எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
ஆண்டவரின் வாள்
1அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2மானிடா! உன் முகத்தை எருசலேம் நோக்கித் திருப்பி, திருத்தலங்களுக்கு எதிராக அரளுரையாற்றி, இஸ்ரயேல் மண்ணுக்கு எதிராக இறைவாக்குரை.
3இஸ்ரயேல் மண்ணுக்குச் சொல். ஆண்டவர் கூறுவது இதுவே. இதோ, நான் உனக்கு எதிராக எழுந்து, என் வாளை உறையினின்று உருவி, உன்னிலிருக்கும் நேரியவர்களையும், தீயவர்களையும் வெட்டி வீழ்த்துவேன்.
4உன்னிலிருக்கும் நேரியவரையும் தீயவரையும் நான் வெட்டி வீழ்த்தப் போவதால், தென்திசைமுதல் வடதிசை வரையுள்ள அனைவருக்கும் எதிராக என் வாள் உறையினின்று உருவப்படும்.
5ஆண்டவராகிய நானே என் வாளை உறையினின்று உருவியுள்ளேன். இனி அது மீண்டும் உறைக்குள் இடப்படாது என்பதை அனைவரும் அப்போது அறிந்து கொள்வர்.
6மானிடா! நீயோ பெருமூச்சுவிட்டு அழு; உடைந்த உள்ளத்தோடும் மனக்கசப்போடும் அவர்கள் கண்முன் பெருமூச்செறித்து அழு!
7‘ஏன் பெருமூச்செறிந்து அழுகிறாய்?’ என்று அவர்கள் உன்னைக் கேட்பார்கள். அப்போது நீ சொல்; வரப்போவதை நான் கேள்விப்பட்டிருப்பதால்தான் அது வரும்போது இதயமெல்லாம் உருகும்; கைகளெல்லாம் தளரும்; மனமெல்லாம் மயங்கும்; முழங்கால்களெல்லாம் நீரைப்போல் அலம்பும். இதோ அது வருகிறது. அது வந்தே தீரும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
பாபிலோன் மன்னனின் வாள்
8ஆண்டவரின் வாக்கு எனக்கு
அருளப்பட்டது.
9மானிடா!
இறைவாக்காகச் சொல்:
தலைவர் கூறுவது இதுவே;
ஒரு வாள்!
கூர்மையாக்கப்பட்டதும்
துலக்கப்பட்டதுமான வாள்!
10படுகொலை செய்வதற்கென
அது கூர்மையாக்கப்பட்டுள்ளது!
மின்னலென ஒளிர்வதற்கென
அது துலக்கப்பட்டுள்ளது!
நாம் மகிழ்ச்சி கொள்வோமா?
ஏனெனில், என் மக்கள்
எல்லா எச்சரிக்கைகளையும்
தண்டனைகளையும்
புறக்கணித்து விட்டனர்.
11கையில் பிடிப்பதற்காகவே அவ்வாள்
துலக்கி வைக்கப்பட்டுள்ளது;
கொலைஞனின் கரத்தில்
கொடுப்பதற்காகவே அவ்வாள்
கூர்மையாக்கப்பட்டுத்
துலக்கப்பட்டுள்ளது.
12மானிடா! நீ ஓலமிட்டு அலறு;
ஏனெனில், அது
என் மக்களை நோக்கியும்
இஸ்ரயேலின் தலைவர்கள்
அனைவரை நோக்கியும் வீசப்படும்;
என் மக்களுடன் அவர்கள் அனைவரும்
அவ்வாளுக்கு இரையாவர்.
ஆகையால் உன் மார்பிலே அறைந்து கொள்.
13உண்மையாகவே இது ஒரு சோதனை;
அவர்கள் மனமாற மறுத்தால்,
இவை அனைத்தும்
அவர்களுக்கு நிகழும், என்கிறார்
தலைவராகிய ஆண்டவர்.
14மானிடா! நீயோ இறைவாக்குரை;
கை கொட்டு;
இருமுறை, மும்முறை
வாள் வீசப்படட்டும்;
கொலைக்கான வாள் அது;
அவர்களைச் சூழ்ந்து வரும்
படுகொலைக்கான வாள் அது.
15அது இதயங்களைக்
கலங்கச் செய்யும்
; நான் வைத்துள்ள அவ்வாள்
ஒவ்வொரு நகர் வாயிலிலும்
பலரை வீழ்த்தும்.
ஆம், அது மின்னுவதற்காகச்
செய்யப்பட்டது;
கொலைக்காக கூர்மையாக்கப்பட்டது.
16“வலப்புறமும், இடப்புறமும்
உன் கூர்மையைக் காட்டு;
எத்திசையெல்லாம்
உன் முகம் திருப்பப்படுகிறதோ
அங்கெல்லாம் காட்டு;
17நானும் கை கொட்டிச்
சினம் தீர்த்துக்கொள்வேன்.
இதை உரைப்பவர்
ஆண்டவராகிய நானே.
18ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
19மானிடா! பாபிலோன் மன்னனின் வாள் வருவதற்கென்று நீ இரண்டு சாலைகள் அமை. அவ்விரண்டும் ஒரே நாட்டினின்று புறப்படவேண்டும். ஒரு கைகாட்டியைச் செய்து நகருக்குச் செல்லும் சாலையின் தொடக்கத்தில் நாட்டிவை.
20அம்மோனியரின் இராபாவுக்கும், யூதாவின் அரண்சூழ் எருசலேமுக்கும் வாள் செல்லும் வகையில் சாலை அமை.
21ஏனெனில் பாபிலோன் மன்னன் இரு சாலைகளும் பிரியும் சந்தியில் நிமித்தம் பார்ப்பதற்காக நிற்கிறான். அம்புகளை உலுக்கிப் போடுகிறான். குலதெய்வச் சிலைகளிடம் திருவுளம் கேட்கிறான்; ஈரலால் நிமித்தம் பார்க்கிறான்.
22அவனது வலக்கையில் எருசலேமுக்குப் போகும்படியான குறி விழுந்தது. அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும், கொலைக்கான ஓலத்தை எழுப்புவதற்கும், குரலை உயர்த்திப் போர்க் கூச்சலிடுவதற்கும், வாயில்களுக்கு நேராக அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும், மண்மேடு எழுப்பி முற்றுகை அரணைக் கட்டுவதற்குமான குறி விழுந்தது.
23ஆனால், ஏற்கெனவே, ஒப்பந்தம் செய்துகொண்டர்களின் பார்வையில் இதெல்லாம் பொய்க்குறியாகத் தோன்றுகிறது. ஆனால் அவர்களது குற்றம் மறக்கப்படாமல் அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவர்.
24எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; உங்கள் குற்றம் மறக்கப்படவில்லை. நீங்கள் இழைத்த தவறுகள் வெளியாக்கப்பட்டுள்ளன. உங்கள் செயல்கள் எல்லாவற்றிலும் உங்கள் பாவங்கள் காணப்படுகின்றன. இங்ஙனமே நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால் கைதிகளாய்ப் பிடிக்கப்படுவீர்கள்.
25இஸ்ரயேலின் தீட்டுப்பட்ட தீய தலைவனே, உனக்கு இறுதித் தண்டனைக்கெனக் குறிக்கப்பட்ட நாள் இதோ வந்துவிட்டது.
26தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் தலைப்பாகையை எடுத்துவிடு, மகுடத்தை அகற்றி விடு. இப்போதைய நிலை இனி தொடராது. தாழ்ந்தோர் உயர்வர். உயர்ந்தோர் தாழ்வர்.
27நான் தரவிருப்பது அழிவு, அழிவு, அழிவு. தண்டனைத் தீர்ப்பு வழங்குபவர் எவரோ அவர் வரும்வரை அது நடவாது. அவருக்கே அப்பொறுப்பை அளிப்பேன்.
ஒரு வாளும் அம்மோனியரும்
28நீயோ, மானிடா! இறைவாக்குரை. அம்மோனியரையும் அவர்களின் பழிப்புரையையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ வாள்! கொலை செய்வதற்காக வாள் உருவப்பட்டுள்ளது. மின்னலைப் போல் ஒளிர்ந்து, வெட்டி வீழ்த்துவதற்காக அது கூர்மையாக்கப்பட்டுள்ளது.
29உன்னைக் குறித்து வீணான காட்சிகள் கண்டு, பொய்யான குறிகள் சொன்னாலும், வெட்டப்படவிருக்கும் தீயோரின் பிடரியில் வாள் விழும். அந்த வாள் வந்து விட்டது. தண்டனை உச்ச நேரத்தை எட்டிவிட்டது.
30நீ, வாளைத் திரும்ப உறையிலே போடு. நீ படைக்கப்பட்ட ஊரில், நீ பிறந்த மண்ணில் நான் உன்னைத் தீர்ப்பிடுவேன்.
31என் ஆத்திரத்தை உன்மேல் கொட்டுவேன். என் சினத்தீயை உன்மேல் பொழிவேன். அழிப்பதில் வல்லவர்களான கொடியோரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன்.
32நீ தீக்கிரையாவாய். உன் இரத்தம் நாட்டினுள் சிந்திக் கிடக்கும். ஏனெனில் நீ நினைக்கப்படமாட்டாய். ஆண்டவராகிய நானே இதை உரைத்துள்ளேன்.