சாலமோனின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1 மன்னர்களே, நான் சொல்வதற்குச் செவிசாய்த்துப் புரிந்துகொள்ளுங்கள்; உலகின் கடையெல்லைவரை நீதி வழங்குவோரே, கற்றுக்கொள்ளுங்கள்.
2 திரளான மக்களை ஆள்வோரே, பல மக்களினங்களைப் பற்றிப் பெருமை பாராட்டுவோரே, எனக்குச் செவிசாயுங்கள்.
3 ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது; உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்தறிபவர்; உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே.
4 அவரது அரசின் பணியாளர்களாய் இருந்தும், நீங்கள் நேர்மையுடன் தீர்ப்பு வழங்கவில்லை; திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை; கடவுளின் திருவுளப்படி நடக்கவில்லை.
5 கொடுமையாகவும் விரைவாகவும் அவர் உங்கள்மேல் வருவார்; உயர் நிலையில் உள்ளவர்களுக்குக் கடும் தீர்ப்பு வழங்குவார்.
6 எளியோர்க்கு இரக்கங்காட்டி அவர்களைப் பொறுத்தருள்வார்; வலியோரை வன்மையாகத் தண்டிப்பார்.
7 அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சி நடுங்க மாட்டார்; உயர்ந்தோர்க்கென்று தனி மதிப்பு அளிக்கமாட்டார். ஏனெனில் பெரியோரையம் சிறியோரையம் படைத்தவர் அவரே; எல்லாரும் ஒன்றென எண்ணிக் காப்பவரும் அவரே.
8 அவர் வலியோரிடம் கண்டிப்பான கணக்குக் கேட்பார்.
9 எனவே, மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும், நெறிபிறழாது நடக்கவும், உங்களுக்கு நான் கூறுகிறேன்;
10 தூய்மையானவற்றைத் தூய்மையாய்க் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர்; தூய்மையானவற்றைக் கற்றுக்கொண்டார் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர்.
11 எனவே என் சொற்கள்மீது நாட்டங் கொள்ளுங்கள்; ஏக்கங் கொள்ளுங்கள். நீங்கள் அவற்றால் நற்பயிற்சி பெறுவீர்கள்.
12 ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர்.
13 தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்.
14 வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடையமாட்டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள்.
15 அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன்பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர்.
16 தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது; அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது; அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.
17 நற்பயிற்சி பெறுவதில் கொள்ளும் உண்மையான நாட்டமே ஞானத்தின் தொடக்கம்; நற்பயிற்சி மீது செலுத்தும் கவலையே ஞானத்தின் பால் கொள்ளும் அன்பு.
18 ஞானத்தின் மீது அன்பு செலுத்துவது அதன் சட்டங்களைக் கடைப்பிடிப்பதாகம்; சட்டங்களைக் கடைப்பிடிப்பது அழியாமைக்கு உறுதி தரும்.
19 அழியாமை ஒருவரைக் கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.
20 ஞானத்தின்மீதுள்ள ஆர்வம் ஒருவரை அரசுரிமைக்கு வழி நடத்துகிறது.
21 நாடுகளை ஆளும் மன்னர்களே, உங்களுடைய அரியணையிலும் செங்கோலிலும் நீங்கள் மகிழ்ச்;சி அடைய விரும்பினால், எப்பொழுதும் ஞானத்தை மதியுங்கள்; அப்பொழுது என்றென்றும் ஆட்சிபுரிவீர்கள்.
22 ஞானம் என்றால் என்ன, அது எவ்வாறு உண்டானது என உங்களுக்கு விரித்துரைப்பேன்; மறைபொருள்களை உங்களிடமிருந்து மறைக்க மாட்டேன்; அதன் படைப்புக்காலம் தொட்டு அதனை ஆராய்ந்து பார்ப்பேன்; அதைப்பற்றிய அறிவை வெளிப்படுத்துவேன்; உண்மையை நழுவவிடமாட்டேன்.
23 நோயாம் பொறாமையோடு தோழமை கொள்ளமாட்டேன். ஏனெனில் பொறாமை ஞானத்துடன் உறவு கொள்வதில்லை.
24 ஞானிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே உலகின் மீட்பு அமையும். அறிவுள்ள மன்னர் தம் குடிமக்களின் நிலைக்களனாய் இருக்கின்றார்.
25 எனவே என் சொற்களால் நற்பயிற்சி பெறுங்கள். அதனால் உங்களுக்கு நற்பயன் விளையும்.
எஸ்தர் (கிரேக்கம்) சீராக்கின் ஞானம் பாரூக்கு
Visit Catholic Gallery Main Site
Related Articles