எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
எசாயாவின் அழைப்பு
1உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.
2அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.
3அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து:
“படைகளின் ஆண்டவர்
தூயவர், தூயவர், தூயவர்;
மண்ணுலகம் முழுவதும் அவரது
மாட்சியால் நிறைந்துள்ளது” என்று
உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்.
4கூறியவரின் குரல் ஒலியால்
வாயில் நிலைகளின் அடித்தளங்கள்
அசைந்தன;
கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.
5அப்பொழுது நான்: “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன்.
6அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார்.
7அதனால் என் வாயைத் தொட்டு, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது,” என்றார்.
8மேலும் “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்றேன்.
9அப்பொழுது அவர், “நீ இந்த மக்களை அணுகி, ‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள்; உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணராதிருங்கள்’ என்று சொல்.
10அவர்கள் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி இந்த மக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்; காதுகளை மந்தமாகச் செய்; கண்களை மூடச்செய்” என்றார்.
11அதற்கு நான், ‘என் தலைவரே!
எத்துணை காலத்திற்கு இது
இவ்வாறிருக்கும்?” என்று வினவினேன்.
அதற்கு அவர்,
“நகரங்கள் அழிந்து
குடியிருப்பார் இல்லாதனவாகும்;
வீடுகளில் வாழ்வதற்கு மனிதர் இரார்;
நாடு முற்றிலும் பாழ்நிலமாகும்;
12ஆண்டவர் மனிதர்களைத்
தொலை நாட்டிற்குத் துரத்தி விடுவார்;
நாட்டில் குடியிருப்பாரின்றி
வெற்றிடங்கள் பல தோன்றும்;
அதுவரைக்குமே இவ்வாறிருக்கும்.
13பத்தில் ஒரு பங்கு மட்டும்
நாட்டில் எஞ்சியிருந்தாலும்
அதுவும் அழிக்கப்படும்;
தேவதாரு அல்லது கருவாலி மரம்
வெட்டி வீழ்த்தப்பட்டபின்
அடிமரம் எஞ்சியிருப்பதுபோல்
அது இருக்கும்.
அந்த அடிமரம்தான்
தூய வித்தாகும்,” என்றார்.