எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
முதலைக்கு ஒப்பான எகிப்திய மன்னன்
1பன்னிரண்டாம் ஆண்டில், மாதத்தின் முதல் நாளில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
2“மானிடா! எகிப்தின் மன்னன்
பார்வோனைக் குறித்து
இரங்கற்பா ஒன்று பாடி,
அவனிடம் சொல்;
நாடுகளிடையே உன்னை
ஒரு சிங்கம் என எண்ணுகின்றாய்!
ஆனால், நீ நீர்வாழ்
பெருவிலங்குபோல் இருக்கின்றாய்!
ஆற்றினைச் சேறாக்குகின்றாய்!
கால்களினால் நீரினைக்
கலக்குகின்றாய்!
ஆறுகளைக் குழப்புகின்றாய்.
3எனவே, தலைவராகிய ஆண்டவர்
இவ்வாறு கூறுகின்றார்;
மாபெரும் மக்கள் கூட்டத்தைக் கொண்டு
நான் என் வலையை
உன்மீது வீசுவேன்;
அவர்கள் என் வலையில்
உன்னை இழுத்துவருவர்.
4உன்னைத் தரையில்,
வெட்ட வெளியில், எறிந்து விடுவேன்;
வானத்துப் பறவைகள் அனைத்தும்
உன்மேல் வந்து அடையும்;
மண்ணுலகின் விலங்குகள் அனைத்தும்
உன்னை அடித்து விழுங்கும்.
5உன் சதையை
மலைகளின்மேல் வீசியெறிந்து,
பள்ளத்தாக்குகளை
உன் அழுகிய பிணத்தால் நிரப்புவேன்.
6வழிந்தோடும் உன் இரத்தத்தால்
மலைகள்வரை நிலத்தை நனைப்பேன்;
நீரோடைகள்
உன்னால் நிரம்பியிருக்கும்.
7நான் உன்னை
இல்லாமல் ஆக்கும்போது,
வானங்களை நான் மூடுவேன்;
அவற்றின் விண்மீன்களை
இருளச் செய்வேன்;
கதிரவனை மேகத்தால்
மறைத்திடுவேன்;
நிலாவும் அதன் ஒளியைக் கொடாது.
8வானத்தின் ஒளி விளக்குகள் எல்லாம்
உனக்கு இருண்டு போகச் செய்து,
உன் நாட்டின்மீது
இருள் கவியச் செய்வேன்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
9நீ அறியாத அன்னிய நாட்டினரிடையே நான் உனக்கு அழிவைக் கொண்டுவருகையில், பல மக்களினங்களின் இதயங்களை கலக்கமுறச் செய்வேன்.
10பல்வேறு மக்களினங்களை உன்னைக் குறித்துத் திகிலடையச் செய்வேன். நான் என் வாளை அவர்களின் மன்னர்கள்முன் வீசுகையில், உன்னைக் குறித்து அவர்கள் நடுக்கமுறுவர். நீ வீழ்ச்சியுறும் நாளில், அவர்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த உயிர் குறித்து நடுங்குவர்.
11ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; பாபிலோன் மன்னனின் வாள் உன்மீது பாயும்.
12மக்களினங்களில் மிகக் கொடியவரான வலியோரின் வாள்களினால் உன் படைத்திரளை வீழ்ச்சியுறச் செய்வேன். அவர்கள் எகிப்தின் பெருமையைக் குலைத்து அதன் மக்கள்திரளை அழிப்பர்.
13நீர்நிலைகளின் ஓரத்திலுள்ள அதன் கால்நடைகளை எல்லாம் நான் அழித்து விடுவேன். மனித காலடியோ குளம்போ அவற்றை இனிக் குழப்பாது.
14அப்போது நான் நீர்நிலைகளைத் தெளியச் செய்து, அவற்றின் ஆறுகளை எண்ணெய் போல் ஓடச்செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
15எகிப்திய நாட்டை நான் பாழாக்குவேன், அதன் நிலத்தினின்று, அதில் உள்ளது அனைத்தையும் பறித்திடுவேன்; அதில் வாழ்வோரை எல்லாம் அழித்திடுவேன். அப்போது, ‘நானே ஆண்டவர்’ என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.
16இது புலம்பிப் பாடப்படவிருக்கும் ஓர் இரங்கற்பா, நாடுகளின் புதல்வியர் இதனைப் பாடிடுவர். எகிப்தையும் அதன் அனைத்து மக்கள் திரளையும் குறித்துப் பாடிடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
இறந்தோர் உலகம்
17பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதத்தின் பதினைந்தாம் நாளில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
18மானிடா! எகிப்தின்
மக்கள் திரளைக் குறித்து நீ ஓலமிடு;
அதனையும் பெருமைமிகு
நாடுகளின் புதல்வியரையும்
படுகுழிக்குள் செல்கிறவர்களோடு
கீழுலகுக்கு அனுப்பிவை.
19“அழகில் நீ யாரைவிட மிகுந்தவள்?
நீ கீழிறங்கி,
விருத்தசேதனம் இல்லாரோடு கிட.”
20வாளால் கொல்லப்படுவோரோடு
எகிப்தின் மக்கள் வீழ்வர்.
இதோ! ஒரு வாள் அவர்களைக்
கொல்ல உருவப்பட்டுள்ளது.
21போரில் வலிமைமிக்கோர்
பாதாளத்தின் நடுவினின்று
எகிப்தியரையும்
துணையாளரையும் குறித்து
“விருத்தசேதனமில்லார்
வாளால் வெட்டுண்டுவர்களுடன்
கிடக்கின்றனரே” என்பர்.
22அதோ அசீரியா கிடக்கின்றாள்!
அவளுடன் அவளுடைய
மக்கள் கூட்டமைப்பினர்
அனைவரும் கிடக்கின்றனர்.
அவர்கள் அனைவரும்
வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே.
அவளைச் சுற்றி
கல்லறைகள் கிடக்கின்றன.
23அவர்களின் கல்லறைகள்
படுகுழியின் ஆழத்தில் அமைந்துள்ளன;
அவளுடைய மக்கள்
அவளின் கல்லறையைச்
சுற்றிக் கிடக்கின்றனர்.
அவர்கள் அனைவருமே
வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே;
வாழ்வோரின் நாட்டில்
அச்சத்தை உண்டாக்கியவர்கள்.
24அதோ, ஏலாம் கிடக்கின்றாள்!
அவளுடைய கல்லறையைச் சுற்றிலும்
அவளுடைய மக்கள் கூட்டத்தார்
கிடக்கின்றனர்.
அவர்கள் அனைவரும்
வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்கள்;
விருத்தசேதனமில்லாமல்
கீழுலகுக்குள் சென்றவர்கள்;
வாழ்வோரின் நாட்டில்
அச்சத்தை உண்டாக்கியவர்கள்.
படுகுழிக்குள் செல்வோருடன் சேர்ந்து
அவர்களும் தங்கள் மானக்கேட்டைச்
சுமக்கின்றார்கள்.
25வெட்டுண்டோர் நடுவே
அவளுடைய படுக்கை அமைந்துள்ளது.
அவளுடைய மக்கள் திரள்
அவளின் கல்லறையைச்
சுற்றிக் கிடக்கின்றன;
அவர்கள் அனைவரும்
விருத்தசேதனமில்லார்;
வாளால் வெட்டுண்டவர்கள்;
வாழ்வோரின் நாட்டில்
அச்சத்தை உண்டாக்கியவர்கள்.
அவர்கள் படுகுழிக்குச்
செல்வோருடன் சேர்ந்து
தங்கள் மானக்கேட்டைச் சுமந்து
வெட்டுண்டவர்களின் நடுவிலே
கிடக்கின்றார்கள்.
26அதோ! மெசேக்கும் தூபாலும்
கிடக்கின்றனர்!
அவர்களின் மக்கள் கூட்டத்தார்
அவர்களின் கல்லறைகளைச் சுற்றிக்
கிடக்கின்றனர்.
அவர்கள் அனைவரும்
விருத்தசேதனமில்லாதவர்கள்;
வாளால் வெட்டுண்டவர்கள்;
வாழ்வோரின் நாட்டில்
அச்சத்தை உண்டாக்கியவர்கள்.
27தங்கள் போர்க் கருவிகளுடன்
பாதாளத்தில் இறங்கித்
தங்கள் வாள்களைத்
தங்கள் தலைகளுக்கு அடியிலும்,
தங்கள் கேடயங்களைத்
தங்கள் எலும்புகள் மேலும்
வைத்துக்கொண்டு
இறந்துபோன பழங்கால வீரருடன்
அவர்கள் கிடக்கவில்லை;
ஏனெனில் அந்த வீரரைக் குறித்த அச்சம்
வாழ்வோரின் நாட்டில் பரவி இருந்தது.
28எனவே, நீங்கள் நொறுக்கப்பட்டு, விருத்தசேதனமில்லார் நடுவில் வாளால் வெட்டுண்டவர்களோடு கிடப்பீர்கள்.
29அதோ ஏதோமும் அவளுடைய மன்னர்களும், முதன்மைத் தலைவர்களும் கிடக்கின்றார்கள்! அவர்கள் எத்துணை வலிமை உடையவர்களாயிருந்தும் “வாளால் வெட்டுண்டவர்களோடு, விருத்தசேதனமில்லாது, படுகுழிக்குச் செல்வோருடன் கிடக்கின்றார்கள்.
30அதோ, வடநாட்டுத் தலைவர்கள் அனைவரும், எல்லாச் சீதோனியரும் கிடக்கின்றார்கள்; அவர்கள், வலிமையால் எவ்வளவோ அச்சம் விளைவத்தவர்களாயிருந்தும் மானக்கேட்டுக்கு உள்ளாகி, வெட்டுண்டவர்களோடு கீழே சென்றுள்ளார்கள். விருத்தசேதனமின்றி வாளால் வெட்டுண்டவர்களோடு அவர்கள் கிடக்கின்றார்கள்; படுகுழிக்குச் செல்வாரோடு தங்கள் மானக் கேட்டைச் சுமக்கின்றார்கள்.
31பார்வோனும் அவனுடைய படைத்திரளும் அவர்களைப் பார்த்து, வாளால் வெட்டுண்ட தம் மக்கள் கூட்டம் அனைத்துக்காகவும் தம்மைத் தேற்றிக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
32வாழ்வோரின் நாட்டில் அவன் அச்சத்தைப் பரவச் செய்ததால், பார்வோனும் அவனுடைய மக்கள் கூட்டத்தார் அனைவரும் விருத்தசேதனமில்லாது வாளால் வெட்டுண்டவர்களுடன் கிடப்பர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.