்பார்கள்.
15 மீட்பரான இஸ்ரயேலின் கடவுளே, உண்மையிலேயே நீர் “தம்மை மறைத்துக்கொள்ளும் இறைவன் “.
16 சிலைகளைச் செய்வோர் அனைவரும் ஒருங்கே வெட்கி நாணினர்; அவர்கள் குழம்பித் தவித்தனர்.
17 ஆண்டவர் என்றுமுள மீட்பை அளித்து இஸ்ரயேலை விடுவித்தருளினார்; என்றென்றும் நீங்கள் வெட்கக்கேடு அடையமாட்டீர்கள்; அவமதிப்புக்கும் உள்ளாக மாட்டீர்கள். “
18 ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே; அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே; வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார். நானே ஆண்டவர், என்னையன்றி வேறு எவரும் இல்லை.
19 நான் மறைவிலும் மண்ணுலகின் இருண்ட பகுதியிலும் பேசியதில்லை; “வெற்றிடத்தில் என்னைத் தேடுங்கள்” என்று நான் யாக்கோபின் வழிமரபிடம் சொல்லவில்லை; ஆண்டவராகிய நான் உண்மையே பேசுகிறேன்; நேர்மையானவற்றை அறிவிக்கிறேன்;
20 மக்களினங்களுள் தப்பிப் பிழைத்தோரே! ஒன்று திரண்டு வாருங்கள்; ஒருங்கே கூடுங்கள்; மரத்தால் செய்த தங்கள் சிலையைச் சுமந்து செல்வோருக்கும், விடுதலை வழங்காத தெய்வத்திடம் தொடர்ந்து மன்றாடுவோருக்கும் அறிவே இல்லை.
21 அறிவியுங்கள்; உங்கள் வழக்கை எடுத்துரையுங்கள்; ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்; தொடக்கத்திலிருந்து இதை வெளிப்படுத்தியவர் யார்? முதன் முதலில் இதை அறிவித்தவர் யார்? ஆண்டவராகிய நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை; நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை.
22 மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை.
23 நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்; என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது; அது வீணாகத் திரும்பி வராது; முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும்.
24 “ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு” என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர்.
25 இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர்.
இனிமைமிகு பாடல் எரேமியா புலம்பல்
Visit Catholic Gallery Main Site
Related Articles