எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1பின்னர் அவர் என்னைக் கோவிலின் கூடத்திற்கு அழைத்துச் சென்று அதன் புடைநிலைகளை அளந்தார். அவை ஒருபுறம் ஆறு முழ அகலமும் மறுபுறம் ஆறு முழ அகலமும் கொண்ட கூடார அளவுடையதாய் இருந்தது.
2வாயிலின் அகலம் பத்து முழம், வாயிலின் புடைநிலைகள் ஒவ்வொரு பக்கமும் ஐந்து முழம் இருந்தன. பின்பு அவர் கோவிலின் கூடத்தை அளந்தார். அது நாற்பது முழ நீளமும், இருபது முழ அகலமும் உடையதாயிருந்தது.
3பின்னர் அவர் உட்கூடத்திற்குப் போய், அதன் வாயிலின் புடைநிலைகளை அளந்தார். அவை ஒவ்வொன்றும் இரண்டு முழ அகலம் உடையதாயிருந்தன. வாயில் ஆறு முழ அகலம் உடையதாயிருந்தது. அதன் வெளிப் புடைநிலை ஒவ்வொரு பக்கமும் ஏழு முழ அகலம் கொண்டிருந்தது.
4அவர் உட்கூடத்தின் நீளத்தை அளந்தார். அது இருபது முழம், அதன் அகலம் வெளிக்கூட விளம்பு வரை இருபது முழமாக இருந்தது. அவர் என்னிடம், “இதுவே திருத்தூயகம்” என்றார்.
கோவில் சுவர்களுக்கு எதிரே அமைந்த அறைகள்
5பின்னர் அவர் கோவிற் சுவரை அளந்தார். அதன் அகலம் ஆறு முழம், கோவிலைச் சுற்றியுள்ள ஒவ்வோர் அறையும் நான்கு முழ அகலம் கொண்டிருந்தது.
6பக்கத்து அறைகள் ஒன்றன்மேல் ஒன்றாய் மூன்று அடுக்குகளாய் இருந்தன. ஒவ்வொரு அடுக்கிலும் முப்பது அறைகள் இருந்தன. இந்த அறைகள் கோவில் சுவர்மேல் ஊன்றியிராமல், இருபுறத்திலுமுள்ள சுற்றுக் கட்டுகளின் விளிம்பை ஆதாரமாகக் கொண்டிருந்தன.
7கோவிலைச் சுற்றியிருந்த பக்க அறைகள், அடுக்குகள் உயர உயர, அகலம் மிகுதியானவையாய் இருந்தன. கோவிலைச் சுற்றிய அமைப்பு மேலே போகப் போக அகலமானதாய்க் கட்டப்பட்டிருந்தது. அதனால் மேலே இருந்த அறைகள் தமக்குக் கீழே இருந்த அறைகளைவிட அகலம் கூடியனவாயிருந்தன. கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளம் வழியாக மேல்தளத்திற்கு ஒரு படிக்கட்டு இருந்தது.
8கோவிலைச் சுற்றிலும் அதன் தளமேடை உயர்ந்திருக்கக் கண்டேன். அதுவே பக்க அறைகளின் தளமேடையாகவும் இருந்தது. அது ஒரு கோலின் அளவாகிய ஆறு முழம் இருந்தது.
9பக்க அறைகளின் வெளிச்சுவர் ஐந்து முழ அகலம் உடையதாய் இருந்தது. ஆலயத்தின் பக்க அறைகளுக்கும்,
10குருக்களின் அறைக்கும் இடையிலுள்ள திறந்தவெளி இருபது முழமளவாய் கோவிலைச் சுற்றி இருந்தது.
11பக்க அறைகளுக்குத் திறந்த வெளியிலிருந்து வடக்குப் பக்கம் ஒன்றும் தெற்குப் பக்கம் ஒன்றுமாக இரு வாயில்கள் இருந்தன. திறந்த வெளியைத் தொட்ட தளமேடை எப்பக்கமும் ஐந்து முழம் அகலமுடையதாய் இருந்தது.
மேற்கே அமைந்த கட்டடம்
12மேற்குப் பக்கத்தில் கோவில் முற்றத்தை நோக்கிய கட்டடம் எழுபது முழ அகலம் கொண்டிருந்தது. கட்டடத்தின் சுவர் எப்பக்கமும் ஐந்து முழ அகலமும், தொண்ணூறு முழ நீளமும் கொண்டிருந்தது.
கோவிலின் வரையளவுகள்
13பின்னர் அவர் கோவிலை அளந்தார். அது நூறு முழம் நீளமுடையதாய் இருந்தது. கோவிலின் முற்றமும் சுவர்களோடு சேர்ந்து கட்டடமும் நூறு முழ நீளமுடையதாய் இருந்தன.
14கோவிலின் முகப்பும் அதன் கிழக்கு முற்றமும் நூறு முழ அகலமுடையனவாய் இருந்தன.
15பின்னர் அவர் கோவிலின் அருகிலிருந்த முற்றத்தை நோக்கிய கட்டடத்தை அதன் ஒவ்வொரு பக்கமுமிருந்த மேடை இருக்கையுடன் அளந்தார். அது வெளிக்கூடம், உட்கூடம், முற்றத்தை நோக்கிய புகுமுக மண்டபம் உட்பட நூறு முழமாய் இருந்தது.
கோவில் அமைப்பு விளக்கம்
16அவை மூன்றையும் சுற்றிய மேடை இருக்கைகள், வாயிற்படிகள், குறுகலான பலகணிகள், வாயிற்படிகளை உள்ளடக்கியதும் தாண்டியதுமான அனைத்தும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. தளத்திலிருந்து பலகணிவரை சுவர் முழுவதும் பலகணிகளும் மரத்தினால் வேயப்பட்டிருந்தன.
17வாயிலிலிருந்து உள்கூடம் வரையிலும் வெளியேயும் சுற்றிலுமிருந்த சுவர்களில் உள்ளேயும் வெளியேயும்
18கெருபுகள், பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன. ஒவ்வொரு கெருபையும் அடுத்து ஒரு பேரீச்ச மர வடிவம் அமைந்திருந்தது. ஒவ்வொரு கெருபுக்கும் இரு முகங்கள் இருந்தன.
19அவற்றுள் ஒன்று பேரீச்ச மரத்தை நோக்கிய மனித முகமாகவும், மற்றொன்று அடுத்த பேரீச்ச மரத்தை நோக்கிய சிங்க முகமாகவும் கோவில் முழுவதும் அமைந்திருந்தன.
20தளத்திலிருந்து வாயிலின் மேற்பகுதி வரை வெளிக்கூடச் சுவர்களில் கெருபுகள், பேரீச்ச மர வடிவங்கள் அமைந்திருந்தன.
21கோவில் கூடத்திற்கு நீள்சதுர வாயிற்கதவு இருந்தது; திருத்தூயகத்தின் முன்னும் அதுபோன்றே இருந்தது.
மரப் பலிமேடை
22அங்கே மூன்று முழ உயரமும் இரு முழ நீளமும் கொண்ட ஒரு பீடம் இருந்தது. அதன் முனைகளும் அடிப்பகுதியும் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. அந்த மனிதர் என்னிடம் ‘ஆண்டவரின் திருமுன்னிலை மேசை இதுவே’ என்றார்.
வாயிற்கதவுகள்
23கோவிற் கூடத்திற்கும், திருத்தூயகத்திற்கும் இரு வாயில்கள் இருந்தன.
24வாயில்கள் ஒவ்வொன்றுக்கும் இரட்டைக் கதவுகள் இருந்தன.
25கோவிற் கூடத்தின் கதவுகளில், சுவர்களில் அமைக்கப் பெற்றிருந்தது போலவே கெருபுகள், பேரீச்ச மரங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புகுமுக மண்டபத்தின் முன்னால் மரத்தினாலான விதானம் இருந்தது.
26புகுமுக மண்டபத்தின் பக்கச் சுவர்களில் குறுகலான பலகணிகளும், ஒவ்வொரு பக்கத்திலும் பேரீச்ச மர வடிவங்களும் இருந்தன. கோவிலின் பக்க அறைகளில் விதானங்கள் இருந்தன.