சாலமோனின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
ஞானத்தை மதித்தல்
1எல்லா மனிதர்களையும்போல
நானும் இறப்புக்குரியவன்;
நிலத்தினின்று உண்டாக்கப்பட்ட
முதல் மனிதரின் வழித்தோன்றல்.
என் தாய் வயிற்றில்
என் உடல் உருவாயிற்று.
2ஆணின் உயிர்த்துளியினாலும்
திருமண இன்பத்தினாலும்
பத்து மாத காலமாகக்
குருதியோடு உறைந்து
என் உடல் உருவெடுத்தது.
3நான் பிறந்தபொழுது
எல்லாரையும்போல நானும்
வெறும் காற்றையே சுவாசித்தேன்;
என் உடலியல்புக்கு ஒத்த
மண்ணில் கிடத்தப்பட்டேன்;
முதன்முதலில் அழுகுரல் எழுப்பினேன்.
4துணிகளில் பொதியப்பட்டேன்;
பேணி வளர்க்கப்பட்டேன்.
5எந்த மன்னரும்
இதற்கு மாறுபட்ட வகையில்
வாழ்க்கையைத் தொடங்கியதில்லை.
6எல்லோரும் ஒரே வகையில்
பிறக்கின்றனர்;
ஒரே வகையில் இறக்கின்றனர்.
7எனவே நான் மன்றாடினேன்;
ஞானம் எனக்குக் கொடுக்கப் பட்டது.
நான் இறைவனை வேண்டினேன்;
ஞானத்தின் ஆவி
என்மீது பொழியப்பட்டது.
8செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக
அதை விரும்பித் தேர்ந்தேன்;
அதனோடு ஒப்பிடும்போது,
செல்வம் ஒன்றுமே இல்லை
என்று உணர்ந்தேன்.
9விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும்
அதற்கு ஈடில்லை;
அதனோடு ஒப்பிடும்போது,
பொன்னெல்லாம் சிறிதளவு
மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும்
களிமண்ணாகவே கருதப்படும்.
10உடல் நலத்திற்கும்
அழகிற்கும் மேலாக
அதன்மீது அன்புகொண்டேன்;
ஒளிக்கு மாற்றாக
அதைத் தேர்ந்தெடுத்தேன்.
ஏனெனில் அதன் சுடரொளி
என்றும் மங்காது.
11ஞானத்தோடு எல்லா நலன்களும்
என்னிடம் வந்து சேர்ந்தன.
அளவற்ற செல்வத்தை
அது ஏந்தி வந்தது.
12அவற்றிலெல்லாம் நான் மகிழ்ந்தேன்;
ஏனெனில் ஞானமே
அவற்றை வழி நடத்துகிறது;
அதுவே அவற்றையெல்லாம்
ஈன்றெடுத்தது என்பதை அறியாதிருந்தேன்.
13நான் கள்ளங்கபடின்றிக் கற்றேன்.
கற்றதை முறையீடின்றிப்
பிறரோடு பகிர்ந்து கொண்டேன்.
அதன் செல்வத்தை நான் மறைப்பதில்லை.
14மனிதர்களுக்கு அது என்றும்
குறையாத கருவூலம்.
அதை அடைவோர் கடவுளோடு
நட்புக்கொள்வர்;
நற்பயற்சி அளிக்கும்
கொடைகளால் நற்சான்று பெற்றவராவர்.
15கடவுளது திருவுளத்திற்கு
ஏற்பப் பேசவும்,
நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு
ஏற்பச் சிந்திக்கவும்,
கடவுள் எனக்கு அருள்புரிவாராக!
ஏனெனில் ஞானத்துக்கு
அவரே வழிகாட்டி,
ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே.
16நாமும் நம் சொற்களும் அவருடைய
கைகளில் இருக்கின்றோம்.
அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும்
அவருடைய கைகளில் உள்ளன.
17இருப்பவை பற்றிய உண்மையான அறிவை
எனக்கு அளித்தவர் அவரே;
உலகின் அமைப்பையும்
மூலப்பொருள்களின் செயல்பாட்டையும்
நான் அறியச் செய்தவரும் அவரே.
18காலங்களின் தொடக்கம், முடிவு, மையம்,
கதிரவனின் சுழற்சியால்
ஏற்படும் மாற்றங்கள்,
பருவ கால மாறுபாடுகள்,
19ஆண்டுகளின் சுழற்சிகள்,
விண்மீன்களின் நிலைக்களங்கள்,
20உயிரினங்களின் இயல்பு,
காட்டு விலங்குகளின் சீற்றம்,
காற்று வகைகளின் வலிமை,*
மனிதர்களின் எண்ணங்கள்,
பல்வேறு செடிவகைகள்,
வேர்களின் ஆற்றல்,
21இவைபோன்ற மறைவானவைபற்றியும்
வெளிப்படையானவைபற்றியும்
கற்றறிந்தேன்.
எல்லாவற்றையும் உருவாக்கிய
ஞானமே எனக்கு இவற்றைக்
கற்றுக்கொடுத்தது.
ஞானத்தின் இயல்பும் மேன்மையும்
22ஞானம் — ஆற்றல் கொண்டது.
அவ்வாற்றல் அறிவுடையது;
தூய்மையானது; தனித்தன்மை வாய்ந்தது;
பலவகைப்பட்டது; நுண்மையானது;
உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது;
மாசுபடாதது; வெளிப்படையானது
; கேடுறாதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது.
23ஞானம் — எதிர்க்கமுடியாதது;
நன்மை செய்வது;
மனிதநேயம் கொண்டது;
நிலைபெயராதது; உறுதியானது;
வீண்கவலை கொள்ளாதது;
எல்லாம் வல்லது;
எல்லாவற்றையும் பார்வையிடுவது;
அறிவும் தூய்மையும் நுண்மையும்
கொண்ட எல்லா உள்ளங்களையும்
ஊடுருவிச் செல்வது.
24ஞானம் — அசைவுகள் எல்லாவற்றையும்விட
மிக விரைவானது;
அதன் தூய்மையினால்
எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது;
எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.
25ஞானம் — கடவுளின் ஆற்றலிலிருந்து
புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின்
மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு.
எனவே மாசுபட்டது எதுவும்
அதனுள் நுழையமுடியாது.
26ஞானம் — என்றுமுள
ஒளியின் சுடர்;
கடவுளது செயல்திறனின்
கறைபடியாக் கண்ணாடி;
அவருடைய நன்மையின் சாயல்.
27ஞானம் — ஒன்றே என்றாலும்,
எல்லாம் செய்ய வல்லது;
தான் மாறாது,
அனைத்தையும் புதுப்பிக்கிறது;
தலைமுறைதோறும்
தூய ஆன்மாக்களில் நுழைகிறது;
அவர்களைக் கடவுளின்
நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள்
எனவும் ஆக்குகிறது.
28ஞானத்தோடு வாழ்கின்றவர்கள்மீது
அன்பு செலுத்துவது போல
வேறு எதன்மீதும் கடவுள்
அன்பு செலுத்துவதில்லை.
29ஞானம் — கதிரவனைவிட அழகானது;
விண்மீன் கூட்டத்திலும் சிறந்தது;
ஒளியைக் காட்டிலும் மேலானது.
30இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது.
ஆனால், ஞானத்தைத்
தீமை மேற்கொள்ளாது.