Home » Tamil » எசாயா அதிகாரம் – 22 – திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 22 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

எருசலேம் எச்சரிக்கப்படல்

1காட்சிப் பள்ளத்தாக்கைக் குறித்த

திருவாக்கு: வீட்டுக்கூரைகளின் மேல்

நீங்கள் அனைவரும் ஏறியிருக்கிறீர்களே,

உங்களுக்கு நிகழ்ந்தது என்ன?

2ஆரவாரம் நிறைந்த நகரமே;

அக்களித்து அமர்க்களப்படும் பட்டணமே!

உங்களிடையே கொலை செய்யப்பட்டோர்

வாளால் வெட்டி வீழ்த்தப்படவில்லை,

போர்க்களத்திலும் செத்து மடியவில்லை.

3உங்கள் தலைவர்கள் அனைவரும்

ஒருங்கே ஓட்டமெடுத்தார்கள்;

அம்பு எய்யாமலே அவர்கள் பிடிபட்டார்கள்;

உன்னிடத்தில் இருந்தவர் யாவரும்

வெகு தொலைவிற்குத் தப்பியோடியும்

கண்டுபிடிக்கப்பட்டு

ஒருசேரக் கைதானார்கள்.

4ஆதலால் நான்

“என்னை உற்று நோக்காதீர்கள்,

நான் மனம் கசந்து கதறியழ விடுங்கள்;

என் மக்களாகிய மகளின்

அழிவைக்குறித்து

என்னை தேற்ற முயலாதீர்கள்” என்றேன்.

5ஏனெனில் அமளியும் திகிலும்

நிறைந்த நாள் அது;

மக்கள் மிதிபடும் நேரம் அது.

என் தலைவராகிய

படைகளின் ஆண்டவரது நாள் அது.

காட்சிப் பள்ளத்தாக்கில் இது நிகழ்கிறது;

மதிற் சுவர்கள் தகர்க்கப்படுகின்றன;

மலையை நோக்கி

அபயக்குரல் எழுகிறது.

6ஏலாம் நாட்டினர் அம்பறாத் தூணியை

எடுத்துச் சென்றனர்,

தேர்ப்படையோடும் குதிரை வீரரோடும்

புறப்பட்டனர்;

கீரைச் சார்ந்தோர்

கேடயத்தின் உறையை அகற்றினர்.

7மிகச்சிறந்த உன் பள்ளத்தாக்குகள்

தேர்ப்படைகளால் நிறைந்தன,

குதிரைவீரர்கள் உன் வாயில்களில்

அணிவகுத்து நின்றனர்.

8யூதாவின் அரண் தகர்க்கப்பட்டது;

அந்நாளில் போர்க்கருவிகள் இருந்த

‘வன மாளிகை’யை நாடினீர்கள்.

9தாவீது நகரின் அரணில் பிளவுகள் பல இருப்பதை நீங்கள் கண்டீர்கள்; கீழ்க்குளத்துத் தண்ணீரைச் சேர்த்து வைத்தீர்கள்;

10எருசலேமின் வீடுகளை எண்ணி முடித்தீர்கள்; அரணுக்கு வலுவூட்ட வீடுகளை இடித்தீர்கள்.

11இரு மதில்களுக்கும் இடையே பழைய குளத்துத் தண்ணீருக்கென்று ஒரு நீர்த்தேக்கத்தை அமைத்தீர்கள். ஆனால் அதை உருவாக்கியவரை நீங்கள் நாடவில்லை; தொலையிலிருந்து அதை ஏற்படுத்தியவரை நீங்கள் கண்ணோக்கவுமில்லை.

12அந்நாளில் புலம்பவும்,

ஓலமிட்டுக் கதறி அழவும்

தலையை

மொட்டை அடித்துக்கொள்ளவும்

சாக்கு உடை உடுத்தவும்

படைகளின் ஆண்டவரான

எம் தலைவர் ஆணையிட்டார்.

13நீங்களோ, மகிழ்ந்து

களிப்படைகின்றீர்கள்;

எருதுகளை அடித்து, ஆடுகளை வெட்டி,

இறைச்சியை உண்டு,

திராட்சை இரசத்தைக் குடிக்கின்றீர்கள்.

‘உண்போம், குடிப்போம்,

நாளைக்குச் சாவோம்’ என்கின்றீர்கள்.

14படைகளின் ஆண்டவர்

நான் என் காதால் கேட்குமாறு

வெளிப்படுத்தியது: “நீங்கள் சாகும்வரை

இத் தீச்செயலின் கறை

கழுவப்படவேமாட்டாது,” என்கிறார்

என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.

செபுனாவுக்கு வந்த கண்டனம்

15என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: அரண்மனைப் பொறுப்பாளனும் அதிகாரியுமாகிய செபுனாவிடம் சென்று நீ சொல்லவேண்டியது:

16‘நீ உனக்கென்று ஒரு கல்லறையை வெட்டியிருக்கிறாய்; உயர்ந்த இடத்தில் அக்கல்லறையை இருக்குமாறு அமைத்திருக்கிறாய்; பாறையில் உனக்கொரு தங்குமிடத்தைக் குடைந்துள்ளாயே? இங்கே உனக்கு யார் இருக்கிறார்கள்? இங்கே உனக்கு என்ன வேலை?

17ஓ மனிதா, ஆண்டவர் உன்னைத் தள்ளி விட்டுத் தூக்கி எறிவார்; உன்னைக் கெட்டியாய் மடக்கிப் பிடித்து,

18சுற்றிச் சுற்றி உன்னைச் சுழற்றி, பரந்து விரிந்த நாட்டிலே பந்தாடுவார். அங்கே நீ செத்துமடிவாய். உன் தலைவனின் குடும்பத்திற்கு இழுக்கானவனே, உன் மேன்மைமிகு தேர்ப் படைக்கும் அதே நிலைதான்.

19உன்னை உன் பதவியிலிருந்து இறக்கிவிடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன்.

20அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து,

21உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான்.

22அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்கமாட்டான்.

23உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்;

24ஆனால், அவன் தந்தை குடும்பத்தினராகிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சிறு கலயங்கள், கிண்ணங்கள் முதல், கலயங்கள், குடங்கள் வரையுள்ள அனைத்துக் கலங்களைப் போல் அவன்மேல் சுமையாக மாட்டித் தொங்கினர்.

25படைகளின் ஆண்டவர் உரைத்தது: அந்நாளில் உறுதியான இடத்தில் அடிக்கப்பட்ட முளை பெயர்ந்து முறிந்து கீழே விழும். அதில் தொங்கிய சுமையும் வீழ்ந்து அழியும், என்கிறார் ஆண்டவர்.


22:13 1 கொரி 15:32.
22:22 திவெ 3:7.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.