எசேக்கியல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
கழுகுகள் மற்றும் திராட்சைக்கொடி உவமை
1ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2மானிடா! இஸ்ரயேல் வீட்டாருக்கு விடுகதையின் வடிவில் உவமை ஒன்று கூறு.
3நீ சொல்; தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; “நீண்ட, பல வண்ண இறகுகள் கொண்ட பரந்த இறக்கைகளையுடைய பெரிய கழுகு ஒன்று லெபனோனுக்கு வந்து, கேதுரு மரம் ஒன்றின் உச்சியில் அமர்ந்தது.
4அது, அம்மரத்தின் உச்சிக்கொழுந்து ஒன்றைக் கொய்து, ஒரு வாணிப நாட்டிற்குக் கொண்டு வந்து, வணிகர் நகரொன்றில் அதை வைத்தது.
5பின் அந்நாட்டின் விதைகளில் ஒன்றை எடுத்துவந்து, வளமிகு வயலில் விதைத்து, அதன் நாற்றை நீர்மிகு நிலத்தில் கருத்தாய் நட்டது.
6அது துளிர்த்து தாழ்ந்து படரும் திராட்சைக் கொடியாயிற்று. “அதன் கிளைகள் அக்கழுகுக்கு நேர் மேலே வளர்ந்தன. வேர்களோ அதற்கு நேர் கீழே படர்ந்தன. இவ்வாறு அது திராட்சைக் கொடியாகி, கொப்புகளை விட்டுக் கிளைகளைப் பரப்பியது.
7ஆனால், பரந்த இறக்கைகளும் மிகுந்த இறகுகளும் கொண்ட வேறொரு கழுகும் இருந்தது. இந்தத் திராட்சைக் கொடி, நீர் பெறவேண்டி, தான் நடப்பட்டிருந்த நிலப்பரப்புக்கு அப்பால் இருந்த அக்கழுகை நோக்கித் தன் வேர்களை ஓடச்செய்து, தன் கிளைகளையும் அதன் பக்கமாய்த் திருப்பிற்று.
8கிளைபரப்பிக் கனிகொடுக்கும் சிறந்த ஒரு திராட்சைக் கொடியாய் விளங்கும் பொருட்டன்றோ செழிப்பு நிலத்தில் இது நடப்பட்டது!
9நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இது செழிக்குமா? இதனை வேரோடு பிடுங்கி இதன் பழக்குலைகளைக் கொய்து விட, துளிர்த்த இதன் இலைகளொல்லாம் வாடி வதங்க இது பட்டுப் போகாதா? இதனை வேரோடு பிடுங்கியெறிய மிகுந்த கைவன்மையோ, மக்கள் திரளோ வேண்டியதில்லை.
10இது வேறிடத்தில் நடப்பட்டாலும் செழிக்குமா? கீழைக்காற்று இதன்மேல் வீசும்போது இது முற்றிலும் வாடி விடாதா? இது முளைவிட்ட பாத்தியிலேயே உலர்ந்து போகுமே.
உவமையின் விளக்கம்
11ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
12அந்தக் கலக வீட்டாரிடம் நீ சொல்: “இவை யாவும் எதைக் குறிக்கின்றன என்று உங்களுக்குத் தெரியாதா? பாபிலோனின் மன்னன் எருசலேமுக்கு வந்து அதன் அரசனையும், அதன் உயர்குடி மக்களையும் சிறைப்பிடித்துப் பாபிலோனுக்குக் கொண்டு வந்துள்ளான்.
13பின்னர், அவன் அரச மரபில் தோன்றிய ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் உடன்படிக்கை செய்து, அவனிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டான். நாட்டின் தலைவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றான்.
14குடிமக்கள் கிளர்ந்தெழாமல் பணிந்திருப்பதற்காகவும் உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பதன்மூலமே அவர்கள் பிழைத்திருக்க இயலும் என்பதற்காகவும் அவன் இவ்வாறு செய்தான்.
15அந்த அரச மரபினன் அவனுக்கெதிராகக் கிளர்ந்து குதிரைகளையும் திரளான படையையும் தனக்குக் கொடுக்க வேண்டுமென்று எகிப்துக்குத் தூதர்களை அனுப்பினான். இவன் வெற்றி பெறமுடியுமா? இவன் தப்ப இயலுமா? உடன்படிக்கையை முறிக்கும் இத்தகையவன் தப்பவே முடியாது.
16தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் மேல் ஆணை! தன்னை அரசனாக்கிய மாமன்னனுக்கு அளித்த வாக்குறுதியைப் புறக்கணித்து, அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்த இவன், பாபிலோன் நகருக்குள்ளேயே சாவான்.
17மண்மேடு எழுப்பப்பட்டுக் கொத்தளம் கட்டப்பட்டு பலர் வீழ்த்தப்பட இருக்கும் நிலையில் பெரிய படையும் திரளான வீரரும் கொண்ட பார்வோன் இவனுக்குத் துணை செய்ய வரப்போவதில்லை.
18உடன்படிக்கையை முறிப்பதற்காக வாக்குறுதியை இவன் புறக்கணித்துள்ளான்; கைமேல் அடித்து வாக்களித்திருந்தும் இவ்வாறு செய்துள்ளான். இவன் தப்பவே முடியாது.
19எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; என்மேல் ஆணை! எனக்களித்திருந்த வாக்குறுதியை அவன் புறக்கணித்ததையும் என் உடன்படிக்கையை முறித்ததையும் அவன் தலை மேலேயே சுமத்துவேன்.
20நான் என் வலையை அவன்மீது வீச, அவன் என் கண்ணியில் சிக்குவான். நான் அவனைப் பாபிலோனுக்குக் கொண்டு வந்து, எனக்கெதிராய் அவன் செய்த துரோகத்துக்காக அங்கே அவனுக்குத் தீர்ப்பு வழங்குவேன்.
21அவனுடைய படைவீரர்களுள் அவனுடன் தப்பியோடிவரும் யாவரும் வாளால் வீழ்வர். எஞ்சியோர் எத்திக்கிலும் சிதறடிக்கப்படுவர். அப்போது இதை உரைத்தது ஆண்டவராகிய நானே என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
கடவுளின் நம்பிக்கை தரும் வாக்குறுதி
22தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலை மேல் நான் நடுவேன்.
23இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும்.
24ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும், பசுமையான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்; நான் செய்து காட்டுவேன்.