எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
எசேக்கியேலின் காட்சியில் எருசலேம்
(40:1-48:35)
1எங்கள் சிறையிருப்பின் இருபத்தைந்தாம் ஆண்டின் தொடக்கத்தில் மாதத்தின் பத்தாம் நாளில், எருசலேம் நகர் அழிக்கப்பட்டதன் பதினான்காம் ஆண்டு நிறைவுநாளில், ஆண்டவரின் ஆற்றல் என்மீது இறங்கியது. அவர் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.
2கடவுள் அருளிய காட்சியில் அவர் என்னை இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டு சென்று, அங்கே மிக உயர்ந்த மலையொன்றில் என்னை நிறுத்தினார். அதற்குத் தெற்கே ஒரு நகர் போன்ற கட்டடங்கள் காணப்பட்டன.
3அவர் அங்கே என்னை அழைத்துச் சென்றார். அங்கே மனிதர் ஒருவரைக் கண்டேன். அவரது தோற்றம் வெண்கலமயமாய் இருந்தது. அவர் நார்ப்பட்டுக் கயிறும் அளவுகோலும் கையில் வைத்துக் கொண்டு, வாயிலில் நின்று கொண்டிருந்தார்.
4அந்த மனிதர் என்னை நோக்கி, “மானிடா! உன் கண்களால் பார், அனைத்தையும் உன் இதயத்தில் பதியவை. ஏனெனில், இவற்றைப் பார்க்கும்படியே நீ இங்குக் கூட்டி வரப்பட்டாய். நீ காணும் யாவற்றையும் இஸ்ரயேல் வீட்டாரக்குத் தெரிவி” என்றார்.
கிழக்கு வாயில்
5கோவிலுக்கு வெளியில், அதனை முற்றிலும்சுற்றி, ஒரு மதில் இருக்கக் கண்டேன். அம்மனிதர் கையில் வைத்திருந்த அளவுகோல் ஆறு முழமும் நான்கு விரற்கடை நீளமும் கொண்டிருந்தது. அவர் அம்மதிலை அளந்தார். அதன் அகலம் ஒரு கோல்; உயரம் ஒரு கோல்.
6பின்னர் அவர் கிழக்கு நோக்கி இருக்கும் வாயிலுக்கு வந்து அதன் படிக்கட்டில் ஏறி, வாயிற்படியின் மேலிருந்து அளந்தார். அது ஒரு கோல் ஆழம் உடையதாய் இருந்தது.
7பக்க அறைகள் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமும் இருந்தன. அறைகளுக்கு இடையே ஐந்து முழ இடைவெளி இருந்தது. கோவிலை நோக்கிய மண்டபத்தின் அருகிலுள்ள வாயிற்படி ஒரு கோல் ஆழமுடையதாய் இருந்தது.
8பின்னர் அவர் கோவிலை நோக்கிய வாயிலின் முன்னிருந்த புகுமுக மண்டபத்தை அளந்தார்; அது ஒரு கோல் இருந்தது.
9பின்னர் அவர் புகுமுக மண்டபத்தை அளந்தார். அதன் அளவு எட்டு முழம்; அதன் புடைநிலை இரண்டு முழம்; இதுவே கோவிலை நோக்கிய வாயிலின் புகுமுகமண்டபம்.
10கிழக்கு வாயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று அறைகள் இருந்தன. மூன்றும் ஒரே அளவுடையனவாய் இருந்தன. ஒவ்வொரு பக்கத்தின் புடைநிலைகளும் ஒரே அளவையே கொண்டிருந்தன.
11பின்னர் அவர் நுழைவாயிலின் அகலத்தை அளந்தார். அது பத்து முழம் இருந்தது. அதன் நீளமோ பதின்மூன்று முழம்.
12ஒவ்வோர் அறைக்கு முன்னாலும் ஒரு முழ உயரமான ஒரு கைப்பிடிச் சுவர் இருந்தது. ஒவ்வோர் அறையும் ஆறு முழ சமசதுரம் கொண்டது.
13பின்னர் அவர் ஓர் அறையின் பின்பக்கச் சுவர் உச்சிலிருந்து நேர் எதிரே இருந்த அறையின் உச்சிவரை இடைப்பட்ட வாயிலை அளந்தார். ஒரு கதவு இன்னொரு கதவுக்கு நேரெதிராய் இருந்தது. இடைப்பட்ட தூரம் இருபத்தைந்து முழம்.
14அவர் புடைநிலைகளை அளந்தார். முற்றத்தை ஒட்டிய புகுமுக மண்டபம் வரையிலான அளவு அது. அவை அறுபது முழம் இருந்தன.
15வாயிலிருந்து புகுமுக மண்டபம் வரையிலான அளவு ஐம்பது முழம்.
16அறைகளுக்கும் வாயிலின் உள்ளிருந்த புடைநிலைகளுக்கும் குறுகிய பலகணிகள் சுற்றிலும் இருந்தன. புகுமுக மண்டபத்துக்கும் பலகணிகள் இருந்தன. சுற்றிலுமிருந்த பலகணிகள் உள்நோக்கி இருந்தன. புடைநிலைகளில் பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன.
வெளிமுற்றம்
17பின்னர் அவர் என்னை வெளிமுற்றத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார். அங்கே முற்றத்தைச் சுற்றி அறைகளும் நடைமேடைகளும் அமைக்கப்பெற்றிருந்தன. நடை மேடைகளைச் சுற்றி முப்பது அறைகள் இருந்தன.
18வாயிலின் பக்கத்தில் இருந்த நடைமேடை நீளமும் அகலமும் ஒரே அளவை உடையதாய் இருந்தது. இதுவே கீழ்த்தள நடைமேடை.
19பின்னர் அவர் கீழ்வாயிலின் உட்புறமிருந்து உள் முற்றத்தின் வெளிப்புறம்வரை அளந்தார். அது கிழக்கேயும் வடக்கேயும் நூறு முழம் இருந்தது.
வடக்கு வாயில்
20பின்னர் அவர் வெளிமுற்றத்தை நோக்கிய வடக்கு வாயிலின் நீள அகலங்களை அளந்தார்.
21ஒவ்வொரு பக்கமும் மூன்றாக இருந்த அறைகளும், புடைநிலைகளும் புகுமுக மண்டபமும் முந்தைய வாயிலைச் சுற்றியிருந்தவற்றின் அதே அளவுகளைக் கொண்டிருந்தன. அதாவது ஐம்பது முழம் நீளம், இருபத்தைந்து முழம் அகலம்.
22அதன் பலகணிகள், புகுமுக மண்டபம், பேரீச்சமர வடிவங்கள் யாவும் கிழக்கு நோக்கியவாயிலின் அருகிலிருந்தவற்றின் அதே அளவையே கொண்டிருந்தன. அதில் ஏறிப்போக ஏழு படிகள் இருந்தன. அவற்றின் எதிரில் புகுமுக மண்டபம் இருந்தது.
23கிழக்குப் பக்கம் இருந்ததுபோலவே வடக்கு வாயிலை நோக்கிய உள்முற்றத்திற்கு இன்னொரு வாயிலும் இருந்தது. ஒரு வாயிலிருந்து எதிர் வாயில்வரை அவர் அளந்தார். அது நூறு முழம் இருந்தது.
தெற்கு வாயில்
24பின்னர் அவர் என்னைத் தெற்குப் பக்கம் அழைத்துச் சென்றார். அங்குத் தெற்கு நோக்கிய வாயில் ஒன்று இருந்தது. அவர் அதன் புடைநிலைகளையும் மண்டபத்தையும் அளந்தார்; அவை மற்றவற்றின் அளவையே கொண்டிருந்தன.
25அதற்கும் முக மண்டபத்திற்கும், மற்றவற்றிற்குப் போலவே பலகணிகள் இருந்தன. அவை ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் கொண்டிருந்தன.
26அதற்கு ஏறிச்செல்ல ஏழு படிகள் இருந்தன. முன்பக்கம் புகுமுக மண்டபம் இருந்தது. அதன் இருபக்கமிருந்த புடைநிலைகளில் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன.
27உள் முற்றத்தில் தெற்கு நோக்கிய வாயில் ஒன்றும் இருந்தது. அவர் அவ்வாயிலிலிருந்து தெற்குப் புறமுள்ள வெளிவாயில்வரை அளந்தார். அது நூறு முழ நீளம் இருந்தது.
உள் முற்றம்-தென் வாயில்
28பின்னர் அவர் என்னைத் தெற்கு வாயில்வழியாக உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்று தெற்குவாயிலை அளந்தார். அதற்கும் மற்றவை போன்ற அளவுகளே இருந்தன.
29அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் யாவும் மற்றவை போன்ற அளவுகளையே கொண்டிருந்தன. வாயிலையும் புகுமுக மண்டபத்தினையும் சுற்றிலும் பலகணிகள் இருந்தன. அவை ஐம்பது முழம் உயரம், இருபத்தைந்து முழம் அகலம்.
30சுற்றிலுமிருந்து புகுமுக மண்டபங்களுக்கு நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
31அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கி இருந்தது. புடைநிலைகளில் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. அதற்கு வெளியே செல்ல எட்டுப் படிகள் இருந்தன.
உள்முற்றம்-கீழைவாயில்
32பின்னர் அவர் என்னைக் கிழக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று, அவ்வாயிலை அளந்தார். அதற்கும் மற்றைய அளவுகளே இருந்தன.
33அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் அனைத்திற்கும் மற்றவற்றுக்கான அளவுகளே இருந்தன. வாயிலையும் புகுமுக மண்டபத்தையும் சுற்றிப் பலகணிகள் இருந்தன. அவற்றின் நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
34அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. புடைநிலைகளில் இரு பக்கமும் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. மேலேறிச் செல்ல எட்டுப் படிகள் இருந்தன.
உள்முற்றம்-வடவாயில்
35பின்னர் அவர் என்னை வடக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று அதை அளந்தார். அதற்கும் மற்றவற்றிற்கான அளவுகளே இருந்தன.
36அதன் அறைகள், புடைநிலைகள், சுற்றிலுமிருந்த பலகணிகள் அனைத்திற்கும் ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் இருந்தன.
37அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. அதன் புடைநிலைகளில் இரு பக்கமும் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. அதற்கு ஏறிச்செல்ல எட்டுப் படிகள் இருந்தன.
38ஒவ்வோர் உள்வாயிலிலும் புகுமுக மண்டபத்தின் அருகில் வாயிலுடன் கூடிய அறை ஒன்று இருந்தது. அங்கே எரிபலிப் பொருள்களைக் கழுவுவர்.
39வாயிலருகே உள்ள புகுமுக மண்டபத்தில் ஒவ்வோரு பக்கமும் இரு மேசைகள் இருந்தன. அவற்றின்மேல் எரிபலி, பாவம் போக்கும் பலி, குற்றநீக்கப் பலி ஆகியவற்றிற்கான விலங்குகள் வெட்டப்படும்.
40வாயிலருகே உள்ள புகுமுக மண்டபத்தின் வெளிச் சுவரருகே வடக்கு வாயிலில் உள்ள படிகளின் ஒரு பக்கத்தில் இரு மேசைகளும் மறு பக்கத்தில் இரு மேசைகளும் இருந்தன.
41இவ்வாறு அங்கே பலிசெலுத்துவதற்கென நான்கு மேசைகள் உள்ளேயும் நான்கு மேசைகள் வாயிலுக்கு வெளியேயும், மொத்தம் எட்டு மேசைகள் இருந்தன.
42செதுக்கப்பட்ட கற்களில் எரிபலிக்கென மேலும் நான்கு மேசைகள் இருந்தன. அவை ஒன்றரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமும் ஒரு முழ உயரமும் கொண்டிருந்தன. அவற்றின் மேல் எரிபலி மற்றும் குற்ற நீக்கப்பலிக்கான விலங்குகளை வெட்டுவதற்குரிய கருவிகள் இருந்தன.
43சுவர்களைச் சுற்றிலும் ஒரு சாண் அளவுள்ள முளைகள் இருபக்கமும் பொருத்தப்பட்டிருந்தன. இறைச்சி மேசைகளின்மேல் வைக்கப்பட்டது.
44உள் வாயிலின் வெளியே உள்முற்றத்தில் இசைக்குழு அறைகள் இருந்தன. அவற்றுள் ஒன்று வடக்கு வாயிலின் பக்கத்தில் தெற்கு நோக்கியிருந்தது. இன்னொன்று கிழக்கு வாயிலின் பக்கத்தில வடக்கு நோக்கியிருந்தது.
45அவர் என்னிடம், “தெற்கு நோக்கியிருக்கும் அறை கோவில் பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது.
46வடக்கு நோக்கி இருக்கும் அறை பீடப்பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது. இவர்கள் சாதோக்கின் மக்கள். லேவியரில் இவர்கள் மட்டுமே ஆண்டவருக்குப் பணிபுரிய அவரருகில் செல்லலாம்” என்றார்.
உள்முற்றமும் கோவில் கட்டடமும்
47பின்னர் அவர் முற்றத்தை அளந்தார். அது நூறு முழ நீளமும் நூறு முழ அகலமும் கொண்டு சதுர வடிவில் இருந்தது. கோவிலுக்கு முன்பக்கம் பீடம் இருந்தது.
48அவர் என்னைக் கோவிலின் புகுமுக மண்டபத்திற்கு அழைத்து வந்து, அதன் புடைநிலைகளை அளந்தார். அது ஒரு பக்கம் ஐந்து முழமும் மறுபக்கம் ஐந்து முழமும் இருந்தது. வாயிலின் அகலம் பதினான்கு முழம்; அதன் புடைநிலைகள் ஒரு பக்கம் மூன்று முழம், மறுபக்கம் மூன்று முழம்.
49புகுமுக மண்டபம் இருபது முழ அகலமும் பதினொரு முழ நீளமும் கொண்டிருந்தது. அதற்கு ஏறிச் செல்லப் படிகள் இருந்தன. புடைநிலைகளில் ஒவ்வொரு பக்கமும் தூண்கள் இருந்தன.