Home » Tamil » திருப்பாடல்கள் அதிகாரம் – 31 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 31 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

இறைவனின் நம்பிக்கை
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே, உம்மிடம் நான்

அடைக்கலம் புகுந்துள்ளேன்;

நான் ஒருபோதும்

வெட்கமடைய விடாதேயும்;

உமது நீதிக்கேற்ப

என்னை விடுவித்தருளும்;

2உம் செவிகளை

என் பக்கம் திருப்பியருளும்;

விரைவில் என்னை மீட்டருளும்;

எனக்கு அடைக்கலம் தரும்

கற்பாறையாய் இரும்;

என்னைப் பாதுகாக்கும்

வலிமை மிகு கோட்டையாய் இரும்.

3ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே;

உமது பெயரின் பொருட்டு

எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.

4அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள

வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்;

ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.

5உமது கையில்

என் உயிரை ஒப்படைகின்றேன்;

வாக்குப் பிறழாத இறைவனாகிய

ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர்.

6நானோ, பயனற்ற சிலைகளில்

பற்றுடையோரை வெறுத்து,

ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்.

7உமது பேரன்பில் நான் களிகூர்வேன்;

அக்களிப்பேன்;

என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்;

என் இக்கட்டுகளையும்

நீர் அறிந்துள்ளீர்.

8என் எதிரியின் கையில்

என்னை நீர் விட்டுவிடவில்லை;

அகன்ற இடத்தில்

காலூன்றி நிற்கவைத்தீர்.

9ஆண்டவரே, எனக்கு இரங்கும்;

ஏனெனில் நான்

இக்கட்டான நிலையில் உள்ளேன்;

துயரத்தால் என் கண்ணும் என் உயிரும்

என் உடலும் தளர்ந்து போயின.

10என் வாழ்க்கை

வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது;

ஆம், என் வாழ்நாள்

புலம்புவதிலேயே கழிகின்றது;

துயரத்தால் என் வலிமை

குறைந்து போகின்றது;

என் எலும்புகள் தளர்ந்து போகின்றன.

11என் பகைவர் அனைவரின்

இகழ்ச்சிக்கு உள்ளானேன்;

என்னை அடுத்திருப்போரின்

பேரிழிவுக்கு ஆளானேன்;

என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்;

என்னைத் தெருவில் பார்ப்போர்

என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர்.

12இறந்தோர் போல் நினைவினின்று

நான் அகற்றப்பட்டேன்;

உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன்.

13பலர் என்மீது பழிசுமத்தியது

என் காதில் விழுந்தது;

எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது.

அவர்கள் ஒன்றுகூடி

எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்;

என் உயிரைப் பறிக்கத்

திட்டம் தீட்டினார்கள்.

14ஆண்டவரே, நான் உம்மீது

நம்பிக்கை வைத்துள்ளேன்;

‛நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.

15என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும்

உமது கையில் உள்ளது;

என் எதிரிகளின் கையினின்றும்

என்னைத் துன்புறுத்துவோரின்

கையினின்றும் என்னை விடுவித்தருளும்.

16உமது முகத்தின் ஒளி

அடியேன் மீது வீசும்படி செய்யும்;

உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.

17ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்;

என்னை வெட்கமுற விடாதேயும்;

பொல்லார் வெட்கிப்போவார்களாக!

பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக!

18பொய்சொல்லும் வாய்

அடைபட்டுப் போவதாக!

செருக்கும் பழிப்புரையும் கொண்டு,

நேர்மையாளருக்கு எதிராக

இறுமாப்புடன் பேசும் நா
கட்டுண்டு கிடப்பதாக!

19உமக்கு அஞ்சி நடப்போர்க்கு

நீர் வைத்திருக்கும் நன்மை

எத்துணைப் பெரிது!

உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு

மானிடர் முன்னிலையில்

நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி!

20மனிதரின் சூழ்ச்சியினின்று

அவர்களைக் காப்பாற்றி

உமது முன்னிலையின்

மறைப்பினுள் வைத்துள்ளீர்!

நாவுகள் கிளப்பும் பூசலினின்று

அவர்களைப் பாதுகாத்து

உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்!

21ஆண்டவர் போற்றி! போற்றி!

ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில்,

அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில்

எனக்கு விளங்கச் செய்தார்.

22நானோ, கலக்கமுற்ற நிலையில்

‛உமது பார்வையினின்று

விலக்கப்பட்டேன்’ என்று

சொல்லிக் கொண்டேன்;

ஆனால், நான் உம்மிடம்

உதவிக்காக வேண்டினபோது,

நீர் என் கெஞ்சும் குரலுக்கு செவிசாய்த்தீர்.

23ஆண்டவரின் அடியார்களே,

அவரிடம் அன்பு கொள்ளுங்கள்;

ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப்

பாதுகாக்கின்றார்; ஆனால்,

இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர்

முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார்.

24ஆண்டவருக்காக

நம்பிக்கையுடன் காத்திருப்போரே,

நீங்கள் அனைவரும் உள்ளத்தில்

வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்.


31:5 லூக் 23:46.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.