எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
நீதியுள்ள அரசர்
1இதோ, ஓர் அரசர் நேர்மையுடன்
அரசாள்வார்; தலைவர்களும்
நீதியோடு ஆட்சி செய்வர்;
2ஒவ்வொருவரும் காற்றுக்கு
ஒதுங்கிடமாகவும்
புயலுக்குப் புகலிடமாகவும்
வறண்ட நிலத்தில்
நீருள்ள கால்வாய் போலும்
காய்ந்த மண்ணில் பெரும் குன்றின்
நிழல் போலும் இருப்பர்.
3அப்பொழுது பார்வை உடையவரின்
கண்கள் மறைக்கபட்டிரா.
கேள்வியுடையவரின் செவிகள்
அடைக்கப்பட்டிரா.
4பதறும் நெஞ்சங்கள்
அறிவை உணர்ந்துகொள்ளும்;
திக்குவாயரின் வாய்
தயக்கமின்றித் தெளிவுடன் பேசும்.
5மூடர் இனிச்
சான்றோர் என அழைக்கப்படார்;
கயவர் இனிப்
பெரியோர் எனக்கருதப்படார்;
6ஏனெனில், மூடர்
மடமையாய்ப் பேசுகின்றனர்;
அவர்களின் மனம்
தீமை செய்யத் திட்டமிடும்;
அவர்களின் சிந்தை இறைப்பற்றின்றித்
தீச்செயல் செய்வதையே நாடும்;
அவர்கள் ஆண்டவரைப்பற்றித்
தவறாகவே பேசுவர்;
பசித்தோரின் பசி போக்கமாட்டார்;
தாகமுற்றோர்க்கு நீர் தர மறுப்பார்.
7கயவரின் நயவஞ்சகச் செயல்கள்
தீமையானவை;
வறியோர் வழக்கில் நீதி இருப்பினும்,
வஞ்சக வார்த்தைகளால்
ஏழைகளை அழிக்கும் தீங்கானவற்றை
அவர்கள் திட்டமிடுகின்றனர்.
8சான்றோர் உயர்வானவற்றைச்
சிந்திக்கின்றனர்;
அவர்கள் சான்றாண்மையில்
நிலைத்து நிற்பர்.
தண்டனைத் தீர்ப்பும் மீட்பும்
9பகட்டாக வாழும் பெண்களே, எழுந்து
என் குரலுக்குச் செவிகொடுங்கள்;
கவலையற்ற புதல்வியரே,
என் வார்த்தையைக் கேளுங்கள்.
10கவலையற்ற பெண்களே,
ஓராண்டும் சில நாள்களும் சென்றபின்
நீங்கள் நடுநடுங்குவீர்கள்.
ஏனெனில் திராட்சை அறுவடை அற்றுப்போகும்;
கனிகொய்யுங் காலம் இனி வராது.
11பகட்டாக வாழும் மங்கையரே,
அஞ்சி நடுங்குங்கள்;
கவலையற்ற மகளிரே, நடுநடுங்குங்கள்;
உடைகளை உரிந்து, களைந்து
இடையில் சாக்கு உடையைக்
கட்டிக் கொள்ளுங்கள்.
12செழுமையான வயல்களைக் குறித்தும்
வளமான திராட்சைத் தோட்டத்தை
முன்னிட்டும்
மாரடித்து ஓலமிட்டு அழுங்கள்.
13முட்களும் முட்புதர்களும்
ஓங்கி வளர்ந்துள்ள
என் மக்களின் நிலத்திற்காகவும்
களிப்புமிகு நகரில் உள்ள
மகிழ்ச்சி நிறை இல்லங்கள்
அனைத்திற்காகவும் அழுங்கள்.
14அரண்மனை பாழடையுமாறு விடப்படும்;
ஆரவாரமிக்க நகர் வெறுமையாகும்;
குன்றும் காவல் மாடமும்
என்றுமுள குகைகளாகும்;
அங்குக் காட்டுக் கழுதைகள்
களிப்படையும்; மந்தைகள் மேயும்.
15மீண்டும் உன்னதத்திலிருந்து
ஆவி நம்மேல் பொழியப்படும்;
பாலைநிலம் செழுமையான தோட்டமாகும்;
செழுமையான தோட்டம்
அடர்ந்த காடாகத் தோன்றும்.
16நீதி பாலைநிலத்தில் குடிகொண்டிருக்கும்;
நேர்மை வளமான வயல்களில் வாழும்.
17நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு;
நீதியால் விளைவன
என்றுமுள அமைதியும் நம்பிக்கையும்.
18என் மக்கள் அமைதி சூழ் வீடுகளிலும்
பாதுகாப்பான கூடாரங்களிலும்
தொல்லையற்ற தங்குமிடங்களிலும்
குடியிருப்பர்.
19ஆனால், காடு அழியக் கல்மழை பொழியும்;
நகரம் தாழ்நிலை அடைவது உறுதி.
20நீர்வளமிக்க இடங்களில் எல்லாம்
பயிர்செய்து
தாராளமாக மேயுமாறு, மாட்டையும் கழுதையையும் அவிழ்த்துவிடும்
நீங்கள் நற்பேறு பெற்றவர்கள்.