எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
திராட்சைக் கொடியின் உவமை
1ஆண்டவரின் வாக்கு எனக்கு
அருளப்பட்டது:
2மானிடா! காட்டிலிருக்கும்
எல்லா மரக்கிளைகளையும் விட
திராட்சைக் கொடி
எவ்வகையில் சிறந்தது?
3ஏதாவது வேலை செய்ய அதிலிருந்து
கட்டை எடுக்கப்படுகிறதா?
அல்லது ஏதாவது பாண்டம் தொங்கவிட
ஒரு முளையை அதிலிருந்து
செய்வார்களா?
4இதோ, அது நெருப்புக்கு
இரையாகப் போடப்படுகிறது;
அதன் இரு முனைகளையும்
நெருப்பு எரிக்கிறது;
அதன் நடுப்பகுதி கருகிப்போகிறது;
அது எந்த வேலைக்காவது பயன்படுமா?
5இதோ, அது
முழுமையாய் இருந்தபோதே
அதைக்கொண்டு ஒரு வேலையும்
செய்யமுடியவில்லை.
நெருப்பால் எரிந்து கருகிய அதை
எந்த வேலைக்காவது
பயன்படுத்த முடியுமா?
6ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; காட்டுத் தாவரங்களுள் ஒன்றான திராட்சைக் கொடியை நான் நெருப்புக்கு இரையாக அளித்தது போல், எருசலேமில் வாழ்வோரையும் கையளிப்பேன்.
7என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து தப்பிச் சென்றாலும், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். நான் என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்பும்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
8நான் நாட்டைப் பாழாக்குவேன். ஏனெனில், அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.